காட்சிப்பொருளாய் மாறிவரும் "அறிவுச் சுரங்கங்கள்"!
வே.சுந்தரேஸ்வரன்
இடவசதி மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாததால் அறிவுச் சுரங்கமான நூலகங்கள், காட்சிப்பொருளாய் மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மனிதனின் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல் நூலகங்கள் என்றால் மிகையில்லை.
"ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்; பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள்; அறிஞர்களோ நூலகத்தைத் தேடுகிறார்கள் என்பார்கள்."
அத்தகைய சிறப்புக்குரிய நூலகங்கள் இன்றைக்குப் போதிய நூல்கள் இருந்தும்,
இடவசதியின்மை
பணியாளர்கள் பற்றாக்குறையால்
பயனின்றிக் கிடக்கின்றன.
தமிழகத்தில்,
30 மைய நூலகங்கள்
1,567 கிளை நூலகங்கள்
1,827 ஊர்ப்புற நூலகங்கள்
487 பகுதி நேர நூலகங்கள்
12 நடமாடும் நூலகங்கள் என
மொத்தம் 3,923 நூலகங்கள் உள்ளன.
இதில், மைய நூலகங்களில் முதல்நிலை நூலகர் பணியிடங்கள் பாதிக்கும் மேல் காலியாக உள்ளன.
கிளை நூலகங்களில் 600 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை பணி உயர்வுபெற்ற ஊர்ப்புற நூலகர்களைக் கொண்டு அரசு நிரப்பிட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், 21 மாவட்டங்களில் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்கள் இன்னும் காலியாகத்தான் உள்ளன.
நூலகப் பணியிடங்கள் மட்டுமன்றி பெரும்பாலான நூலகங்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில், இடவசதி இன்றி ஏனோ, தானோ என்ற நிலையில்தான் இயங்கி வருகின்றன.
இடவசதி குறைவு காரணமாக கிராம, நகர்ப்புற நூலகங்கள் பலவற்றில் தரமான நூல்களும், குறிப்பாக பள்ளி மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோருக்குப் பயன்படும் நூல்களும் மூட்டைகளாக கட்டப்பட்டு பரண்மேல் மாதக் கணக்கில் தூங்கும் நிலைதான் உள்ளது.
டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம்கூட நூலகங்கள் அமைக்க அந்தந்த ஊராட்சிகளும், நகராட்சிகளும் இடம் தர முன்வருவதில்லை என்பது நூலக ஊழியர்கள் பலரது ஆதங்கம்.
1.4.1982ம் ஆண்டு முதல், ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மூலம் வசூலிக்கப்படும் வீட்டு வரியில் 5 சதவீதம் தொகை நூலக வளர்ச்சிக்காகத் தரப்படுகிறது. ஆனாலும், இந்தத் தொகையை முறையாக உள்ளாட்சித் துறையினர் வழங்காததால், பல கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை பாக்கி உள்ளதாக நூலகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது ஒருபுறமிருக்க, நூலகங்களில் 1,500க்கும் மேல் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இதை நிரப்புவதற்கு அரசு போதிய அக்கறை காட்டவில்லை எனவும் நூலகத் துறை ஊழியர்களே கவலை தெரிவிக்கின்றனர்.
தாலுகா, நகராட்சி நூலகங்கள் தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணியாளர்கள் இல்லாததால் வாசகர்களுக்குப் போதிய நூல்களை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு நூல்கள் வாங்குவதாகக் கூறும் அரசு, அந்த நூல்களை வாசகர்கள் படிப்பதற்கும், நூல்களை அடுக்கி வைப்பதற்கும் தேவையான இடவசதியை அளிப்பது குறித்து பேசாதது ஏனோ? என்கின்றனர் இதன் ஊழியர்கள் சிலர்.
கிளை நூலகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 1,500 நூல்கள் வரை மைய நூலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும், போதிய நூலக அறிவு இல்லாதவர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்படுவதால், வாசகர்களின் தேவையை அறிந்து அவர்களுக்குத் தந்து உதவ முடிவதில்லை என்ற புகாரும் உள்ளது.
பெரும்பாலான தாலுகா நூலகங்களிலும், மாவட்ட நூலகங்களிலும் இணையதள வசதி குறைவாக உள்ளது.
நூலகங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட நூலக ஆணைக் குழுவில் போதுமான நிதி இருந்தபோதிலும், அவற்றைப் பயன்படுத்தி, நூலகங்களை மேம்படுத்தாத நிலை உள்ளதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து நூலகத்துறை அலுவலர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "முன்பைவிட தற்போது நல்ல நூல்கள் வருகின்றன. இடவசதி இன்மையால் அவை மூட்டைகளாக வைக்கப்பட்டுள்ளன," என்றார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக பொது நூலகச் சட்டம் போடப்பட்ட தமிழகத்தில் இன்றைக்கு நூலகங்கள் சவலைப்பிள்ளையாக மாறிக்கொண்டிருக்கின்றன.
இதனால் கிராமங்கள்தோறும்,
நல்ல வாசிப்பு அறை
புத்தகங்கள் வைக்க காற்றோட்ட வசதியுடன் கூடிய அறை
இணையதள வசதியுடன் கணினி
நூலகர், இரு உதவியாளர்கள்
என முழுமையான நூலகம் அமைவது அவசியமாகும்.
"ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும்," என்ற அண்ணாவின் வார்த்தைக்கு உயிரூட்டும் வகையில், அவர் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் நூலகத் துறையைச் சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே நூலக ஆர்வலர்கள், ஊழியர்களின் அவா.
நன்றி: தினமணி
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
ஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்
4 years ago
மறுமொழிகள்
0 comments to "தமிழக நூலகங்கள்!"
Post a Comment