"வீரமுரசு" சுப்பிரமணிய சிவா

0 மறுமொழிகள்

நாற்பத்தொன்று ஆண்டு கால வாழ்க்கையில் (1884-1925), பத்தொன்பது ஆண்டுகள் "வீரமுரசு" சிவாவின் பொதுவாழ்க்கை அமைந்தது. இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் பத்தாண்டுகள் சிறை வாழ்க்கையில் கழிந்தன. எஞ்சிய ஆண்டுகளில்,
ஓயாத அரசியல் சுற்றுப் பயணங்கள்,
கிளர்ச்சிகள்,
பத்திரிகைப் பணிகள் முதலானவற்றுடன்
தமிழ்ப் பணியிலும்
தடம் பதித்தவர் சிவா.

அவரே ஓர் இயக்கமாக விளங்கினார்.
அரசியல்,
ஆன்மிக,
சமூக,
தொழிலாளர் இயக்கம்
எனப் பல்வேறு இயக்கங்களை சிவா முன்னின்று நடத்தினார். இவற்றுள் அவர் தமிழ் இயக்கமாகச் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது, அவருடைய மறைந்த நினைவு நாளாக ஜூலை 23-ல் இதனை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தத்தக்கது.

"ஸ்வதந்திரானந்தன்" எனும் புனைப் பெயரை வைத்துக் கொண்ட சிவா, தமது எழுத்துப் பணியின் நோக்கத்தை "எனது பிரார்த்தனை" எனும் பாடலில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"வெளியில் வந்தேன் - விடுதலையடைந்து
களியில் மனிதனைக்- கண்ணால் கண்டேன்
வறுமை, வியாதி, மரணம், பஞ்சம்
சிறுமை யிவற்றால் - சீர் அழிகின்
தமிழராம் மக்களைத் தட்டியெழுப்பி
அமிழ்தாம் ஞான - ஆனந்தமூட்டி
வீரம், ஆண்மை - வெற்றி பெருமை
தீரம் முதலாம் - தேக புகுத்தி
சிறந்தோரென்றே - சீரியர் செப்ப
அறந்தான் செய்ய - அன்புடன் முயன்று
பத்திரிகை புத்தகம் - பல வழியாக
உரிமை வேண்டி - உரிமை வேண்டி
இரவும் பகலும் - எழுதியெழுதி
வரவும் என்கை வலிக்குது ஐயோ?"
இப்பாடல் "தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வின் "தேசபக்தன்" நாளிதழின் 1918-ம் ஆண்டு மலரில் வெளிவந்தது.

தேசியச் செம்மல் வ.உ.சி.யுடன் 3.2.1908 முதல் இணைந்து மேடைத்தமிழை வளர்த்தார் சிவா.

"பிரசங்க மாரி பெய்தனன் நஞ்சிவம் நரசிங்க மென்றிடக் கர்சித்து நின்றே!" என்று சிவாவின் மேடைத்தமிழைப் பாராட்டியுள்ளார் வ.உ.சி.

பத்திரிகைத் துறையில் சிவா வளர்த்தத் தமிழ், சமூகம், ஆன்மிகம், தமிழ்ப்பற்று முதலான நோக்குகளில் விரிவான ஆய்விற்குரியது.
ஞானபானு,
பிரபஞ்சமித்திரன்,
இந்திய தேசாந்திரி
எனும் இதழ்களில் அவருடைய பத்திரிகைத் தமிழ் வளர்ச்சிப் பணி தொடர்ந்தது.

"ஞானபானு" அவரால் 1913 ஏப்ரல் மாத இதழாகத் தொடக்கம் பெற்றது. பொறுப்புத் தொகை கட்டக்கூடப் பணவசதி இல்லாமல் வறுமையில் வாடிய நிலையில் தொடங்கிய "ஞானபானு"வை நான்கு ஆண்டுகள் நடத்தினார் சிவா. தாம் எழுதியதோடல்லாமல்,
பாரதியார்,
வ.வே.சு.ஐயர்,
வ.உ.சி.,
மகேசகுமார் சர்மா,
வ.ரா
முதலான தமிழ்ச் சான்றோர்களையும் ஞானபானுவில் எழுதவைத்தார்.

தமிழ் வளர்ச்சிக்கான கருத்துப் போருக்கு "ஞானபானு"வில் களம் அமைத்துக் கொடுத்தார் சிவா. 1915 ஜூலை இதழில் வெளிவந்த பாரதியாரின் "தமிழில் எழுத்துக் குறை," எனும் கட்டுரையின் மீதான கருத்துப்போர், பாரதியார் - வ.உ.சி.யிடையே நிகழ்ந்தது. ஆங்கில மோகத்தில் ஆழ்ந்து தமிழைப் புறக்கணித்து ஆங்கிலச் சொற்களை ஆள்வதில் ஆர்வம் காட்டியவர்களை "ஞானபானு"வில் சாடினார் சிவா.

"சுதேசமித்திரன்" தமிழ் நடையில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டு சிவா, 8.8.1915-ல் சுதேசமித்திரன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் கருத்தைச் சுட்டிக்காட்டினார். "தமிழ்ப் பாஷையைத் தனி பாஷையென்று தமிழ்ப் பண்டிதர்களில் பலரும் மண்டையுடைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்பொழுதோ தமிழர்களுக்குள் பெரும்பான்மையாக வழங்கிவரும் மிக்க பத்திரிகைகளும் தமிழ்ப் பாஷையைச் சித்திரவதை செய்கின்றன இது மிகவும் விசனிக்கத்தக்கது. தமிழ்ப்பாஷையை ஆதரித்துக் காப்பதற்குத் தாங்களும் தங்களுடைய பத்திரிகைகளும் முயற்சிக்க வேண்டும்."

1915 ஜூலை 15-ம் தேதி வெளிவந்த "ஞானபானு" இதழில் தனித்தமிழில் எழுதி அனுப்பும் கட்டுரைக்கு ஐந்து ரூபாய் பரிசளிக்கப்படும் எனும் பின்வரும் விளம்பரம் வெளியிடப்பட்டது.


உங்களால் தனித்தமிழில் எழுத முடியுமா?

முடியுமானால் எழுதுங்கள். சமஸ்கிருதம் முதலிய அந்நிய பாஷைச் சொற்களில் ஒன்றும் கலவாது தனித்தமிழில் நமது ஞானபானுவில் எட்டுப் பக்கத்துக்குக் குறையாது வரும்படியாக தமிழ்ப் பாஷையின் சிறப்பைப் பற்றியாவது திருவள்ளுவ நாயனாரின் சரித்திரத்தையாவது எழுதுவோருக்கு ரூபா ஐந்து இனாமளிப்பதாகத் தமிழபிமானி ஒருவர் முன்வந்திருக்கிறார்.
கலைச் சொல்லாக்கத்தில், "ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியாகப் பொருள்படும்படியான தமிழ்ச் சொற்களை உண்டு பண்ணிக் கொள்ளுதல் அவசியமாகுமே தவிர ஆங்கிலப் பதங்களை அப்படியே தமிழ் எழுத்துக்களிலும் எழுதிவிடுவது ஸ்வய பாஷையைக் கொலை செய்தது போலாகும்," என்று வலியுறுத்தினார் சிவா.

குறள் நெறி பரப்பிய முன்னோடி:-

குறள் நெறியைப் போற்றிப் பரப்பிய தமது நண்பர் வ.உ.சி.யைப் போலவே, சிவாவும் குறள் நெறியைப் பரப்புவதில் முன்நின்றார். "ஞானபானு"வின் முகப்பில் பின்வரும் குறட்பாவைப் பயன்படுத்தினார் சிவா.

"அறிவுடையா ரெல்லா முடைய ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர்"

நீதி மன்றத்தில் 1921-ல் அளித்த வாக்கு மூலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்தும் வகையில்,


"கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேற்று."

"வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு."
எனும் இரு குறட்பாக்களை எடுத்துரைத்தார் சிவா. நீதிமன்ற வாக்கு மூலத்தில் முதன் முறையாக இடமறித்து, பொருளறிந்து குறட்பாக்களைப் பதிவு செய்த முன்னோடியாகத் திகழ்ந்தார். வழிபாட்டு உணர்வுடன் பரவச நிலையில் திருவள்ளுவரைச் சொன்மலர் கொண்டு தூவிப் பரவி சிவா பின்வருமாறு வழிபாடு நிகழ்த்தினார்:


எத்தனையோ யோகீஸ்வரர்கள்,
எத்தனையோ ரிஷீஸ்வரர்கள்,
எத்தனையோ மகான்கள்
எண்ணற்ற சாஸ்திரங்களையும் பரோபகார்த்தமாக எழுதி இருக்கின்றனர்.
எல்லாப் பாஷைகளிலும் எல்லாத் தேசங்களின் எத்தனையோ சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆயினும் தேன்மொழி போற்ற நமது தென் மொழியில் திருவள்ளுவர் இயற்றியருளிய திருக்குறளைப் போன்றதோர் நூல்
எத்தேசத்திலும் எப்பாஷையிலும் எவராலும் இயற்றப்படவில்லை என்று நாம் கூறத் துணிகிறோம்.
தமிழ்ப் பாஷைக்கு என்றும் அழியாத் தன்மையை ஏற்படுத்தியவர் திருவள்ளுவர் என்று மேல் நாட்டாரும் ஒப்புக்கொள்கின்றனர்.
இவர் வீண் பாஷா ஞானி மாத்திரம் அன்று; ஆத்ம ஞானதீரர்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
எனும் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியபொழுது மேற்கண்டவாறு சிவா கூறியுள்ளார். இக்கட்டுரையில் சிவா ஒப்பாய்வு நோக்கில் வேதாந்த பிரம்ம சூத்திரத்தைவிட திருக்குறள் பெரும்பான்மையோருக்குப் பயனளிக்கத்தக்கது எனச் சாற்றியுள்ளார். சிவா ஒரு வேதாந்தி என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. அவரது ஒப்பாய்வின் ஒருபகுதி வருமாறு:

"பிரம்ம சூத்திரம், பிரம்ம வஸ்துவைக் குறித்துப் பிரதிவாதிப்பதாம், குறள் எல்லோருக்கும் அவரவர்களுடைய தற்கால நிலையிலிருந்து அதனினும் உயர்ந்த நிலையை அடைய உதவி செய்வது; பிரம்ம சூத்திரம் பிரபஞ்சப் பற்றுகளை எல்லாம் துறந்துவிட்டு பிரம்ம ஞானானுபூதியே லட்சியமாய்க் காடு, மலை, குகைகளில் தனி வாசம் செய்தோ, அல்லது ஈஸ்வர சிருஷ்டியின் இயற்கை அழகு மிகுந்துள்ள ஆரண்யங்களிலேனும் அல்லது அதிபரிசுத்தமான க்ஷேத்திரங்களிலேனும் சங்கங்கள் சேர்ந்து வாசஞ்செய்தோ, ஜீவிய காலத்தைக் கழிக்கின்ற சர்வசங்க பரித்தியாகிகளே பாராயணம் பண்ணி ஆராயத்தக்கது. பிரம்ம சூத்திரம் பிரபஞ்சத்தில் பெரும்பான்மையோருக்கும் பிரயோஜனமாக உள்ளதன்று. ஆனால், திருக்குறளோ முழு மூடன் முதல் முழுதும் உணர்ந்த முக்தர் வரையில் சகலருக்கும் இன்றியமையாத இனிமை மிக்க விஷயங்கள் நிறைந்துள்ளது. ஆகையால் திருக்குறளைப் போன்றதோர் நூல் இவ்வுலகமெங்கும் தேடித்திரிந்து பார்த்தாலும் கிடைக்காது என்று நாம் துணிந்து கூறுகிறோம்." வ.வே.சு. ஐயரின் திருக்குறள் ஆங்கிலப் பதிப்பை கையடக்க நூலாக 1916-ல் சிவா வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பன்னூலாசிரியர்:-

சிவாவின் நூல்கள் இருபத்து மூன்று கிடைத்துள்ளன. இவற்றுள்,
முதல் நூலான சச்சிதானந்தசிவம் (1911),
ஆத்ம ஞான ரத்னம்,
பகவத்கீதா சங்கிரகம்

ஆகிய மூன்றும் சிறைவாழ்க்கையில் எழுதப்பட்டுள்ளன. இராமகிருஷ்ணர் - விவேகானந்தர் இலக்கியக் களஞ்சியத்துக்கு பன்னிரண்டு நூல்களைப் படைத்தளித்துள்ளார் சிவா. முப்பெரும் ஞானிகளான

ஆதிசங்கரர்,
இராமானுஜர்,
மத்வர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

"திலகர் - காந்தி தரிசனம்" என்னும் ஓரங்க நாடக நூலையும்,
நளின சுந்தரி அல்லது நாகரிக தடபுடல் எனும் புதினத்தையும் எழுதியுள்ளார் சிவா.
தமிழ் இயக்க முழக்கங்கள்:-

தமிழ் இயக்கத்துக்கான முழக்கங்களையும் 1916-ல் பின்வருமாறு சிவா ஒலித்துள்ளார்: "தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ் மகா ஜனங்களே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! உங்களுடைய பாஷையைக் காப்பாற்றுங்கள். ஒரு ஜன சமூகத்துக்கு உயிர், அதன் பாஷைதான். தமிழ் பாஷை அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும் சீரும் அழிந்துவிடும். உங்கள் நா தமிழே பேசுக; நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக; உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக."


பிரிட்டிஷ் ஏகாதிபத்ய எதிர்ப்பில் வீரமுரசாக ஒலித்த சிவா, தமிழ் வளர்ச்சிப் பணியில் "தமிழ் முரசா"கவும் ஒலித்தார்.

பெ.சு.மணி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: நடராஜன் கண்ணன்

மறுமொழிகள்

0 comments to ""வீரமுரசு" சுப்பிரமணிய சிவா"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES