அடையாளம் காட்டிய ஆத்மநாதர்.
<-=0-=-=-=-=-=-(<>)(<>)=-=-=-=-=-=-=-=-0=->
பாண்டியனின் அமைச்சரான துண்டகன் பேராசைக்காரன். சிவபுரம் ஆவுடையார் கோயில் அருகிலுள்ளது). என்ற கிராமம் முப்போகம் விளையக்கூடியது என்று கேள்விப்பட்டான். தன் அதிகார பலத்தால் சிவபுரத்து மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்துக்கொண்டான். எல்லைக் கற்களை எடுத்தெறிந்தான்.
அதனால் இறைவனிடம் முறையிட எண்ணிய அந்தணர்கள் ஆவுடையார் கோயில் ஸ்ரீ ஆத்மாநாதரரிடம் முறையிட்டு அழுதனர் “ வலுத்தவனுக்கு வாழ்வு; இளைத்தவனுக்கு ஏமாற்றம்” என்பது தான் நீதியா? என்று விம்மினர்.
ஸ்ரீ ஆத்மநாதர் முதியவர் வடிவில் வந்து அந்தணர்களிடம் “என் பெயர் பரமசாமி. ஊர் சிதம்பரம். உங்கள் கிராமத்தை மந்திரி துண்டகன் ஆக்கிரமத்துக் கொண்ட விபரமெல்லாம் அறிவேன். என் மூதாதையர்கள் இந்த ஊரின் பட்டயத்தை என்னிடம் தந்துள்ளனர். அதைக் காட்டி உங்கள் சொத்தை மீட்டுத் தருகின்றேன். அப்படிச் செய்தால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, 300-இல் ஒரு பாகத்தை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.
”ஐயா! வயதானவராக இருக்கிறீர்!” துண்டகன் ஆள்வைத்து அடிப்பான். உங்கள் பெண்டு பிள்ளைகளை நாசம் செய்வான். வந்தவழி பார்த்துக்கொண்டு போய்விடுங்கள். அவன் பட்டயத்தை பிடுங்கிக் கொண்டு உங்களைப் பாழும் கிணறில் தள்ளிவிடுவான்” என்றனர் அந்தணர்கள்.
”என் தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள். உங்களின் கட்டுமஸ்தான பிள்ளைகளின் எலும்புகள் நொறுங்கியிருக்கலாம்.. என் மனைவிபத்திரகாளி மாதிரி. என் பிள்ளைகள் கிட்டே வாலாட்ட முடியாது. அதிலும் சின்னவன் மலையையே தகர்த்துவிடுவான். தைரியமாயிருங்கள். ஒப்பந்தத்துக்குச் சம்மதமா?” என்றார் வந்தவர்.
”மொத்த நிலத்தையும் பிடுங்கிக் கொண்ட துண்டகனிடமிருந்து மீண்டு வருவதில் தானே பாகம் கேட்கிறீர்கள்? யானை தின்ற கரும்பு முழுசாகக் கிடைக்கும் பட்சத்தில் கட்டாயம் உங்களுக்குப் பங்கு கிடைக்கும்.” என்றனர் அந்தணர்.
பரமசுவாமி மதுரை சென்றார். ஆடி வீதியில் நின்றவாறு உரக்க, “ அரசன் செங்கோல் தவறலாமா? அது வளையாமல் இருந்தால்தானே புகழ் நிலைத்து நிற்கும்! கறுப்புப் பசு வெள்ளைப் பாலைக் கறக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள். அப்படியில்லை! சிவப்புப் பசு இரத்த நிறத்தில் பால் சொறியத் தொடங்கிவிட்டது. எதனால்? மன்னன் கண்ணைக் கட்டிக் கொண்டதால்! தானம் கொடுத்துவிட்டு பின்னாலே சென்று பறிக்கின்ற கொடுமையைக் கண்டவருண்டா? நான் கண்டிருக்கிறேன்” என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கூச்சலிட்டார்.
கொற்றவனுக்குச் செய்தி எட்டியது. அவரை அழைத்துவரச் செய்து விசாரித்தான். சிவபுர மகிமையையும், நிலங்கள் பறி போனதையும் பாண்டியனின் குலப் பெருமையையும் கூறித் தன்னிடமிருந்த பட்டயத்தைக் காண்பித்தார் முதியவர்.
ஆத்திரம் கொண்ட அரசன் அமைச்சரை அழைத்து விசாரித்தான். துண்டகன் தான் தயாரித்திருந்த போலிப் பட்டயத்தை எடுத்து பவ்யமாக நீட்டினான்.. இரண்டையும் ஒப்பிட்ட அரசன், “இந்த பூமிக்குள்ள அடையாளம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்” என்று இருவரிடமும் கேட்டான்.
இந்தப் பரந்த நிலத்தின் ஈசான்ய மூலை பாறை பூமி. அது வரண்டு தரிசாகக் கிடகிறது” என்றான் மந்திரி. “ பாறை இருப்பது உண்மை. ஆனால் அது வறண்ட நிலமல்ல. அதில் நான் தண்ணீர் வரவழைத்துக் காட்டுகிறேன்” என்றார் வயோதிகர்.
அரசன் இருவரையும் அழைத்துக் கொண்டு சிவபுரம் வந்தான். உடன் மற்ற மந்திரிகளும், சேனாதிபதியும் பரிவாரங்களோடு வந்தனர்.. “பெரியவரே! எங்கே தோண்டினால் நீர் வரும்?” என்று அரசன் வினவ, பாறைமேட்டில் ஓரிடத்தைக் காட்டி கங்கையை நினைத்தார் வயதானவராக வந்த ஈசன். அரசனுடன் வந்தவர்கள் கடப்பாறையால் அந்த இடத்தில் நான்கு குத்து போடுவதற்குள் தண்ணீர் பீரிட்டது.
அமைச்சர் துண்டகன் தண்டிக்கப் பட்டான். “ஸ்வாமி சிவ புரத்தின் நான்கு எல்லைகளையும் காண்பிக்க வேண்டும்” என்று மன்னன் கேட்க அப்படியே அடையாளம் காட்டிய பெரியவரை அந்தணர்கள் பிரம்ம ரதத்தில் ஏற்றி, ஊர்வலமாய் அழைத்துவந்து நிலத்தை 301 பங்காகப் பிரித்து ஒரு பாகத்தை அவருக்கு வழங்கினர்.
அந்த நொடியில் இறைவன் அந்த்ர்த்தியானமாயினார். “சொக்கேசராக வந்து, பிட்டுக்கு மண் சுமந்தவர், இங்கே நிலத்தை மீட்டு நீதி தவறாதபடி என்னைக் காத்திருக்கிறார் ” என்று பாண்டியன் புளகித்தான்.
ஆவுடையார் கோயிலில் ஸ்ரீ ஆத்மநாதரைச் சேர்த்து நம்பியார்கள் 301 பேர் என்று குறிப்பிடப்படுகிறது. நம்பியார்களே ஸ்ரீ ஆத்மநாதரை பூஜை செய்கின்றனர்.
-=-=-
வெ.சுப்பிரமணியன் ஓம்
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
0 comments to "Ataiyalam kattiya Athmanathar"
Post a Comment