மண்ணின் குரல்: பெப்ரவரி 2016:மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 






மாங்குளம் தமிழி கல்வெட்டுக்கள்

தமிழகச் சிற்பிகளும் கல்வெட்டுக் கலைஞர்களும் தமிழ் மண்ணில் விட்டுச் சென்றிருக்கும் சான்றுகள் தமிழ் தொடர்பான ஆய்வுகளுக்கு மிக முக்கியமானவையாகத் திகழ்பவை. கி.மு 6 என்ற கால நிலையிலேயே கல்வெட்டு பொறிக்கும் திறன் பெற்றோராகத் தமிழர் தொழிற்கலை அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கு இது சான்றாக அமைவது  என்பதோடு இக்காலத்திற்கு முன்பே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது பேச்சு, வடிவம், இலக்கணம் என்ற வகையில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு மிக நல்ல சான்றாகவும் அமைகின்றது.

கி.மு.5ம் நூற்றாண்டு வாக்கில் மதுரை  நகரைச் சுற்றியுள்ள குன்றுகளில்  பல சமண முனிவர்கள் தங்கியிருந்தமைக்கானச் சான்றுகளை  இன்றும் பாறைகளில் உள்ள படுக்கைகள், தொல் தமிழ் எழுத்துக்கள் என்பனவற்றிலிருந்து அறியமுடிகின்றது.  இம்முனிவர்களை அச்சயமம் பாண்டி நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆதரித்து, இவர்கள் தங்கவும் பள்ளிகள் அமைத்து கல்விச்சேவை புரியவும் உதவி இருக்கின்றனர்.  பொருள் வளம் மிக்க வணிகப்பெருமக்களும்  சமண முனிவர்கள் குன்றுகளின் பாறைப்பகுதிகளில் தங்கியிருக்க  வசதியை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய செய்திகளை இப்பாறைகளில் வடிக்கப்பட்டுள்ள தொல் தமிழ் எழுத்துக்களின் வழி அறிந்து  கொள்ள முடிகின்றது.

மாங்குளம், மதுரையிலிருந்து ஏறக்குறைய 20கிமீ.தூரத்தில் இருக்கும் ஊர். ரோவர்ட் சீவல் என்பவர் தாம் 1882ம் ஆண்டில் இங்கிருக்கும் மாங்குளம் கல்வெட்டுக்களைக் கண்டறிந்தவர் என்ற சிறப்பினைப் பெறுபவர். கல்லில் பொறித்த எழுத்துக்களைப் பார்த்து இவை என்ன குறியீடுகளோ என்று அவர் யோசித்திருக்கக்கூடும். ஆயினும் இவை என்ன எழுத்துக்கள் என்பது கடந்த நூற்றாண்டில் தான் உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கிடைக்கக்கூடிய சமண நெறி சார்ந்த  கல்வெட்டுக்களிலேயே இந்த மாங்குளம் கல்வெட்டுக்கள் தாம் மிகப்பழமையானவை என்ற சிறப்பைப் பெறுபவை.

இம்மலையில் ஐந்து குகைப்பகுதிகள் உள்ளன. சற்றே தூரத்தில் இடைவெளி விட்டு இவை அமைந்திருக்கின்றன. கற்படுக்கைகள்  உள்ள பகுதிகளில்  மழை நீர் வடிய உருவாக்கப்படும் காடி வெட்டப்பட்டுள்ளது. அதன் கீழே அல்லது அருகாமையில் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன. 

நெடுஞ்செழியன் என்ற சங்ககால பாண்டிய மன்னனின் பெயர் இங்குள்ள கல்வெட்டுக்களில் இருமுறை குறிப்பிடப்படுகின்றன.  அதோடு செழியன், வழுதி என்ற பாண்டிய குடிப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்குள்ள கல்வெட்டுக்கள்:

1.
கணிய் நந்தஅ ஸிரிய்இ குவ் அன்கேதம்மம் இத்தாஅ
நெடுஞ்செழியன் பண அன் கடல் அன் வழுத்திப்
கொட்டு பித்தஅ பளிஇய்

2. 
கணிய் நத்திய் கொடிய் அவன்

3. 
கணிய் நந்தஸிரிய் குஅன்தமம் ஈதா நெடுஞ்செழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇயபளிய்

4.
கணி இ நதஸிரிய்குவ(ன்) வெள் அறைய் நிகமது காவிதிஇய்
காழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன்

5.
சந்தரிதன் கொடுபிதோன்

6.
வெள்அறை நிகமதோர் கொடி ஓர்

(குறிப்பு: பாண்டிய நாட்டு வரலாற்று மைய வெளியீடான  மாமதுரை (ஆசிரியர்கள்- பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம்) என்ற நூலில் உள்ள குறிப்பு மேலே வழங்கப்பட்டுள்ளன.)


தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத எழுத்தும் கலந்த நிலையில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்தின் சிறப்பு எனச் சொல்லப்படும்  எழுத்து வெட்டப்பட்ட பழமையான கல்வெட்டு இவைதாம் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றே. 

இப்பகுதியில் 2007ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் செங்கற்களினால் உருவாக்கப்பட்ட கட்டிட கட்டுமானப் பகுதி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில்  கூறைகளுடன் கூடிய அமைப்பாக இது உருவாக்கப்பட்டமை அறியப்பட்டது. கூறைகளுக்கு இடையே மரத்துளைகள் உருவாக்கி அதனை மரச்சட்டங்களை வைத்து இணைத்து இரும்பினால் ஆன ஆணியை கொண்டு இணைத்து இக்கூறைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்கு கிடைத்த வெவேறு அளவிலான பழங்கால ஆணிகள் இதனை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த மாங்குளம் கல்வெட்டுப் பகுதி இன்று தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் சின்னமாக இருக்கின்றது. மேலே பாறைக்குச் செல்லும் பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் படுக்கைகள் இருக்கும் பகுதிகளில் இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் பெயர்களை எழுதி,இப்புராதனச் சின்னங்களை சிதைத்து வருகின்றனர் என்பது வேதனைக்குறிய விடயம். 
அருகாமையில் இருக்கும் குடியானவர்களின் ஆடுகள் இப்பகுதியில் மேய்வதால் ஆட்டுப்புழுக்கைகள் நடைபாதையெங்கும் நிறைந்து கிடக்கின்றன.

இப்பகுதியை  சுத்தம் செய்து பாதுகாக்கும் முயற்சி மிக அவசியம்.


ஏறக்குறைய 20 நிமிடப்  பதிவு இது. மிக விரிவாக டாக்டர்.சொ.சொக்கலிங்கம் அவர்கள் மாங்குளம் கல்வெட்டுக்களின் காலம், அதன் சிறப்புக்கள் ஆய்வுகள் என தகவல்கள் வழங்குகின்றார்.

இந்த மாங்குளம் தமிழ் கல்வெட்டுக்கள்  பதிவை செய்ய உதவிய நண்பர்கள் மதுமிதா, டாக்டர்.மலர்விழி மங்கை, டாக்டர்.ரேணுகா, டாக்டர்.சொ.சாந்தலிங்கம் ஆகியோருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.


விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/02/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=2uH2fyvkLlo&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!










































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


THF Announcement: E-books update:31/1/2016 *சுதந்திரத்தின் தேவைகள் யாவை

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் அரசியல் வரலாற்று நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா


நூல் குறிப்பு: 
212 பக்கங்கள் கொண்ட இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. 
முதல் பகுதியில் தேசிய தத்துவமும், 2ம் பகுதியில் ஜனநாயக தத்துவமும், 3ம் பகுதியில் வாழ்க்கைத்தத்துவமும் அலசப்படுகின்றன.
சீன சிந்தனையாளர் சன் யாட் சென்னின் சொற்பொழிவுகளை முதன் மொழியில் இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து கொணர்ந்த பெருமை தமிழ் மொழிக்கே உண்டு. இதனைச் செய்தவர் வெ.சாமிநாத சர்மா அவர்கள்.
ஒரு ஏழை விவசாயி குடும்பத்து மகனான சன் யாட் சென்,  சீன மக்களுக்கு நல்வாழ்வு வரவேண்டி மஞ்சூ ஆதிக்கத்தை எதிர்த்து 18 ஆண்டுகள் போராடியவர். இறுதியில் போராட்டத்தில் வெற்றி கண்டார்.  1912ம் ஆண்டு சீன குடியரசு அமைந்தது. அதன்  முதல் பிரசிடெண்ட் ஆனார். பல முன்னேற்ற நடவடிக்கைகளை சீனாவில் ஏற்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இந்த நூலில் உள்ளவை சன் யாட் சென்னின் சொற்பொழிவுகளின் தமிழாக்கமே.

அரசியல் சித்தாந்ததை விரும்பும் வாச்கர்கள் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 443

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 4 ஜனவரி 2016

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

காலாண்டு இதழாக ​கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.

இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.



​இதழை வாசிக்க!​


இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது வேளாண்மையும் நீர் வள மேலாண்மையும்  என்பதாகும்.


நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​


THF Announcement: E-books update: 22/11/2015 *யதி ஆச்சாரம் - ஓலைச்சுவடி வெளியீடு*

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:யதி ஆச்சாரம்
காலம்: அனேகமாக 9ம் நூற்றாண்டு

சுவடி நூல் குறிப்பு: 
சமண முனிவர்களின் ஒழுக்கம், இல்லறத்தார் ஒழுக்கம் என்பது பற்றி விரிவாகக் கூறும் நூல். 311 ஓலைகளைக் கொண்டது. ஓலைகளின் இரு பக்கமும் எழுதப்பட்டுள்ளன.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 442

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: முனைவர்.இரா.பானுகுமார், பெங்களூரு
மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷினி

இவர்கள் அனைவருக்கும் நம் நன்றி!

குறிப்பு: நூலின் பக்கங்கள் மிகச் சிறிய அளவில் குறைக்கப்பட்டு நூலாக்கி இருக்கின்றேன். இதனை சுவடி வாசிக்கும் பணி  ஆரம்பிக்கும் போது என்னிடம் இருக்கும் அசல் பக்கங்களை ஆய்வில் பயன்படுத்த என்ணியுள்ளேன். 

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


மண்ணின் குரல்: நவம்பர் 2015: சீகன்பால்கின் தமிழ் ஆவணங்கள் - டாக்டர். டேனியல் ஜெயராஜ்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



தரங்கம்பாடி எனும் பெயரைக் கேட்டால் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் பற்றியும் அதன் தொடர்பில் 18ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகம் வந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களைப் பற்றிய சிந்தனையும் தோன்றும்.

ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த லூத்தரன் பாதிரிமார்களில் சீகன்பால்க் தனிச் சிறப்பு பெறுபவர். இவரது ஆவணங்களை ஆய்வு செய்தவரும் ஜெர்மனியின் ஹாலெ நிறுவனத்தில் உள்ள தமிழ் நூல்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் காட்டலோகிங் செய்தவருமான டாக்டர். டேனியல் ஜெயராஜின் பேட்டி இது.

இப்பேட்டியில் டாக்டர்.டேனியல் ஜெயராஜ் அவர்கள் சீகன்பால்க் தமிழ் கற்ற விதம், அவரது தமிழ் மொழி பயற்சிக்கு உதவிய தமிழ் மக்கள், அவரது கையெழுத்து ஆவணங்கள், அவற்றைப் பற்றிய இவரது ஆய்வுகளும் நூல்களும் என்ற வகையில் விரிவான விளக்கத்தை வழங்குகின்றார்.

இதில் முkகியமாக சீகன்பால்கின் Genealogy of Malabarian Gods  நூலின் உள்ளடக்கம், அவை பற்றிய விளக்கம், சீகன்பால்க் தயாரித்த இலக்கண நூல்கள் ஆகியன பற்றியும், அவை தொடர்பாக தான் எழுதியிருக்கும் 13 நூல்களைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.

டாக்டர். டேனியல் ஜெயராஜ் தற்சமயம் இங்கிலாந்தின் லிவர்ப்பூல் நகரில் உள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மத தத்துவத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.


ஐரோப்பாவில் கோப்பன்ஹாகனின் ஆர்க்கைவிலும், ஜெர்மனியின் ஹாலே ப்ராங்கன் நிறுவனத்திலும் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்து ஆவணங்களை ஆராய்ச்சி செய்வ்தன் மூலம் இன்றைக்கு ஏறக்குரைய 300 ஆண்டுகளுக்கு முந்தய தமிழக சமூஅக் சூழலையும் மொழியியல் சூழலையும் நன்கு அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கமாக அமைவது இவ்வகை ஆய்வுகள் பல்கலைக்கழகங்களாலும் அரசினாலும் முன்னெடுத்து செய்யப்பட வேண்டும் என்பதே. அயல்நாடுகளில் இருக்கும் தமிழ் நிலத்தின் வரலாறு சொல்லும் தரவுகளை மின்னாக்கம் செய்வதும் அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி ஆய்வு மாணவர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து அவற்றை பதிப்பிக்க வைத்து சீரிய ஆய்வினைத் தொடங்க வேண்டியதும் காலத்தின் அவசியம். இத்துறைகளில்  ஆய்வுகள் பெருக தமிழக அரசும் பல்கலைக்கழகங்கலும் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை இந்த வெளியீட்டின் வழி தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கின்றது.

ஏறக்குறைய 20 நிமிடப்  பதிவு இது.

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2015/11/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=h6YGU6jOd3U&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


கொரியாவின் மகாராணி ஒரு தமிழ் இளவரசி

0 மறுமொழிகள்



THF Announcement: E-books update: 08/11/2015 *திருக்குடந்தைத் தல வரலாறு*

2 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:திருக்குடந்தைத் தல வரலாறு
நூல் பதிப்பு: என்.ராஜகோபால் அய்யங்காரால் பதிப்பக்கப்பெற்று வெளியிடப்பெற்றது.

நூல் குறிப்பு: 
ஆலயம் பற்றிய பல தகவல்களை வழங்கும் நூல்.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 441

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES