sri Raamamirtham

0 மறுமொழிகள்

Ilakkiya sahaptham La.Sa.Ra. / ஒரு இலக்கிய சகாப்தம் லா.ச.ரா.

லா.ச.ரா. சொல்லுவாராம் "கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண்திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்"

முது பெரும் எழுத்தாளரான லா.ச.ரா. என்று மரியாதையுடன் அழைக்கப்படும் லா.ச.ராமாமிருதம் அவர்கள் தனது 92வது வயதில் சென்னையில் காலமானர். அவர் நினைவிற்கு அஞ்சலி செய்யும் வகையில் சில நினைவுகள் - நிகழ்வுகள்:

1916ஆம் ஆண்டு அக்டோபர் 30ந் தேதி லால்குடியில் பிறந்தார் லா.ச.ரா. மத்திய தர வகுப்பில் பிறந்த அவர் ஆரம்பத்தில் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்வேயால் கவரப்பட்டாலும் அவருடைய மனமெல்லாம் தமிழ் மீதே இருந்தது. சுமார் 50 ஆண்டு காலங்கள் தனது பிரமிக்க வைக்கும் நடையில் இலக்கியம் படைத்து, பலருக்கு ஒரு ஆதரிச எழுத்தாளராக விளங்கினார். பல எழுத்தாளர்களுக்கு அவர் தூண்டுகோலாய் விளங்கினார்.

அவர் தம் 17வது வயதில் "தி எலிபண்ட்" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதை பிரசுரமானது. ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய கதைகள் மணிக்கொடி இதழில் பிரசுரமாகின.

இதுவரை 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. அவருடைய கட்டுரை நூல் சிந்தாநதி 1989வது ஆண்டில் சாகித்ய அகாடமி விருது பெற்றது. தவிர உலகக் கவிஞர் மன்றத்தின் கவுரவ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, காஞ்சிப் பெரியவரின் சுதாரஸ சதுரஹ விருது ஆகிய பல விருதுகள் அவருக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. அவருடைய கடைசிக் கதை அமுத சுரபியில் வெளியானது. அவருடைய கதைகளின் சிறப்பே அவருடைய தனித்தன்மை மிக்க வித்தியாசமான நடை.

தங்களைப் போன்ற இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ராவும் தி. ஜானகிராமனும் இரு கண்கள் போன்று எனக் குறிப்பிடும் எழுத்தாளர் எஸ். ஷங்கரநாராயணன் "லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப், சொற்களின் சூத்ரதாரி, இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்கள் கூட அது ஆழமானது என்று மறுக்க முடியாது" என்று லா.ச.ரா.வின் சிறுகதைத் தொகுப்பின் முகவுரையில் கூறுகிறார்.

"மாதத்திற்கு தனி மனிதர் பத்து நாவல்கள் எழுதும்போது லா.ச.ரா. சிறுகதையை மாதக் கணக்கில் செதுக்கவார்" என அவரது குமாரர் சப்தரிஷி குறிப்பிடுகிறார்.

இனி அவருடைய மந்திர நடையில் சில:

"அப்பாவின் கறு கறு தாடி தொப்புள் வரை இறங்கி மாலைக்காற்றில் ஜோரா வெட்டிவேர்தட்டி மாதிரி அசைஞ்சுண்டிருக்கும்"

"அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டதும் மாம்பழத்துள் கத்தி இறங்குவதுபோல் அடிவயிற்றில் சில்லிப்பு துண்டமிட்டது"

"சவுக்கு நுனியில் கட்டிய ஈயக் குண்டு போல் வார்த்தைகள் தெறித்தன."

"அம்மா பரந்து, தளர்ந்து செந்தாழை மேனியோடு எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கையில் என்னவோ யாக குண்டத்தில் நின்றெரியும் நெருப்பைப் போல கிட்ட அண்டக்கூட நெஞ்சு அஞ்சும்"

லா..ச.ரா. சொல்லுவாராம் "கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண்திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்"

அவருடைய ஜனனி, பாற்கடல், த்வனி, பச்சைக்கனவு, குரு- ஷேத்ரம் ஆகிய கதைகள், அவைகளில் காணப்படும் மந்ததிரச்சொற்கள் யாவும் படிப்பவரின் மனதில் வெகுகாலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கவிஞர் அபி சொல்வது போல" லா.ச.ரா.வின் சொல் வார்த்தையன்று. மொழியைத் தாண்டியது. வெளிப்பாடு அப்புறம் உள்பாடு எனும் இவறறின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது"

"லா.ச. ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவர் மறைவுடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது" என அசோக மித்ரன் கூறுகிறார். மறுக்க முடியாத நிஜம்.

நன்றி: அசோகமித்ரன் கட்டுரை தினமணியில், லா.ச. ராமாமிருதம் கதைகள் (ராஜ ராஜன் பதிப்பகம் ஆகியவை)

***

மறுமொழிகள்

0 comments to "sri Raamamirtham"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES