இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின் படியும் புதிய முறைகளின் படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலகட்டத்தில் வாழ்ந்தபோதும் கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது. வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்.
தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
தினமும் கேட்பது என் செவிப்பெருமை
என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்ட கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார்.
1922 இல்,
"மனோன்மணியம் மறுபிறப்பு" கட்டுரை வழியே திறனாய்வாளராக,
சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக,
கம்பராமாயணம் திவாகரம்,
நவநீதப் பாட்டியல்
முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்தவராக,
"காந்தளூர்ச்சாலை" பற்றிய ஆய்வு நூலாசிரியராக
எனப் பல முனைகளிலிருந்தும் தன்னுடைய ஆளுமையை வெளிக் காட்டியவர்.
வையாபுரிப்பிள்ளை,
இராஜாஜி,
என்.எஸ்.கிருஷ்ணன்
டி.கே. சண்முகம்
போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர்.
இந்த நூற்றாண்டில் பாரதி என்கிற பெரிய ஆளுமை மறைத்த சிறிய ஆளுமைகளில் கவிமணியும் ஒருவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பது புலனாகிறது. பாரதியைப் போன்றே கவிமணியும்
பக்திப் பாடல்கள்,
இலக்கியம் பற்றிய பாடல்கள்,
வரலாற்று நோக்குடைய கவிதைகள்,
குழந்தைப் பாடல்கள்,
இயற்கைப் பாட்டுக்கள்,
வாழ்வியல் போராட்ட கவிதைகள்,
சமூகப் பாட்டுக்கள்,
தேசியப் பாட்டுக்கள்,
வாழ்த்துப் பாக்கள்,
கையறு நிலைக் கவிதைகள்,
பல்சுவைப் பாக்கள்...
என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பாரதிக்கு ஒப்பாக எட்வின் அர்னால்டின் "ஆசிய ஜோதி"யைத் தமிழில் தழுவி எழுதியும், பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதியும் தமிழிலக்கியச் சாளரத்தின் வழியாக பிற நாட்டுக் காற்று உள்ளே வர அனுமதியளித்தவர் கவிமணி. பாரதியாரைப் போலவே இவரும் தமிழ் மக்களிடையே வழங்கி வரும் சில நாட்டுப் பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்தி "தீண்டாதோர் விண்ணப்பம்" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். ஆயினும் அக்காலகட்ட தேசிய, தமிழ்த் தேசிய விவரணைகளில் நம் கவிமணிக்குக் கொடுத்திருக்கும் இடம் வெகு குறைவானதே.
அக்காலகட்டத்தின் சமூகக் கொடுமைகளுக்கும், அன்னியரின் அடிமைத்தனத்திற்கும் எதிரான கவிமணியின் பாடல்களில் தீர்க்கமான முற்போக்குப் பார்வையாளராக அவரை இனங் காண முடிகிறது.
"கண்ணப்பன் பூசை கொளும்
கடவுளர் திருக்கோவிலிலே
நண்ணக் கூடாதோ நாங்கள்
நடையில் வரல் ஆகாதோ."
என்று தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதைப் பற்றி சைவப்பிள்ளை ஆச்சார மரபிலிருந்து கொண்டு சிந்தித்தவர். இவரது "மருமக்கள் வழி மான்மியம்" என்ற நூலின் மூலம் நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கையில் அம்முறை ஒழியப் பாடுபட்டவர்.
"அல்லும் பகலும் உழைப்பவர் ஆர் - உள்ளத்து
அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?
கல்லும் கனியும் கசிந்துருகித்- தெய்வ
கற்பனை வேண்டித் தொழுபவர் ஆர்?"
எனப் பாடியதன் மூலம் அவர் காலத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். சுதந்திர வேட்கை தீயாய்க் கொழுந்து விட்டுக் கொண்டிருந்த காலத்தில் காந்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து சமாதானத்தை வலியுறுத்தியவர். காந்தியின் கொள்கையான மதுவிலக்கு குறித்து,
"கள்ள ரக்கா! குலத்தோடு நீ
கப்ப லேறத் தாமதம் ஏன்?
வள்ளல் எங்கள் காந்தி மகான்
வாக்கு முற்றும் பலித்ததினி."
என்று உற்சாகமாய்ப் பாடுகிறார். இந்தியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியவர். இரண்டாம் உலகப் போரினால் மக்கள் அடைந்த துயரை;
"போரில் எழுந்த பஞ்சம் - பாரத
பூமியைத் தாக்குதைய்யா
நேருங் கொடுமை யெல்லாம் - நினைக்க
நெஞ்சு துடிக்குதைய்யா."
என்ற பாடலின் மூலம் விளக்குகிறார். இதுவரையிலான தமிழ் ஆளுமைகளில் குழந்தைகளின் பிரபஞ்சத்தில் சுதந்திரமாய் நுழைந்து உலவியர் கவிமணி ஒருவரே. குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இனி யாராலும் எழுதிவிட முடியாது என்பதை நிறுவியவர். "ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் குழந்தைப் பாடல்களில்லையே என்று நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் சில பாடல்களை எழுதினேன்," என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்துக் கவிமணி சொல்கிறார். அவர் சொன்னதுபடியே தன் வாழ்வில் பெரும் பகுதியைக் குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்காகவே செலவிட்டவர்.
"தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக்குட்டி
அம்மா... என்றது
வெள்ளைப்பசு- உடன்
அண்டையில் ஓடுது
கன்றுக்குட்டி."
போன்ற எளிமையான வருணனைகள் அடங்கிய வரிகளின் வழி குழந்தைகளின் உலகில் சிநேகிதமாய்ச் சஞ்சரித்தவர். எளிமையான பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு அறிவு புகட்டவும் செய்தார். தான் கண்ட மெய்ம்மையான காந்தியத்தை;
"கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில்
கொட்டை நூற்கும் பணி செய்வதை இம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
மாமதி யோங்கி வளருதம்மா."
என்கிற இயற்கை வர்ணனையோடு ஒட்டி குழந்தைகளுக்குப் புரிய வைத்தவர். பல்வேறு உத்தி முறைகளில் பாடி குழந்தைப் பாடல்களைப் பல்வேறு தளத்திற்கும் பரவச் செய்தவர் கவிமணி.
தேசம், மொழி, மக்கள், உலகம் என பெரும் வட்டத்தைத் தன் பாடல்களுக்குள் அடக்கி சத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவர். அவர் மறைந்து கிட்டத்தட்ட 46 வருடங்கள் (செப்டம்பர் 26) ஆகிவிட்ட பிறகும், அவருடைய பணிகள் கல்வியாளர் மட்டத்தைத் தவிர்த்து பெரும்பான்மையான மக்களுக்குச் சென்று சேரவில்லை. எந்த ஒரு காலகட்டத்திலும் பல்வேறு குரல்கள் ஒலிக்கும். ஆனால் தொடர்பு ஊடகங்களும், கல்வித் துறையில் முதன்மை நிலையிலிருப்பவர்களும் தங்களுடைய சுய இலாபத்திற்காக ஒரு சில குரல்களை மட்டும் முன் வைத்துப் பிரச்சாரம் செய்ய முற்படுகின்றனர்.
அவர்கள் பிரச்சாரம் செய்து முன்னிறுத்தும் ஒற்றைக் குரல் மற்ற குரலின் ஆகிருதிகளையெல்லாம் மறைத்து விடுகின்றது. அப்படி மறைக்கப்பட்ட, முன்னிறுத்தப்படாத குரலில் ஒன்று கவிமணியின் குரல். கவிமணியை வெறும் குழந்தை இலக்கியக் கவிஞனாக மட்டுமே அடையாளம் காட்டும் போக்கும் நிகழ்ந்தேறியுள்ளது. ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு உண்மைக் கலைஞன் மக்களின் மனதில் நிலைத்துக் கொண்டுதானிருப்பான் என்பதற்கு சாட்சி இந்தக் கட்டுரை....
சரவணன்
நன்றி: ஆறாம்திணை
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "பெரிய ஆளுமையும் சிறிய ஆளுமையும்!"
Post a Comment