செவி வழிப்புகுந்து, சிந்தையில் உறைந்த பாடகர் அமரர் மகாவித்வான் டாக்டர் செம்மங்குடி சீனிவாசய்யர். இன்று(25/07/2008) அவரது 100வது பிறந்தநாள்.
2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மறைந்த அந்த மேதை, இன்னும் 5 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்திருப்பாரானால் "வேத நூற்பிராயம் நூறு" என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய பாசுர வரியின்படி 100 வது வயதைத் தொட்டுச் சாதனை படைத்திருப்பார்.
எட்டாம் வயதிலேயே வாய்ப்பாட்டில் நாட்டம் கொண்ட அவர், 9 வது வயதில் தனது தமையனார் வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடம் முதலில் பயிற்சி பெற்றார்.
பின்னர் திருவிடைமருதூர் கோட்டு வாத்திய வல்லுநர் சகாராம் ராவிடம் பயிற்சி பெற்றார். 1920 ஆம் ஆண்டு மகாவித்வான் உமையாள்புரம் சாமிநாதய்யரிடம் குருகுலவாசம் செய்தார்.
திருவிடைமருதூரில் பயின்றுவந்த காலத்தில் பிரபல நாகஸ்வர அறிஞர்களின் வாசிப்பைக் கேட்டும், மதுரை புஷ்பவனம், பிடில் கோவிந்தசாமி பிள்ளை போன்ற பெரும் கலைஞர்களின் சங்கீத ஆளுகைகளைக் கேட்டும் அப்படியே அவர்கள் வழங்கிய நுட்பங்களை தம்குரல் வழியில் பாடும் இலாகவத்தைப் பெறலானார்.
கும்பகோணம் வந்தபோது, தம் தமயனாரான வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடமே தொடர்ந்து கற்கலானார். இந்தக் காலகட்டத்தில் அன்றாடம் எட்டுமணி நேரம் சாதகம் செய்த வித்வான் அவர்.
நாராயணஸ்வாமி ஐயரிடம் பயில்வதற்குத் தடைகள் ஏற்படவே மனோதர்ம மன்னர் மகாராஜபுரம் விஸ்வநாதய்யரிடம் பயிற்சிபெற ஏற்பாடானது. அந்த நேரத்தில் தான் இவருக்குக் குரலில் குளறுபடி தலைதூக்கி, தொல்லையும், இடைஞ்சலும் தந்தது. இதைத் தமது அபாரமான சாதக பலத்தால் சமாளித்து. சாரீரத்தைப் பொங்கிப்பாயும் பிரவாகம் போல் மாற்றிக் கொண்டு விட்டார்.
நாகஸ்வர பாணியில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர். அமரர் திருவாவடுதுறை நாகஸ்வர சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளையை "இராக ரத்தினம்" என்று சொல்லி, ஏற்றிப் புகழ்ந்து போற்றியவர். இந்த வாத்தியத்திலிருந்து எழுந்துவரும் அனைத்து அழகு வடிவங்களையும் அப்படியே கவர்ந்து தமது சாரீரத்தின் வழியாக வெளியிட்ட சாதகி அவர்.
இராகங்கள் நமது கர்நாடக இசையில் தனிச்சிறப்புக் கொண்டவை.
கரகரப்ரியா,
சண்முகப்ரியா,
காம்போதி,
தோடி,
பைரவி
போன்ற இராகங்களை நாகஸ்வர மேதைகள் எப்படி எப்படி எல்லாம் கற்பனைகள் பொழிந்து, மணிக்கணக்கில் ஜோடிப்பார்களோ அதை விடவும் மேலாக அந்த இராகங்களை ஈடற்ற கற்பனைகளோடும், இணையற்ற ஜோடனைகளோடும் ஆலாபித்து இரசிகர்களை மெய்மறக்கச் செய்த கலைஞர் அவர்.
நீராடும் நேரமாயிருந்தாலும் சரி, உணவு கொள்ளும் வேளையானாலும் சரி ஏதாவது ஒரு இராகத்தைத் துவக்கி ஆலாபிக்க ஆரம்பிப்பார். கையில் எடுத்த உணவுக்கவளம் அப்படியே இருக்கும்! இதைக் கண்ணாரக் கண்டவன் நான். சாப்பிடும்போதும் இவருக்கு ஒரு சிறு "சதஸ்" வேண்டும்!
எனவே, இராகம் பாடுவதில் கைதேர்ந்த மாபெரும் கலைஞர் என மதிக்கப்பட்ட டாக்டர் செம்மங்குடியை "இராகசுரபி" என்று குறிப்பிடுவதே பொருத்தம். இவர் பாடாத இசைக்கூடமே இல்லை.
வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயர்,
கோட்டு வாத்திய சிகாமணி சகாராம் ராவ்,
மனோதர்ம ஜோதி மகாராஜபுரம் விஸ்வநாதய்யர்,
ஞானச்சுடர் உமையாள்புரம் சாமிநாதய்யர்
ஆகியோரிடம் எல்லாம் குருகுலவாசம் செய்திருந்த போதிலும் காயக சிகாமணி "அரியக்குடி" இராமானுஜ ஐயங்காரையே தமது மானசீக குருவாகப் போற்றி வந்தவர்.
"அரியக்குடி"யின் பாட்டு அசைந்தும் ஒசிந்தும் இயங்கும் ஒரு அழகிய தேருக்கு (இரதம்) இணையானது.
கச்சேரிகளை,
அடிப்பகுதி,
நடுப்பகுதி,
தலைப்பகுதி
என்று மூன்று கட்டங்களாக வகுத்து, ஜோடித்துப்பாடி, மேடைக் கச்சேரிகளுக்கே ஒரு மோஸ்தரை அமைத்து அளித்த ஒரு அபூர்வப்பிறவி இவர் என்று கூறி நெகிழ்ந்து மகிழ்ந்தவர்.
"நான் மறுபிறவி எடுத்தால் அப்போதாவது "அரியக்குடி" ஐயங்கார் மாதிரி பாட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நீயும் எனக்காகப் பகவானை நேர்ந்துகொள்!" என என்னிடம் ஒரு தடவை கூறி, தமது உள்ளக்கிடக்கையை வெளியிட்டவர்.
தாமே கைராட்டையில் நூல்நூற்று காந்தி மகான் கட்டளைப்படி கதராடைகளை அணிந்து வந்தவர். இசையில் மூன்று ஸ்தாயிகள் போல அவரிடம்,
குருபக்தி,
தெய்வபக்தி,
தேசபக்தி
மூன்றும் இடம் பெற்றிருந்தன.
திருவாங்கூர் மன்னர் குடும்பத் தொடர்பு பெற்றிருந்த அவர், ஆஸ்தான வித்வானாகி, பின்னர் ஸ்வாதித்திருநாள் இசைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் பிரபல இசைக்கலைஞர்களை எல்லாம் வரவழைத்து அவர்களை மன்னர் குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி, தக்க சன்மானங்களையும், மரியாதையும் அளிக்கச் செய்து கெளரவித்தார்.
மகாகவி பாரதியார் பாடல்களைக் கச்சேரிகளில் பெருமெடுப்பில் கணிசமாக வழங்கி, களைபெறச் செய்தவர்களில் "செம்மங்குடி"க்கே முதலிடம் தரவேண்டும்.
மகாராஜா சுவாதித் திருநாள் கீர்த்தனைகள்,
சதாசிவ பிரும்மேந்திரரின் பக்திரசப் பாடல்கள்,
அஷ்படதி, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி
ஆகிய படைப்புகளுக்கு நவநவமான மெட்டுகள் அமைத்து, ஸ்வரப்படுத்தி, "சுதேசமித்திரன்" செய்தி ஆசிரியராக இருந்த அடியேனிடம் பிரசுரத்துக்குத் தந்து உதவிய பெருந்தகை இவர்.
இவை யாவும் 1933 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டுவரை சுமார் 70 ஆண்டுகள் நான் அவரிடம் கொண்டிருந்த பழைய நினைவுகள். "செம்மங்குடி" வென்ற விருதுகள், பட்டங்கள், கெளரவங்கள் இவற்றின் பட்டியல் மிக நீண்டதாகும். மிகப்பெரிய இரசிகர் வட்டத்தைப் பெற்றிருந்தவர் என்றால் மிகையேயல்ல!
பத்திரிகைகளிடமும், பத்திரிகையாளரிடமும் நிறைந்த பரிவு கொண்டிருந்தவர். சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டட நிதியுதவிக்காக ஏற்பாடான கச்சேரி வரிசையில் முதலிடம் பெற்றுப்பாட சென்னைக்குத் தன் சொந்தச் செலவில் வருகை புரிந்தார். பயணச் செலவுக்காக அவருக்கு அளித்த பணத்தைக்கூட பத்திரிகையாளர் கட்டட நிதியிலேயே சேர்க்கும்படி என்னிடம் சொல்லிவிட்டார்.
நீலம் - கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்
நன்றி: தினமணி
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
செம்மங்குடியின் பேட்டி காண இங்கே சொடுக்குக!
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to ""இராகசுரபி" செம்மங்குடி"
Post a Comment