"சதாவதானி" செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

0 மறுமொழிகள்

"ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதன் - சீரிய
செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!"

எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார்.

"வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!" என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர், நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும் ஊரில் பக்கீர்மீறான் ஆமீனா தம்பதியர்க்கு மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல் பிறந்தார்.

"தொட்டனைத்தூறும் மணற்கேணி," என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றெடுத்தது. சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்ற பாவலர், இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் இராமலிங்க அடிகளாரின் அருட்பாவை ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர். இதனை அறிந்த பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார். அதற்கான கூட்டம் சென்னையில் ஏற்பாடாயிற்று. அக்கூட்டத்தில் தொடக்கமாக,

"சாதிகுலம் சமயமெல்லாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு வமுதளித்த தணித் தலைமைப் பொருளே,
ஆதிநடு கடைகாட்டா அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம் மற்றனைத்து நின்ற மொழியே,
ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம் உருவுறச் செய்யுறவே,
ஜோதிமயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!"

இப்பாடலை முழங்கினார். கேட்ட அவையோர் இவருடைய சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து கையொலி எழுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து பல அரங்குகளில் தமது வாதத் திறமையால் "அருட்பா அருட்பாவே" என்று நிறுவினார்.



த.மு.சா. காஜா முகைதீன்


மரபுப் பாவளம் மிக்க பாவலர் சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார். தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை, அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி வேண்டினார். அப்பொழுது,

"சிரமாறுடையான் செழுமா வடியைத்,
திரமா நினைவார் சிரமே பணிவார்,
பரமா தரவா பருகாருருகார்,
வரமா தவமே மலிவார் பொலிவார்."

என்னும் பாடலைப்பாடி,
சிரம் ஆறுடையான் - சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,
சிரம்மாறு உடையான் - இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,
சிரம் ஆறுடையான் - ஆறுதலைகளை உடைய முருகன்,
சிரம் "ஆறு" உடையான் - திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால்,
சிரம் ஆறு உடையான் - தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்
என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார். இக்கவிச் சுவையில் "ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ," என்ற திருவாசகத் தேனையும், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்ற திருமந்திரச் சத்தையும் பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!

அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது. ஒருமுறை மதுரைச் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர், தமிழ் விருந்துண்டு மகிழ கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர்,
இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார்,
கந்தசாமிக் கவிராயர்
ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர். அங்குப் பாவலரும் வருகை தந்து அமர்ந்தார்.

பாவலரின் நினைவுக் கலையின் பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது. ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர் ஏதேனும் புராண நூலில் ஏழுமுறை "நோக்க" என்ற சொல் வந்துள்ள பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க, பாவலர்,

"கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர்,
கடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர்,
எதிராத் தரத்தை நோக்குவர், அவையினில் அபுஜகில் - உடனே
உரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை."
என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு அவர் தந்த இலக்கியச் செல்வங்கள் மரபுப் பாவளம் மலிந்தவை. "முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்," என்பதற்கு எடுத்துக்காட்டானவை.

நபிகள்நாயக மான்மிய மஞ்சரி,
கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி,
திருநாகூர் திரிபந்தாதி,
நீதிவெண்பா,
சம்சுதாசீன் கோவை, மற்றும்
தனிப்பாடல் திரட்டு
முதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.

பாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர். அறிஞர் அவையிலும், மாணவர் மத்தியிலும் நீதிகளை உணர்த்தி வந்தார். அந்த நீதிகளே அவரிடம் வெண்பாக்களாக மலர்ந்தன.
அறியாமையை அகற்றுவது கல்வி;
அறிவை நன்நெறிக்குத் திருத்துவது கல்வி;
இறையருளைப் பெருக்கி ஆன்மிக இன்பத்தை அளிப்பது கல்வி,
அதனை,

"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெருளை
அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம்,
பொருத்துவதும் கல்வியென்றே போற்று."என்பதும்,

திருவள்ளுவர் கூறிய
கூடாஒழுக்கம்,
கூடாநட்பு,
சிற்றினம் சேராமை
என்ற சீரிய நன்நெறியை,

"கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம்,
நாடாதெரிந் தேனும் நட்பொழிக -ஆடுமயில்
பச்சோந்தி பாற்படா பட்டால் மணிவிழிகள்
அச்சோ அழிந்தொழியு மால்."
என்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன. அவர் எழுதிய "சீட்டுக் கவிகள்" இலக்கியத்தரம் வாய்ந்தவை. பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது, கோட்டாற்றிலிருந்து தம் நண்பர் பாக்கியம் பண்டாரம் என்பவருக்கு விடுத்த சீட்டுக் கவியில்,


"ஆகஞ் சுகமா? அடுத்தவர்கள் சேமமா?
மேகம் வழங்கியதா? மேலுமிந்தப்-போகம்
விளையுமா? இன்னுமழை வேண்டுமா? செல்வம் விளையுமா? ஊர்செழிக்கு மா?"

என்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள பாவலர், தம் முன்னாள் மாணவர் ஒருவருக்கு எழுதிய சீட்டுக்கவி இது:

"கற்றுவரும் பெரும்தொழிலைக் கனவிடையும்
மறவாமல் கருத்தும் கொண்டு
முற்றுறவே ஆய்ந்துணர்ந்து முடித்த வந்நூல்
ஏது, இனிநீ முடிக்கப் போகும்
கொற்றமுறு நூலேது? மேல்விளங்கு
நூலென்ன? குணம தாக
வெற்றிதரும் இலக்கணங்கள் ஏதேனும்
பயின்றனையோ விள்ளு வாயே!"

இது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும். பாட்டுகள்.

பலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார்.

நபிகள் நாயக ஜீவிய சரித்திரம்,
சீறா நாடகம்,
தேவலோகத்துக் கிரிமினல் கேசு,
வேதாந்த விகார கிரிமினல் கேசு என்பன இவருடைய உரைநடை நூல்களாகும்.

தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950 பிப்ரவரி 13ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இவர் மறைவுச் செய்தி அறிந்து பண்டிதமணி கதிரேசச் செட்டியார் "நாஞ்சில் நாட்டின் பெரும்புலவரும், தமிழன்னையின் திருப்புதல்வரும் மறைந்தது கேட்டு துயருறுகிறேன்," என்றார். இரசிகமணி டி.கே.சி. "பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும் இந்தத் தலைமுறையில் யாருக்கும் இருந்ததில்லை," என்றார்.


நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மறுமொழிகள்

0 comments to ""சதாவதானி" செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES