பெரியசாமி தூரன்

0 மறுமொழிகள்

செம்மல் பெரியசாமி தூரனின் செந்தமிழ்ப் பணிகள் - இன்று (26/09/2008) அன்னாரின் பிறந்த நூற்றாண்டு நிறைவு நாள்


தமிழின் அனைத்துத் துறைகளிலும் பன்முக மாட்சியுடைய பற்பல நூல்களைப் படைத்துப் பெரும்பணி செய்த அறிஞர் ம.ப. பெரியசாமித் தூரன். ஈரோடு வட்டத்தில் மொடக்குறிச்சியை அடுத்த மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் பழனிவேலப்ப கவுண்டர் - பாவாத்தாள் தம்பதியினருக்கு 1908ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26ம் நாள் பிறந்தவர் பெரியசாமி. கொங்கு சமுதாயத்தின் வரலாற்று நாயகர்களான அண்ணன்மார், பொன்னர் - சங்கர் இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைக்கப்பட்டது.



இளம் வயதிலேயே தாயாரை இழந்த தூரன் செம்மாண்டம்பாளையம் பாட்டி வீட்டில் வளர்ந்தார். மொடக்குறிச்சியில் தொடக்கக்கல்வி முடித்து ஈரோடு மாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பவரை படித்தார். தமிழாசிரியர் திருமலைசாமி அய்யங்கார் பாடம் கற்பிக்கும் நேரம் அல்லாமல் மற்ற நேரமும் மாணவர்களுக்குத் தமிழ் அறிவை ஊட்டுபவர். "அவரால் எனக்குத் தமிழில் பற்றும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது," என்று கூறியுள்ளார் தூரன்.
இளவயதில் சித்தப்பா அருணாசலக்கவுண்டர் கூறிய கதைகளும், இன்னொரு உறவினர் அருணாசலக்கவுண்டர் கற்றுக் கொடுத்த இசைப்பாடல்களும் தூரனுக்குக் கதை, இசை ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது.

கணக்கில் மிகுந்த ஆர்வமுடைய தூரன் "மின்சாரம் அப்பொழுது இல்லாததால் தெருவில் உள்ள மண்ணெண்ணெய் விளக்கின் அடியில் முக்கோணமும் வட்டமும் வரைந்து கணக்குப் படித்தேன்,"என்று கூறியுள்ளார். விடுதி வசதி இல்லாததால் ஒரு கன்னடிய நாயக்கர் வீட்டில் தங்கி உணவுண்டு படித்தார். மாணவப் பருவத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் சென்று ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியோர் எழுதிய நாவல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார்.

மாணவப் பருவத்திலேயே பாட்டி கற்றுக் கொடுத்து அளித்த இராட்டையில் நூற்று பெரியார் தம் வீட்டில் நடத்திய கதர்க் கடையில் நூல் சிட்டங்களைக் கொடுத்து கதர் வாங்கி அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். 01.05.1939ல் காளியம்மாளை மணம் செய்து கொண்ட தூரனுக்கு;

சாரதாமணி
வசந்தா
விஜயலட்சுமி

ஆகிய பெண்மக்களும்,

சுதந்திரக்குமார் என்ற மகனும் உள்ளனர்
மருமகள் செண்பகத்திலகம்.
1926 - 27ல் சென்னை மாநிலக் கல்லூரியில்,

கணிதம்
இயற்பியல்
வேதியியல்

பாடம் எடுத்து இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்று 1929ல் கணிதத்தில் பி.ஏ. தேர்ச்சி பெற்று ஆசிரியப் பயிற்சியும் (எல்.டி.) பெற்றார். சென்னையில் கல்லூரிக் கல்வி கற்கும்போதே சக மாணவர்கள்

சி. சுப்பிரமணியம்
நெ.து. சுந்தரவடிவேலு
ஓ.வி. அளகேசன்
இல.கி. முத்துசாமி
கே.எம். இராமசாமி
கே.எஸ். பெரியசாமி
கே.எஸ். பழனிசாமி

ஆகியோருடன் இணைந்து "வனமலர்ச் சங்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து பாரதி பாடல்களைப் பரப்பவும், தேசியப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் "பித்தன்" என்ற மாத இதழை நடத்தத் தூரன் காரணமாக இருந்தார்.

1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபாளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியபின் போத்தனூரிலும், பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்கிய இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் சேர்ந்து ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் 1948 வரை பணியாற்றினார். அப்போது நேர்முகமாகச் சிலரிடம் இசைப்பயிற்சி பெற்றார். ஆங்கிலத்தில் வெளிவந்த "டைம்" இதழ் அமைப்பில் "காலச்சக்கரம்" என்ற இதழை பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கத்தின் தந்தையார் ப. நாச்சிமுத்துக்கவுண்டர் ஆதரவுடன் தொடங்கிப் பல்சுவை இதழாக நடத்தினார்.

அவ்விதழில் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் துணையுடன்,

காளமேகப் புலவரின் சித்திரமடல்
வடிவேல் பிள்ளையின் மோகினிவிலாச நாட்டிய நாடகம்
அவிநாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம்
சாமிநாதக் கவிஞரின் கொன்றைவேந்தன் வெண்பா

ஆகியவைகளைப் பதிப்பித்தார். அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி.சு. அவிநாசிலிங்கம் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை உடைய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "கலைக்களஞ்சிய"த்தின் ஆசிரியராக 1948ல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்தியாவிலேயே முதன்முதலாகக் கலைக்களஞ்சியம் வெளிவந்தது தமிழ்மொழியில்தான். பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார்.

கல்லூரியில் படிக்கும்போதே திரு.வி.க.வின் அறிவுரைப்படி 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் பாரதியார் எழுதிய கவிதை - கட்டுரைகளை மிக அரிதின் முயன்று தொகுத்தார். கடுமையாக முயன்று 140 தலைப்புகளில் வெளிவராத பாரதியாரின் கவிதை கட்டுரைகளைக் காலமுறைப்படி தொகுத்து "பாரதி தமிழ்" என்று வெளியிட்டார். பாரதியார் படைப்பில் இது மூன்றில் ஒரு பகுதியாகும்.

கொங்கு வேளாளரில் இவர் "தூரன்" குலம் சார்ந்தவர் ஆனதால் "தூரன்" என்று பெயரில் இணைத்துக் கொண்டார். ஆனால் தமிழில் தொலைநோக்குப் பார்வை உடையவர் என்றும் அப்பெயரைக் கருதலாம்.

இவருடைய கதைத் தொகுதிகளாக

மாவிளக்கு
உரிமைப் பெண்
காலிங்கராயன் கொடை
தங்கச்சங்கிலி, பிள்ளைவரம்

தூரன் எழுத்தோவியங்கள்
என ஆறு வந்துள்ளன. பெரும்பாலும் கொங்கு மண் மணம் கமழும்படியாகவே எழுதியுள்ளார்.
கொங்கு நாட்டு ஊர்களும், பெயர்களுமே அவற்றில் இடம் பெறும்.

தேன்சிட்டு
பூவின் சிரிப்பு
காட்டுவழிதனிலே

முதலிய கட்டுரை நூல்களில் 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவ்வளவும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்,

மதம் அவசியமா?
மெளனப் பெரும் பேச்சு

என்பன சில தலைப்புகள்,

கானகத்தின் குரல்
கடல் கடந்த நட்பு
பறவைகளைப் பார்

முதலியன மொழிபெயர்ப்பு நூல்கள். தாகூரின் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். காற்றில் வந்த கவிதை என்பது நாட்டுப்புறத் தொகுப்பாகும்.
நாடக நூல்களாகக்,

காதலும், கடமையும்
அழகு மயக்கம்
சூழ்ச்சி
மனக்குகை
ஆதிமந்தி
பொன்னியின் தியாகம்
இளந்துறவி

ஆகியவைகளை எழுதியுள்ளார். இவை நாடகமாக நடிக்கத் தகுதியானவை.
இசைப்புலமை வாய்க்கப் பெற்ற தூரன்,

கீர்த்தனை அமுதம்
இசைமணி மஞ்சரி
முருகன் அருள்மணிமாலை
நவமணி இசைமாலை
இசைமணி மாலை
கீர்த்தனை மஞ்சரி

ஆகிய இசை, கீர்த்தனை நூல்கள் இயற்றியுள்ளார். கடைசி இரண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாகும்.

தமிழகத்தின் மிகப்பெரிய இசைவாணர்கள் தூரன் பாடல்களை மேடையில் பாடியுள்ளனர். இசைக் கல்லூரிகளில் சில பாடமாக வைக்கப்பட்டுள்ளன. டைகர் வரதாச்சாரியார், கல்கி போன்றவர்கள் தூரனின் இசைப் புலமையைப் புகழ்ந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார்கள். "பச்சைக் குழந்தையெனில் எனக்கொரு பாசம் பிறக்குதம்மா," என்று குழந்தையை நேசிக்கும் தூரன் ஏழைச் சிறுவர், சிறுமியர் விளையாட்டைக் கண்முன் நிறுத்துகிறார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் "ஓடிவா கஞ்சிகுடி, மண்வெட்டப் போகணுமாம் பண்ணையார் ஏசுகிறார்," என்று ஓடுகின்றன. "துன்பத்தில் தோன்றி தொழும்பே வடிவானோர்க்கு இன்ப விளையாட்டும் இல்லையோ இவ்வுலகில்," என்று வினவுகிறார் தூரன்.
காந்தியடிகளும், பாரதியாரும் தூரனை ஈர்த்த இரு பெருமக்கள். பாரதியார் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.

தூரனுடைய
இளந்தமிழா
மின்னல்பூ
நிலாப்பிஞ்சு
தூரன் கவிதைகள்
பட்டிப்பறவை

ஆகிய நூல்களில் இயற்கையை நேசிக்கும் இனிய பாடல்களையும் எளிய நடையையும் எங்கும் காணலாம்.

"ஞாயிறே இருளை என்ன செய்து விட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?'"

என்று வினவுகிறார்.

1980ம் ஆண்டு கடுமையான வாத நோயால் வாடியவர் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் தன் தமிழ்ப்பணியை, தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

கவிதைகளில் பாரதியாரின் தாக்கத்தைக் காணுகிறோம். தமிழின் அனைத்துத் துறைகளுக்கும் தூரன் செய்த பணி மிகப் பெரியது. இந்திய அரசின் "பத்மபூஷண்", தமிழக அரசின் "கலைமாமணி" விருதும் பெற்றுள்ளார். தமிழ் எழுத்தாளர் சங்கம், குழந்தை எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு கொண்டவர்.

அறிவுத் துறைகளைத் தமிழுக்குத் தூரன் புதுமையாகப் படைத்துள்ளார். தமிழக அரசு அவருடைய நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்கியுள்ளது.

செ. இராசு

நன்றி: தினமணி
விக்கிபீடியாவில் தூரன்


மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மறுமொழிகள்

0 comments to "பெரியசாமி தூரன்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES