Fwd: மக்களும் மரபும் (குறவர் மக்கள்)

0 மறுமொழிகள்

 


ஓம்.

மக்களும் மரபுகளும்

 மக்களும் மரபுகளும் என்ற நூலில் குருவிக்காரர்கள் பறிய சில குறிப்புகள் காணப்படுகின்றன.

இதோ:

          நரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப்படும் மக்கள், தென் மாநிலங்களைச் சேர்ந்த நாடோடி இனத்தவர். இவர்கள் மத்திய மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர். தென் மாநிலங்களில் சில நூற்றாண்டுகளாக வழ்ந்து வந்தாலும் தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்துவரும் இவர்கள், வேறு எந்த இனத்துடனும் கலந்துவிடுவதில்லை.

         நறிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள். சமய உணர்ச்சி மிக்கவர்களான இவர்கள், தங்கள் கடவுளளர்களைத் தங்கள் இருப்பிடங்களிலேயே வணங்குகின்றனர். அக்கடவுளின் உருவங்கள் ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அந்தத் துணிமூட்டை சாமி மூட்டை என்று அழைக்கப்படுகிறது.

         ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு சாமி மூட்டை உண்டு. குடும்பத் தலைவரால் மரியாதையாகவும், கவனமாகவும் அம்மூட்டை பாதுகாக்கப்படுகின்றது.  சாமி மூட்டையில் உள்ள துணியில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட துணியும் அடங்கியிருக்கும். இவற்றை அவர்கள் பரம்பரையாக உள்ளதாகக் கூறிக் கொள்வார்கள்.

         இரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடை ஒன்று 'சாமி பாவாடை' என்று பெயர் பெற்று அவர்களிடையே உள்ளது. நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையைத் தொடுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை; அத்துடன் ஒரு பிரிவைச் சார்ந்தவர்களின் சாமி மூட்டையை அடுத்த பிரிவைச் சார்ந்தவர்கள் தொடுவதில்லை. அடுத்தவர்களுக்குத் தங்கள் சாமி மூட்டையைப் பிரித்துக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தொட அனுமதியும் இல்லை. பிரித்துக் காட்டவும் விரும்புவதில்லை.

         ஆண்களும் பெண்களைப் போன்று தலையில் சிகை வளர்த்துக் கொள்கின்றனர்.வழிபாடு செய்யும் பொழுது, தன் தலையை விரித்துப் போட்டுகொண்டு  சாமி மூட்டையைத் திறப்பான் குடும்பத் தலைவன். பின்னர், இரத்தம் தோய்ந்த பாவடையை அணிந்து, வழிபாடு செய்வான்.

         பூவும், மஞ்சள் தூளும் தேவதைகளின் முன் படைக்கப்படும். பலி கொடுத்த மிருகத்தின் இரத்தமும் தேவதை முன் படைக்கப்படும். தேவதைகளின் முன் நடனமாடியபடி, அந்த இரத்தத்தில் புரள்வான் குடும்பத் தலைவன்.

         ஒரு குடும்பத்தில் மகன்  மணம் புரிந்துகொண்டால், தகப்பனின் சாமி மூட்டையில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படும். குடும்பத்தில் மூத்த மகன் தந்தையினுடைய சாமி மூட்டைக்கு வாரிசாகக் கருதப்படுகிறான். எனவே, அவனுடைய சாமி மூட்டையில் உள்ள இரத்தம் தோய்ந்த துணி, ஏழு அல்லது எட்டு தலைமுறைகள் கடந்த மிகப் பழமையானதாகக்  கூட இருக்கும்.

         எப்பொழுதெல்லாம் பூஜை நடத்துகின்றனரோ, அப்பொழுதெல்லாம் உறவினர்களையும், கோத்திரக் காரர்களையும்    ( தந்தை வழி உறவினர்கள்) அழைத்து, அவர்களுக்குத் தலைக்கு ஐந்து ரூபாயும், சம்பந்திகளுக்கு இரண்டு ரூபாயும் அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

பின் குறிப்பு(என் அனுபவத்தில் கண்டது)

         1950-ஆம் ஆண்டில் முக்கூடல் நகரில், தாமிரபரணி ஆற்றில் நீராடச் செல்கையில் தாமிரபரணியோடு உள்ளாறு கலக்கும் இடத்தில் ஒரு மேட்டினில் நரிக்குறவர்களின் திருவிழாவினையும், அதில் பலியிடுவதற்காக ஒரு எருமை மாட்டினை நிறுத்தி அவர்கள் சடங்கு பூஜை முறை செய்துகொண்டிருந்தபோது பார்த்திருக்கிறேன். ஆனால் பலியிடுவதை நேரில் பார்க்கும் துர்பாக்கியம் வேண்டாம் என விலகிச் சென்றுவிட்டேன்.

         நரிக்குறவர்கள் மலைவாழ் பழங்குடியினர் பட்டியலில் அரசு வைத்துள்ளது. 'திருநாளைப் போவார்' என்ற அடை மொழி அவர்களுக்குத் தகும். மாநிலம் முழுவதிலுமான பிரபலமான உற்சவங்கள் பற்றிய முழு விபரங்கள் அவர்களுக்கு மனப்பாடமாய்த் தெரியும். முதலாம் திருநாள் தொடங்கி பிரம்மோர்சவம் முடிவாகும் வரையிலான பஞ்சாங்கம் போன்று கன கச்சிதமாக தெரிவிப்பார்கள். அவர்கள் சொந்தமாக குடியிருக்க வீடுவாசல் இல்லாமலிருப்பதாலும் சொந்த நிலம் வாங்கவோ விவசாயம் செய்யவோ, அன்றி விவசாயக் கூலி வேலை செய்வதற்கோ நோங்குவதில்லை.

        

         திருநெல்வேலித் தேவர் ஒருவர் இந்த நாடோடி மக்களுக்குக் கடன் தந்து உதவுவார். அவரிடம் நான் உரையாடுகையில் அவர் இம்மக்களை மிகவும் உயர்வான நாணயம் மிக்கவர்கள் என்று குறிப்பிட்டார். நிரந்தர முகவரியுள்ளவர்களுக்குக் கூட வங்கி  பணம் கடன் தருவதற்குப் பிணைப் பொருள் கேட்கின்ற நிலையில், ஒரு இடத்தில் தங்காமல் பெயர்ந்துகொண்டே இருப்பதுமான, சொத்து சுகம் இல்லா ஏழை மக்களிடம் சரிவர கடன் திரும்பப் பெறவியலுமா என்று கேட்ட போது அவருடைய நடைமுறைகளைச் சொன்னார்.

        "அவர்கள் குழுக்களாகத் தான் சென்று கொண்டிருப்பார்கள். திருநாள் விழாக்கள் பிரபல்யமான ஊர்களில் நடைபெறும் காலங்களில் அங்கே சென்று குடில்களை புறம்போக்கு பூமி,  தரிசு நிலங்கள், கோயில் அருகில் ஒதுக்குப் புறத்தில், ஆற்றுக் கரையோரங்களில் அமைதுக் கொள்வார்கள். பித்தளை, பாசிமணி, பெண்கள் விரும்பும் அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றுடன் விற்பனை தொடங்குவர்.

         சுற்றுப் பயணமாக என் விருப்பப்படி அந்த அந்த ஊர்களில் முகாம் இட்டிருக்கும் குழுக்களைச் சந்திப்பேன். அவர்களுடன் அவர்கள் தங்கும் இடத்திலேயே விருந்தினர் மாளிகையாக ஒரு குடில் அமைப்பார்கள். அதில் நான் தங்குவேன். அவர்கள் உண்ணும் உணவில் சிறந்ததை எனக்குத் தருவார்கள். நேர்த்தியாக சுவையாகவும்  இருக்கும். வெளியிலிருந்து வாங்குவதையும் அவர்களின் குழந்தை முதல் பெரிசுகள் வரை ஒன்றாக அமர்ந்து பங்கீடு செய்து உண்போம். நான் திரும்பும் போது அவரவர் திரும்பத் தரவேண்டிய தொகையை நல்ல தவணைகளாகப் பெறுத் திரும்புவேன். என்னுடைய பயணச் செலவுக்காக ஒரு அற்பத்தொகையை வட்டியாகப் பெற்றுக் கொள்வேன். அந்த மக்கள் பிறர் தயவில் வாழ விரும்புவதில்லை."

         அவர்கள் பேசும் மொழி எழுத்தில்லாத ஒன்று. ஆனால், அவர்கள் பிராந்திய மொழி அனைத்திலும் உரையாட வல்லவர்கள். தொடர்வண்டி நிலையத்தில் போர்ட்டர்கள் பிற மாநிலத்தவருடன் சரளமாகப் பேசுவதும் சண்டையிடுவதிலும் வல்லவர்களாய் இருப்பது போன்று  நரிக்குறவ மக்கள் திறமையானவர்கள்.

         ஆண்கள் நரி, முயல் வேட்டையாடுவர். பறவைகளையும் வேட்டையாடி புசிப்பர்.ரவைத் துப்பாகியும், கவுட்டையில்  கட்டப்பட்ட' கேடாபெல்ட்' , கைத்தடி ஆகியவை அவர்களுடைய ஆயுதம்.

         எப்படி அவர்கள் நரிபிடிப்பார்கள் என்று கேட்டபோது அதனை நடித்துக் காட்டினார்கள். நரித்தோல் ஒவ்வொருவரிடமும் இருக்கும். நரித்தோலுக்குள் ஒருவர் ஒளிந்து மறைந்து இரவினில் நரிகள் நடமாட்டம்  உள்ள இடங்களில், அசல் நரி குதித்துக் கும்மாளம் செய்வதுபோன்று வாலை ஆட்டிக் கொண்டு இறந்து கிடக்கும் ஒரு ஆட்டின் உடம்பின் மீது தாவியும் நரியினைப் போன்று ஊளையிட்டுக்கொண்டும் போக்குக் காடுவார்கள். கையில் குறுந்தடி ஒன்று இருக்கும். தூரத்தே நின்று நோட்டம் விடும் குள்ளநரி ஆராய்ந்து,  மறைந்து குதித்து விளையாடும் மனிதனின் அருகில் வந்தவுடன் சமயம் பார்த்து தக்க தருணத்தில் கைதடியினால் அடிக்கப்பட்டு மண்டை சிதறி குருதிப் புனலில் சாயும்.

         காடை கௌதாரி, குருவி வகைகள், மாந்தோப்புக் கிளி. இவறை உயிருடன் கண்ணி வைத்தும் வலையினாலும் பிடித்து உயிருடன் வளர்ப்போருக்கு விற்பனை செய்வார்கள். திருவிழாக் காலங்களில் கோயில் சப்பரத்தில் உற்சவர் எழுந்திருத்து ஆகி புறப்பாடு செய்கையில், பெட்ரோ மாக்ஸ் விளக்குகள் சுமந்து செல்ல இவர்கள் ஆணும் பெண்ணும் ஈடுபட்டுக் கூலி பெறுபவார்கள். 

      வாஷிங்டன்னில்  திருமணம் என்ற நகைச் சுவைத் தொடரில் சாவி அவர்கள் திருமணத்தின் போது நரிக்குறவர்கள்  பெட்ரோமாக்ஸ் விளக்குகள் தூக்கிச் செல்லும் போது அங்குள்ள நாய்கள் அவர்களைக் கண்டு குரைக்காததால், இந்தியாவினின்றும் நாய்கள் இறக்குமதி செய்தும், பூசணிக்காய்களுக்கு  பிளாஸ்டிக் காம்புகள் அளித்தும், ராக்பெல்லர் மாமியிடம் சொன்ன ஒரு சேதிக்கு அவர் கேட்பார்," அப்பளம் இடும் பாட்டியின் கால் வலிக்கு ஏன் கைவைத்தியம் செய்யவேண்டும் என்று கேட்பார்.

         ஆண்களில் சிலர் மூக்கு குத்தி மூக்குத்தி அணிந்திருக்கின்றனர். தினமும் குளிக்கவேண்டிய அவசியம் இல்லை. இல் அடு கள் அருந்திவந்தவர்கள், தற்பொது தயார் நிலையில் சாராயம் கிடைப்பதால் இல்அடுகள் இல்லையாம்.

         பெண்கள் கையில் சிறிய மெல்லிய கம்பிகள், ஊசிமுனைக் குறடு ஆகியவற்றுடன் சோர்வின்றி கோர்த்து முறுக்கிக் கொண்டே இருப்பார்கள். தியாகிகள் நடமாடும் போதும் அமர்ந்திருக்கும் போதும் தக்கிளியில் நூர்த்துக் கொண்டே செல்வது போன்று உழைப்பார்கள்.அல்லது நரம்பு போன்றவற்றில் வித விதமான பாசி மணிகளை அலங்காரமாகக் கோர்த்து கண்ணைக் கவரும் மாலைகளாக உருப்பெறும்.

          தற்சமயம் கேரளாவின் சபரிமலையில் பாசிமணிச் சரம்கள் மிகுதியாக விலை போயிற்றாம். அங்கு கலை நுணுக்கமான பின்னல் மணிமாலைகள் கவர்ச்சி தருகின்றனவாம். நல்ல சந்தையாம்.

         மதுரையில் அலங்கா நல்லூரில் நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு மனைதொடர் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.நிர்வகிப்பதில் பல சங்கடங்கள் அவர்கள்  உணர்கிறார்கள்.

மதுரை வடக்கு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் நரிக்குறவர் குடியிருப்புகள் உள்ளன.

         கழிவின் கிழிந்த காகிதங்கள், திரும்பவும் உருக்கும் பிளாஸ்டிக் பைகள் சேகரம் ஆகியவை தற்காலத்திய வருமான வழிகளாக சிறுவர்களும் குடும்பமும் ஈடுபடுகின்றனர். 

          எக்ஸோனரா வின் மூலம் கழிவுக் குப்பைகள் வெளியேற்றும் பணியில் சிலர் இருக்கின்றனர்.

          ஒட்டன் சத்திரம் ரயில் நிலையத்தில் முன்பு ஒரு நாள் முன் இரவில் நான்  சென்றுகொண்டிருந்தபோது ஒரு ஆடவன் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த பெண்மணியின் கூந்தலைக் கைகளால் அள்ளிப் பிடித்து சண்டையிடுவது போன்று தோன்றியது. சற்றே அவர்கள் பக்கம் நின்று அவனிடம் என்னவென்று கேட்டேன். அவள் தன் மனைவி என்றும் அவளுக்கு வரும் ஒருதலை மண்டயிடிக்கு வைத்திய சிகிச்சையாக தலை மயிரை இழுத்து சிறிது நேரம் பிடித்தால் இதமாக இருக்குமாம். அக்குபிரஷர் இடங்கள் சில அவனிடம் சொல்லிக் கொடுத்துவிட்டு என் கைவசம் இருந்த சில மாத்திரைகளையும் கொடுத்துச் சென்றேன்.

ஒரு முதுமொழி உண்டு,'குறத்தி பிள்ளை பெற குறவன் மருந்து குடித்தானாம்' என்பார்கள். ஒருவருக்காக ஒருவர் முன்நின்று விரும்பி செயலாற்றுவதை கூறுவார்கள் போலும்!

         இந்த வகுப்பைச் சேர்ந்த சில பெண்கள் ஆங்காங்கே படித்துவருகிறார்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து வருகிறார்கள். போட்டிமிகுந்த இவ்வுலகில் கரையேற்றிவிட ஆளில்லை. துயரத்தில் ஆழ்த்த பலர் இருக்கின்றனர்.

         'குறத்திமகன்' என்ற திரைப்படம் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தந்தார்.

அன்புடன்

வெ.சுப்பிரமணியன் ஓம்.


வெ.சுப்பிரமணியன்





மறுமொழிகள்

0 comments to "Fwd: மக்களும் மரபும் (குறவர் மக்கள்)"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES