THF Announcement: ebooks update: 01/01/2014 *திருவாதவூரர் புராணம் மூலம்*

1 மறுமொழிகள்
வணக்கம்.

இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது.


நூல் பெயர்: திருவாதவூரர் புராணம் மூலம் அருஞ்சொற் பொருளகராதியுடன்
நூல் ஆசிரியர்: கடவுண் மாமுனிவர்
வெளியீடு: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி
ஆண்டு: 1923


  • நூலை த.ம.அ மின்னாக்கத்திற்காக வழங்கியவர் டாக்டர்.காளைராசன்
  • நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன்


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 364

நூலை வாசிக்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


தமிழ் மரபு அறக்கட்டளையின் 2014 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பிதழ்

0 மறுமொழிகள்
வணக்கம்.

2013ம் ஆண்டு முடிந்து 2014ம் ஆண்டு இன்று தொடங்குகின்றது. 

கடந்த ஆண்டில் அனுபவங்கள் பலவகையாக நம் ஒவ்வொருவருக்கும் அமைந்திருக்கலாம். தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆண்டு அனுபவங்கள் யாவும் புதிய வெளியீடுகளின் வடிவில் மின்னூல்களாகவும், கட்டுரைகளாகவும், ஒலிப்பதிவுகளாகவும் விழியப்பதிவுகளாகவும் வெளியிடப்பட்டன.

பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டினை வரவேற்க நம் நண்பர்கள் சிலரது ஆக்கங்களை இங்கே இணைத்திருக்கின்றேன்.  இந்த ஆங்கிலப்புத்தாண்டின் விடுமுறை நாளில் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இணைந்து இந்த வெளியீடுகளையும் வாசித்தும், பார்த்தும், கேட்டும் மகிழுங்கள்!

Inline image 2



விழியப் பதிவு

பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் - ஹிந்து,  பௌத்த சமய தடையங்கள்

மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒரு விழியப்பதிவே இன்றைய சிறப்பு பதிவாக வெளியிடப்படுகின்றது.

இந்த விழியம் 2 பகுதிகளாக உள்ளது. இன்று 25 நிமிடங்கள் கொண்ட முதல் பதிவு வெளியிடப்படுகின்றது. இப்பதிவில் நான் வழங்கும் கெடா பூஜாங் பள்ளத்தாக்கு வரலாறு, ஆலயங்கள் பற்றிய விளக்கங்கள், சோழர்களின் ஆட்சி, பௌத்த ஹிந்து மத ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.

விழியப் பதிவு: டாக்டர். நா.கண்ணன், முனைவர்.க. சுபாஷிணி
விழியத் தயாரிப்பு: முனைவர்.க. சுபாஷிணி


நமது வலைப்பூவில் இந்த விழியத்தை இங்கே காணலாம். http://video-thf.blogspot.com/2013/12/blog-post_30.html

யூடியூபில் இங்கே காணலாம்http://www.youtube.com/watch?v=G496Az-sgFg



மின்னூல்

1.
நூல் பெயர்: திருவாதவூரர் புராணம் - மூலம் அருஞ்சொற் பொருளகராதியுடன்
நூல் ஆசிரியர்: கடவுண் மாமுனிவர்
வெளியீடு: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி

1923ம் ஆண்டு அச்சு பதிப்பு கண்ட ஒரு அரிய நூல் இன்று மின்னூலாக வடிவம் பெறுகின்றது.

இந்த நூலினை நம் மின்னாக்கப்பதிவிற்காக வழங்கியவர் முனைவர்.காளைராசன். இதனை மின்னூலாக்கி நமக்கு அளித்திருக்கின்றார் டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன். தொடர்பு உதவி கீதா.


2. நூல் பெயர்: சூரைப் புராணம்

டாக்டர்.நா.வள்ளி அவர்களின் அரிய முயற்சியிலும்  அவர்கள் துணையுடனும் இப்புராணம் மின்னாக்கம் பெற்றிருக்கின்றது. நூல் உருவான காரணம், வரலாறு, முழு நூல் அனைத்துமாக இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைந்திருக்கின்றது. 

விபரங்களை அறியவும் நூலை வாசிக்கவும் இங்கே செல்க!


கவிதை

புத்தாண்டு பிறக்குது - திரு.ஜெயபாரதனின் புத்தாண்டுக் கவிதை.




கட்டுரை

1. பார்வதி ராமச்சந்திரன் - ஜபம்

கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியில், மன அமைதி என்பது பலருக்கும் கிட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்தப் புனித பாரத மண்ணில் தோன்றிய ஞானியரும், யோகியரும், மஹான்களும், மன அமைதி, நிம்மதி மட்டுமல்லாது, இறைவனின் சந்நிதியையும் சாயுஜ்யத்தையும் அருளும் மிக எளிமையானதொரு வழியை, நமக்குக் காட்டிச் சென்றுள்ளனர். அற்புதமான மார்க்கம் அது. 'ஜபம்' என்ற இந்த ஒற்றை வார்த்தையின் பொருளை முழுமையாகப் புரிந்து கொண்டு, பயன்படுத்துபவர் நிச்சயம் பேறு பெற்றவர்களே!! இது சாமானியர்களும் மனிதப் பிறவியின் பயனை அடைவதற்காக அருளப்பட்ட உன்னத சாதனம்.

பொதுவாகவே ஒலி வடிவங்கள் ஒருவரது மனதிலும் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திறனுடையவை. நேர்மறை மற்றும் எதிர்மறையான சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒன்று. இசையின் மகத்துவம் அறியாதவர் யார்?. இறை நாமம் அல்லது மந்திரம் சொல்வது, நம் உடலில் நேர்மறையான விளைவுகளைத் தரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.



2.இன்னம்பூரான் - எனது இந்தியா


‘பிரிட்டனை உருவாக்கியவர்கள்’ (Making Britain) என்ற தலைப்பில் ஒரு இந்தியர் அந்த நாட்டின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் கொண்டாடப்படுகிறார். அவர் தான் இன்றைய தலை மாந்தர்.

மினூ மஸானி என்ற தேசாபிமானி ‘நமது இந்தியா’ (Our India)  என்ற நூலை 1940ல் எழுதினார். மக்கள் விரும்பிப்படித்த நூல். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு தனது அபிமானங்களில் பல மாற்றங்களைக் கண்ட அவர் ‘இந்தியர்களாகிய நாம்’ (We Indians) என்ற நூலை 1989ல் எழுதினார்.  



3. திவாகர் - பாரதத்தின் பிற மாநிலங்களில் தமிழர் குடியேற்றம்

இருபதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோதும் சரி, அதற்குப் பிறகு சுதந்திரமடைந்த இந்தியாவிலும் சரி, வேலை இல்லா திண்டாட்டம் என்ற ஒன்று மக்களைப் பாடாய்ப் படுத்தியதால் எங்கெல்லாம் வேலை இருக்கின்றதோ எங்கெல்லாம் வாழ்வாதாரத்துக்கு சந்தர்ப்பங்கள் தோன்றுகின்றனவோ எங்கெல்லாம் சென்றால் உழைப்பால் பசியை வெல்லலாம் என்று தோன்றியதோ அங்கெல்லாம் மக்கள் மொழி பேதமில்லாமல் குவியத் தொடங்கினர் என்பதை யாரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் இக்கட்டுரை இப்படி சமீபகாலங்களில் நடைபெற்ற மாற்றங்களை விட்டு சற்று ஆழமாக திரும்பிப்பார்க்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது. 


4. பவள சங்கரி - பாரதத்தின் 

தினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காள நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உரிமையுடன் உச்சரிக்கப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த பெயர் என்றால் அது ராணி பவானி என்பதுதான்.  தன்னுடைய நிர்வாகத் திறன், அரசியல் செல்வாக்கு மற்றும் தாராள குணம்  மூலமாக இன்றும் அந்த மக்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். ரமாகந்தா என்ற ராஜ்ஷாகியைச் சேர்ந்த ஜமீந்தாரின் மனைவி இவர். ஜமீந்தார் ரகுநந்தன் அவர்களின் மகன் தான் ரமாகந்தா. 



உரையாடல்

தனிமை இரக்கமா அல்லது இனிமையா - சிவகாமிப் பாட்டியின் தத்துவக் கீறல்கள் - டாக்டர் நாகராசன் வடிவேல்.

புதிய ஆண்டில் சிவகாமிப் பாட்டி தத்துவம் சொல்கின்றார். இவரின் தத்துவத்தை வாசிக்க.... இங்கே செல்க!


வாழ்த்துச் செய்தி

தமிழ்த்தேனியார் வழங்கும் புத்தாண்டு செய்தி.

கால  ஓட்டம்  ,காலச் சுழற்சி  கனவேகமாய் சுழன்று கொண்டிருக்கிறது.  நிறுத்த முடியாத, மீண்டும்  பெறமுடியாத  காலங்கள்.அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது, மறந்து விடாதீர்கள் இப்போதும்,எப்போதும்  ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமாய், இந்த    நிமிடத்திலிருந்தாவது  ஏற்கெனவே  செய்த தவறுகளைக் களைந்து  இனி செய்யப்போகும்  செயல்களை  இன்னும் சிறப்பாய்  செய்யப் பழகுவோம்.  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



குறள்

1. முப்பாலும் கலந்து - துரை.ந உ.



2. முனைவர் காளைராசன் - இரண்டு திருக்குறட்பாக்களுக்கான புதிய சிந்தனைகள் 

ஐயன் திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணைநலம்‘ என்ற அதிகாரத்தில்
“தெய்வந்  தொழாஅள்  கொழுநற்  றொழுதெழுவாள்
பெய்யெனப்  பெய்யும்  மழை“ (55)
என்று குறள் கூறியுள்ளார்.

Inline image 1

2014 ஆங்கிலப் புத்தாண்டு இனிய அனுபவங்களை வழங்கட்டும். அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]



THF Announcement: ebooks update: 1/1/2014 *சூரைமாநகர் புராணம்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

இந்த சூரைமாநகர் புராணத்தை எழுதிடப் பொருளுதவி வழங்கிய இலக்குமணச் செட்டியாரது வம்சாவழியினர் காரைக்குடியில் எண்.7 லெட்சுமணன் செட்டியார் வீதியில் வசித்து வரும் (கி.சொக்கலிங்கம் செட்டியாரின் மனைவி) முனைவர்.வள்ளி அவர்கள்.
முனைவர் நா.வள்ளி அவர்களது வழிகாட்டுதலின்படி இந்நூல் இவரது ஆய்வுமாணவரான அழகப்பா பல்கலைக்கழகத் துணைப்பதிவாளர் முனைவர்.கி.காளைராசன் அவர்களால் தட்டச்சு செய்யப்பெற்று இணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

புராணம் எழுதிய வரலாறு

பிள்ளையார்பட்டிக் கோயில் காரைக்குடி முருகப்பச் செட்டியார் மகன் லெட்சுமணன் செட்டியாருக்குப் பிள்ளை வந்தவர் வேகுபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் செட்டியார்.

முரு.லெட்சுமணன் செட்டியாருக்குக் கிருஷ்ணன் செட்டியார் பிள்ளை வந்ததை (தத்து எடுத்ததை) ஒரு ஓலைச்சுவடியில் எழுதிப் பதிவு செய்துள்ளனர்.  இந்த ஓலைச் சுவடி ‘ஆவணம்‘ இதழில் பதிவாகியுள்ளது. பிள்ளை வந்த முரு.லெ.கிருஷ்ணன் செட்டியார் அவர்கள்சிவகங்கை சமஸ்தானத்திலிருந்து சூரையூர் கோயிலை 99 வருடங்களுக்கு ஒப்பந்தமாகப் பெற்று திருப்பணிகள் செய்தார். சூரையூர் சூரைமாநகர் என்றானது.  சூரைமாநகர் கோயிலில் தனது தந்தையின் சிலாவுருவத்தையும் தாயார் லெட்சுமி ஆச்சி அவர்களது சிலா உருவத்தையும் வைத்துள்ளார்.  கோயில் திருப்பணிகள் எல்லாவற்றையும் செவ்வனே முடித்து கும்பஅபிஷேகம் நடத்தியுள்ளார்.இக்கோயிலுக்கு அருகில் உள்ள கண்மாய்க்குக் கிருஷ்ணன் செட்டியார் கண்மாய் என்ற பெயர் இன்றும் உள்ளது.

இவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை அழைத்து வந்து சூரைமாநகர்ப் புராணத்தைப் பாடுமாறு வேண்டிக் கொண்டார். இவரது வேண்டுகோளை ஏற்று மகாவித்வான் அவர்கள் சூரைமாநகர்புராணம் பாடினார். ஒரு பாடலுக்கு ஒருபணம் வீதம் பிள்ளையவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார் கிருஷ்ணன் செட்டியார். அவர் சிறந்த அறப்பணிகளை நிறையச் செய்துள்ளார் என்று இவரது கொடைத்தன்மையைப் பாராட்டி பிரிட்டீஸ் விக்டோரியா மகாராணியார் 1877ஆம் ஆண்டு ஒரு பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளார். இவரது கொடைத்தன்மையைப் பாராட்டி நாட்டுப் புறப் பாடல் ஒன்றும் உள்ளது.காரைக்குடியில் லெட்சுமணன் செட்டியார் பெயரில் ஒரு வீதி உள்ளது.

நூலை வாசிக்க..!

நூல் எண் 363

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 13/12/2013 *நாடார் குல மித்திரன் 1920 ஜனவரி (1)*

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஜனவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஜனவரிமாதம் வெளிவந்த இரண்டாம் முதல் இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


இந்த இதழின் உள்ளடக்கம்:

  • பால்ய விவாகத்தின் கெடுதி
  • தலத்தால் பெருமையா? குலத்தால் பெருமையா?
  • வேல்ஸ் இளவரசர் - இந்தியாவில் அவரது முதல் பிரசங்கம்
  • கடிதங்கள்
  • சென்னை சட்டசபை - முக்கியமான நடபடிக்கைகள்
  • நாடார் மகாஜன சங்கம் - 7வது கன்பரன்ஸ் - வரவு செலவு கணக்கு
  • குலவீரன்
  • சங்க விஷயங்கள்
  • பலதிரட்டு (சிறிய செய்திகள் திரட்டு)
  • கைது செய்யப்பட்ட முக்கிய ராஜீயத் தலைவர்கள்
  • மதுபான  மாண்பு
  • விளம்பரங்கள் (இங்கிலீஷ் காஸ் அடுப்பு, இரவில் மணிபார்க்கும் 8 மூலை ரேடியம் ரிஸ்ட்வாட்ச், பயோகிராப்)

மின்னாக்கம்: திரு.திருநீலகண்டன், (தொடர்பு - திருமதி திலகபாமா)
மின்னூலாக்கம்:முனைவர்.க. சுபாஷிணி

நூல் எண்: 362

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 21/11/2013 *சிறப்புப் பாயிரங்கள்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட நூல்/ தொகுப்பு:

சிறப்புப் பாயிரங்கள்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 361

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி



பழைய ஆலயத்தின் சிதைபடாத சிற்பங்கள் காட்சியாக மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 11/12/2013 *திருவெம்பாவை - அவிரோதி நாதர் இயற்றியது*

0 மறுமொழிகள்

வணக்கம்.

இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது.

நூல் பெயர்: திருவெம்பாவை - அவிரோதி நாதர் இயற்றியது
(புலவர் கு.பாலசுந்தர முதலியார் அவர்கள் உரையைத் தழுவியது)
வெளியீடு: திரு.கு.சக்ரவர்த்தி-திருமதி.பிரியகாருணி மணிவிழா வெளியீடு 1999


நூல் விபரம்: *அறிமுகப் பகுதி குறிப்புக்களின் படி.
திருநூற்றந்தாதி என்னும் அரிய நூலை எழுதிய அமர மகாகவி அவிரோதிநாதர் இயற்றிய நூல் இது. மார்கழி மட்டுமின்றி எல்லா காலத்திலும் வாசிக்கக் கூடிய ஒரு பாமாலை. இதில் தீர்த்தங்கரர்களைப் போற்றி பாக்கள் இயற்றப் பட்டுள்ளன.
இந்த நூல் 1963ல் அமரர் ஜீவபந்து அவர்களால் ஜினகாஞ்சி ஜைனத் தமிழ் இலக்கிய மன்றத்தினரால் புலவர் கு.பாலசுந்தர முதலியார் அவர்கள் உரையுடன் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1977ல் தஞ்சை ஆதிபகவன் ஜைன சேவா சமாஜத்தினரால் வெளியிடப்பட்டது.

குறிப்பாக வேறு பிரதிகளில் விடுபட்ட செய்யுட்களும் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் வருகின்ற முத்தென்ன வெண்ணகையாய்... வாழி அருகன் மலர்த்தாமரை போன்ற செய்யுட்கள் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை நினைவிருத்துகின்றன. வாசித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 360

நூலை வாசிக்க!


  • நூலை த.ம.அ மின்னாக்கத்திற்காக வழங்கியவர் திரு.இரா.பானுகுமார்
  • நூல் மின்னாக்கம்: டாக்டர் திருவேங்கடமணி
  • நூல் மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி



அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பிரம்மநந்தீஸ்வரர் கோயில்

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இவ்வாண்டு மார்ச் மாதம் சோழநாட்டிற்கு எனது பயணம் அமைந்ததில் ஒரு அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தது. என்னுடன் டாக்டர்.பத்மாவதியும், இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான பரந்தாமனும் கலந்து கொள்ள நாங்கள் செம்பியன் மாதேவி பள்ளிப் படை கோயிலைத் தேடிக்கொண்டு சென்றோம்.

காடுகளுக்குள்ளும், சிற்றூர்களிலும் தேடிக் கொண்டு எங்களை அழைத்து வந்த வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இப்பள்ளிப் படைக் கோயிலைக் காண முடியாத நிலையில் ஒரு சாலையின் மூலையில் இரண்டு மோட்டார் வண்டிகளை நிறுத்தி விட்டு 4 பேர் நின்றிருக்க அவர்களை விசாரித்தோம். அவர்களும் வாருங்கள் அழைத்துப் போகிறோம் என்று சொல்லி ஏறக்குறைய 500 மீட்டர் தூரம் மரங்களுக்கு இடையே நடந்து  ஒரு பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்று ஒரு கோயிலைக் காட்டினர்.

அது செம்பியன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் அல்ல. மாறாக கற்றளியாக மாற்றப்படாத ஒரு செங்கற்றளி கோயில்.




10ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் என்பதும் அங்கிருந்த ராஜராஜனின் கல்வெட்டுப் பகுதி பாறையும் இக்கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள உடன் உதவியது. கோயிலைச் சுற்றி அருமையான 10, 11ம் நூற்றாண்டு நாகக்கண்ணி, லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன.

உள்ளே பெரிய அகன்ற வடிவ பிரம்மநந்தீஸ்வரர் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.

இக்கோயில் சுதையில் செய்யப்பட்ட செங்கற்றளி கோயில். புணரமைப்பு பணிகள் ஏதும் நடைபெற வில்லை. ஆனால் கோயிலைப் பார்த்துக் கொண்டு 2 வயதான மனிதர்கள் அருகில் சில பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.




அழகான கிராமப்புற சூழலில் காய்கறி தோட்டங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. விரைவாக பராமரிப்பும் பாதுகாப்பும் புணரமைப்பும் தேவைப்படும் ஒரு கோயில் இது. தமிழக தொல்லியல் துறை அல்லது தமிழக பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களின் பாதுகாப்பு உடன் தேவைப்படும் ஒரு ஆலயம் இது. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களில் ஒன்று என்றாலும் மிகையில்லை.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2013/12/2014_7.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  Youtube

படங்களை 2 தொகுப்புக்களாக உருவாக்கியிருக்கின்றேன்.
படங்கள் - 1
படங்கள் - 2


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


மண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் சிதிலமடைந்த ஆலயம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையாக இருக்க வாய்ப்புள்ள ஒரு பழம் கோயிலைத் தேடிக்கொண்டு எங்கள் தேடல் அமைந்தது. இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் ஆய்வுமாணவர் பரந்தாமன், தொல்லியல் அறிஞர் டாக்டர்.பத்மாவதி, நான் ஆகிய மூவரும் நகரை விட்டு கடந்து சென்று வேப்பத்தூர் கிராமத்தை வந்தடைந்தோம். கோயில் இருப்பதற்கான தடயங்களே எனக்கு கண்களுக்குத் தென்படவில்லை.

சற்று அருகில் தான் நாம் செல்லவிருக்கும் கோயில் இருக்கின்றது எனச் சொல்லி பரந்தாமன் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார். தூரத்தில் ஒரு நெடிய கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. புதர்கள் மண்டிக்கிடக்க, ஆடுகள் அங்கும் இங்கும் மேய்ந்து கொண்டிருக்க என் கண்களுக்கு அதிசயக்காட்சியாக இக்கோயிலை முதன் முதலாக தரிசித்தேன்.


வீற்றிருந்த பெருமாள் கோயில்

அமர்ந்த நிலையில் விஷ்ணு இருப்பதாக அமைக்கப்பட்ட ஒரு கோயில். வீற்றிருந்த பெருமாள் என்பது ஆலயத்தின் பெயர். ஆனால் பெருமாள் சிலை ஆலயத்தில் இல்லை.

இந்த ஆலயத்திற்குச் தனிச்சிறப்புண்டு. அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு அல்லது அதற்கும் முன்னதாக கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் புணரமைக்கப்பட்டு மாற்றங்களைக் கண்டு பின்னர் விஜயநககரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் புணரமைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் சிறப்புக்களை இழந்த ஒரு கோயில் இது. இன்று ஒற்றைக் கோபுரத்துடன் நின்றாலும் அதன் உள்ளே தெரியும் ஓவியங்கள் இக்கோயிலை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றன. டாக்டர்.சத்தியமூர்த்தி தலைமையிலான ரீச் அமைப்பு இதன் புணரமைப்புப் பணியைத் தொடங்கியமை பற்றியும் பரந்தாமன் சொல்ல அறிந்தேன். அதன் தொடர்பிலான செய்தி http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/neglect-causes-ruin-of-murals/article463342.ece

தற்சமயம் கோயிலில் சிலைகள் யாதும் இல்லை. சுவர் சித்திரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஆய்வாளர்களுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. புத்த விகாரையை நினைவுறுத்தும் சிற்பங்களை பரந்தாமன் குறிப்பிட்டுக் காட்ட அவற்றையும் பார்க்க முடிந்தது. ஆதியில் ஒரு பௌத்த ஆலயமாக இருந்து பின்னர் வடிவம் மாறிய கோயிலாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. ஆய்வாளர்களின் தொடர்ந்து ஆய்வு இக்கோயிலின் ஆரம்ப நிலையைக் கண்டறிய உதவும்.


கோயிலின் பிரகாரப் பகுதி உள்ளே - டாக்டர்.பத்மாவதி, முனைவர்.க. சுபாஷிணி


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2013/12/2014_6.html
யூடியூபில் இப்பதிவைக் காண:  youtube

கோயிலின் பல படங்களை இங்கே தொகுத்திருக்கின்றேன். காண்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்

0 மறுமொழிகள்
வணக்கம்.


தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்ய மிக உறுதுனையாக இருந்த திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு,  திரு.ஆரூரன் ஆகியோருக்கு இவ்வேளையில் என் நன்றி.

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.com/2013/12/blog-post.html
யூடியூபில் இப்பதிவைக் காண:  Youtube

மேலும் புகைப்படங்கள் இங்கே

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்



பவள சங்கரி திருநாவுக்கரசு

நம் பழம்பெரும் பாரத நாட்டில், ‘மாதவம் செய்த தென் திசை’ என்று சமயப் பெரியோர்களால்  பாராட்டிப் புகழப்பெறும் சிறப்புடையது நம் தமிழ்நாடு. தொன்மைமிக்க நம் தமிழ்நாடு பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தேக் கொண்டதாயினும், சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன், சீரியச் சிற்பச் செல்வங்களையும் பெற்றுள்ள கோவில்களாலேயே நம் தமிழ்நாடு தனிச் சிறப்பெய்தி வானளவு உயர்ந்து நிற்கிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்கள் நம் தமிழ் நாட்டில் உள்ளவை எண்ணிலடங்கா.அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாரியூரில் அமைந்துள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் கட்டப்பட்ட காலத்தைக் கண்டறிய சான்றேதும் கிட்டவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் பல நூறாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும், பிற்காலங்களில் நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளது. 

இத்திருக்கோவிலின் இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால், நாற்புறமும் நெடிதுயர்ந்த மதிற்சுவர்களின் நடுவே பெரிய மைதானம் போன்ற இடம் இருக்கிறது. இதன் மையப் பகுதியில் காளிதேவியின் கற்கோவில் மண்டபம் அமைந்துள்ளது; இதன் உள்ளே பளிச்சென்ற பளிங்குக் கற்காளால் ஆன சுற்றுச் சுவர்களின் இடையில் அன்பே உருவான அன்னை, உருத்திர கோலத்தில், சிரசில் உருத்திரனை தாங்கியுள்ளக் கோலமாக, சிரசில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கொண்டத்துக் காளியின் திரு மேனி உருவச்சிலை, அருள் வடிவாக கொலுவிருக்கும் அற்புதக் காட்சி.  அம்மன் இங்கு, ஐயன் உருத்திரனின் திருமுகத்தைத்தம் சிரசில் தாங்கி, உருத்திர காளியாகக் காட்சியளிப்பதைக் காணலாம். 


 ஆலயத்தின் நேர் எதிராக, அம்மனின் அருட்பார்வைபடும் வண்ணம் , 40 அடி நீளம் கொண்ட அக்னிகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. இத்தலத்தில் திருக்கொண்டம் இறங்குதல் மிகவும் விசேசம். இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை இது! இந்த அக்னிக் குண்டத்தின் முனையில் நெடிதுயர்ந்த விளக்குக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தாற் போன்று வடக்கு வாயிலுக்கு அருகே ஒரு மண்டபமும், மேற்கு புறம் கல்யாண விநாயகர் திருமேனியும் அருள் பாலித்த வண்ணம் வீற்றிருக்கக் காணலாம். அம்மன் சந்நதியின் வடக்கு வாயிலில் அழகான திருமேனி உருவச் சிலையுடன் காவல் தெய்வங்கள் காட்சியளிக்கக் காணலாம். உள்ளே நுழைந்தால் எதிர் எதிராக அழகாக வடிவமைக்கப்பட்ட நான்கு கற்தூண்கள் உள்ளன. அங்கு மேற்கு பார்த்தவாறு மகாலட்சுமி  மற்றும் சரசுவதி திருவுருவங்களும், மற்றும் கிழக்கு முகமாக இராஜராஜேஸ்வரி மற்றும் பத்ரகாளி திருவுருவங்களும் காட்சியளிக்கின்றன. கருவறையின் முற்பகுதியில் வடக்கு நோக்கியபடி, பிராம்மி, சாமுண்டியும், கிழக்குச் சுவரில் மகேஸ்வரி, கௌமாரியும், தெற்குச் சுவரில் வாராகியும், மேற்குச் சுவரில் வைஷ்ணவி, இந்திராணி ஆகிய மூர்த்தங்கள் சுதைச் சிற்பங்களாகவும், அருள்பாலிக்கின்றனர். கருவறையினுள் கிழக்கு முகமாக விநாயகர் திருவுருவச் சிலை அமைந்துள்ளது.  முன்புற வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமியின் அழகான வடிவமும், அதன் மேல் கொண்டத்துக்காளி அன்னையும் சுதை வடிவில் வீற்றிருந்து அருள் பாலிப்பதைக் காணலாம். உற்சவ மூர்த்தமான சின்னம்மனை கருவறையின் இடதுபுறம் ஐம்பொன் மூர்த்தமாகப் பளபளக்கக் காணலாம். 

கொங்கு நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கொடை வள்ளல்களில் ஒருவரான கோபிச்செட்டிப் பிள்ளான் என்ற பாரியூர் அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்ற அவரின் பெயராலேயே இவ்வூர் கோபிச்செட்டிப்பாளையம் என்று வழங்கப்படுகிறது என்கிறது வரலாறு! 

பல்லாண்டுகளுக்கு முன்னர், மந்திர சக்தியும், அன்னை மீது அளவு கடந்த பக்தியும் கொண்டு, சூரராச சித்தர் என்ற ஒரு மகான் இங்கு வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அன்னையின் காட்சி அருளப்பெற்ற அற்புத மகானான இவர், அன்னையின் பக்தர்களின் மனச்சஞ்சலங்களையும், துயரங்களையும் போக்கும் பொருட்டு தம் மந்திர சக்தியைப் பயன்படுத்தி, அவர்களின் குறைகளை வெகு காலத்திற்கு நீக்கிக் கொண்டிருந்தார் என்கிறது வரலாறு. அம்மன் ஆலயத்தின் கீழ்ப்புறத்தில் உள்ள பட்டாரி என்னும் கோவிலின் அருகில் இந்த மகானான சூரராச சித்தரின் சமாதி அமைந்துள்ளது.


இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த வழிப்பாடு என்றால் அது கோவிலில் குண்டம் இறங்குதல். 40 அடி நீளம் கொண்ட அந்த திருக்கொண்டத்தில், மரக்கட்டைகளை மலை போலக்குவித்து, தீ மூட்டி, அதில் அன்னையை வேண்டி, தலைமை பூசாரி முதலில் இறங்கி நடந்து செல்ல, பின் இலட்சக் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றும் முகமாக அக்கினிக் குண்டத்தில் இறங்கி நடப்பார்கள். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடக்கும். ஆண், பெண், சிறுவர்கள் என அனைவரும் பூமிதியில் நடந்து செல்லும் காட்சி காணக்கிடைக்காத அதிசயக் காட்சியாகும். 


இத்தலத்தில் உள்ள பிரம்மாண்ட சிலை வடிவமான முனியப்ப சுவாமியும் புத்திர பாக்கியம் அருளும் மிகச் சக்தி வாய்ந்த தெய்வம் என்கின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் 12 குடம் தண்ணீர் ஊற்றி கர்ம சிரத்தையுடன், ஐயனை வழிபட்டால் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இது  தவிர முனியப்ப சுவாமியை வழிபடுவோர் பேய் பிசாசு தொல்லைகளிலிருந்து விடுபடுவர், என்றும் இவரது திருவடிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை என்றும் ஆழ்ந்த நம்பிக்கை நிலவுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இத்தலத்தில் திருவிழா இலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ, மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. கோயிலில் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் விழா துவங்குகிறது.  அஷ்டதிக் பாலர்கள் வழிபாடு, அம்மன் புறப்பாடு, குதிரை வாகனக்காட்சிகள் நடைபெறுகிறது. பின் வசந்தம் பொங்கல், மஞ்சள் கிணறு நிரப்புதல், தோரணம் கட்டுதல், இரவு வசந்தம் பொங்கல் விழா , விழாவுக்கு மஞ்சள் இடித்தல், பரிவட்டம் கட்டுதல், இரவு திருக்கல்யாண வைபோகம், வீரமக்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடுதல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடைபெறுகிறது. வாணவேடிக்கையுடன்,  வெள்ளை யானையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் புஷ்பப் பல்லாக்கில் திருவீதி உலா வருகிற காட்சியும் நெஞ்சம் நிறைக்கும்.

 குண்டம் திறப்பு, பூ வார்த்தல், சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீர மக்களுக்கு எண்ணை வழங்குதல், படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், படைக்கலம் எடுத்தல், இரவு 10 மணிக்கு குதிரை படைக்கலம் புறப்படுதல், படைக்கலம் சன்னிதி அடைதல், இரவு 11 மணிக்கு பரிவார மூர்த்திகள் கன்னிமார் -கருப்பராயன் முனீசுவரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் தொடர்ந்து  நடைபெறுகிறது . பின்  அதிகாலை 2 மணிக்குக் காப்புகட்டுதல்,  பூசாரிகள் திருக்கொண்டம் இறங்குதல், அடுத்து, வீரமக்கள் குண்டம் இறங்குதல், பின்  குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிசேகம், அம்மனுக்கு மகா தீபாராதனைகள் நடக்கின்றது. பூத வாகன காட்சியுடன், அம்மன் புறப்பாடு, மதியம் அம்மன்  சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை  திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் போன்ற நிகழ்வுகள் வழமையாக நடைபெறுகிறது. 

இறுதியாக, அம்மன் சேச வாகனம்,  புலி வாகனங்களில் திருவீதி உலா வருதல், பின் மகா தரிசனம், மறு பூசையுடன் அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், ஆகிய நிகழ்வுகளுடன் விழா இனிதே முடிவடைகிறது!


மண்ணின் குரல்:டிசம்பர் 2014: கீழைப்பழையாறை

0 மறுமொழிகள்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நூலை வாசித்தவர்களுக்குப் பழையாறை எனும் ஊரின் பெயர் நன்கு அறிமுகமான ஒன்றே! அருண்மொழித்தேவன் குந்தவை தேவியின் அன்புடனும் அரவணைப்புடன் வாழ்ந்த ஒரு ஊர். சோழ சாம்ராஜ்ஜியத்தில் சுந்தர சோழன் காலத்திலும், உத்தம சோழன் காலத்திலும், அதன் பின்னர் மாமன்னன் ராஜராஜசோழன் காலத்திலும், பின்னர் ராஜேந்திர சோழன் காலத்திலும் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய ஒரு ஊர். கோட்டையும் கோபுரங்களுமாக அரச குடும்பத்தினரின் செல்வச் செழிப்பு திகழ பெருமையுடன் இருந்த ஒரு அழகிய நகரம் பழையாறை.

இந்த நகரின் ஸ்ரீ சோமநாதசுவாமி - ஸ்ரீ சோமகமலாம்பிகை கோயிலின் பதிவே இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் பெருமை மிகு வெளியீடாக வலம் வருகின்றது.

இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்து மிகவும் ஆதரவு நல்கிய திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனம் நிறைந்த நன்றி.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2013/12/2014.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  http://www.youtube.com/watch?v=SrHAfug_wJU&feature=youtu.be

மேலும் புகைப்படங்கள்:
பகுதி 1
பகுதி 2


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


மண்ணின் குரல்:நவம்பர் 2014: அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம்

0 மறுமொழிகள்
வணக்கம்.

மண்னின் குரல் வெளியீடாக இன்று ஒரு விழியப் பதிவு வெளிவருகின்றது.

அருள்மிகு பன்னாரி அம்மன் கோயிலுக்கு இவ்வாண்டு மார்ச் மாதம் சென்றிருந்த போது செய்த பதிவு இது. காட்டிற்குள் இருக்கும் பன்னாரி அம்மன் கோயிலுக்குள் செல்ல இயலாத போதும் சாலையோரத்தில் அமைந்திருக்கும் பன்னாரி அம்மன் கோயிலை மட்டும் தரிசித்து வந்தோம்.



இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகப்பிரசித்தி பெற்றது.

ஆலயத்தின் வாசல் புறத்தில் உப்பு கொட்டி வைத்திருக்கின்றனர். வேண்டுதலுக்காக வருகின்ற பக்தர்கள் தாங்களும் உப்பு கொட்டி வேண்டுதல் செய்கின்றனர். சற்று தள்ளி ஒரு தனிப்பகுதியில் சிறிய பன்னாரி அம்மன் உருவச் சிலையும் ஊஞ்சலும் இருக்கின்றது. இங்கு பெண்கள் வந்து ஊஞ்சலை ஆட்டி வேண்டுதல் செய்து செல்கின்றனர்.



இந்தப் பதிவினை நான் செய்ய மிக உறுதுனையாக இருந்தவர் திருமதி.பவளசங்கரி. அவர் கணவருக்கும், நம் நண்பர் ஆரூரனுக்கும் இவ்வேளையில் என் நன்றி.

தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இவ்விழியப்பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2013/11/blog-post_28.html

யூடியூபில் இதே பதிவைக் காண:http://www.youtube.com/watch?v=iZSDtSqL9S8&feature=youtu.be

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்:நவம்பர் 2014: கோனேரிராஜபுரம்

0 மறுமொழிகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

கோனேரிராஜபுரம் - திருநல்லமுடையார் ஆலயம்



தமிழகத்தின்  சிறப்புக்களில் தனியிடம் பெறுபவை சோழர்கால ஆலயங்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பரவி இருந்த சமையத்தில் இன்றைய தமிழ் நாட்டின் எல்லையையும் கடந்து பல இடங்களுக்கு விரிவாக சோழ ஆட்சி பரவிய இடங்களிலெல்லாம் சோழர்கள் கோயிலைக் கட்டி இறை வழிபாட்டை, குறிப்பாக சைவமும் வைணவமும் செழிக்கச் செய்தனர். சோழ ராஜ்ஜியத்தில் தன்னிரகரில்லாத புகழுக்குறிவயர் செம்பியன் மாதேவியார். இவர் கட்டிய கோயில்கள் பல. செங்கற்ற்ளியாக இருந்த பல கோயில்களைப் புணரமைப்பு செய்து கற்றளிகளாக மாற்றிய பெருமை இந்த அம்மையாரைச் சேரும். அந்த வகையில் இன்றைய விழியப் பதிவாக அமைகின்ற கோனேரிராஜபுரம், திருநல்லமுடையார் ஆலயம் செம்பியன் மாதேவியார் கட்டிய ஒரு கோயில் என்பது தனிச் சிறப்பு.

சோழநாட்டின் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரிலிருந்து ஏறக்குறை 12 கிமீ தூரத்தில் இக்கோயில் இருக்கின்றது.  கண்டராதித்த சோழனுக்குப் பின்னர்,  உத்தம சோழர் தொடங்கி ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலம் வரை நெடுநாட்கள் வாழ்ந்தவர் இவர். செம்பியன் மாதேவியார் ஒரு சிறந்த சிவபக்தை.

சோழ நாட்டில் செம்பியன் மாதேவியார் திருப்பணி செய்த ஆயங்கள் பல. இவர் எழுப்பிய கற்றளி ஆலயங்களுக்கு தனி பாணி இருக்கின்றது என்கின்றார் தமிழக் தொல்லியல் துறை ஆய்வாளர்.டாக்டர்.பத்மாவதி அவர்கள். இந்தக் கோயில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பாதுகாக்கப்படும் ஒரு கோயில் என்பதும் ஒரு சிறப்பு.

இக்கோயிலிலேயே தன் கணவர் கண்டராதித்த சோழன் திருநல்லமுடையாரை வணக்குகின்ற வடிவில் ஒரு சிற்பத்தை அமைத்து வைத்திருக்கின்றார். சிதைவுகள் ஏதுமின்றி சிற்பங்கள் அழகுற காட்சியளிக்கின்றன.

இந்த ஆலயத்தின் அனைத்து கல்வெட்டுக்களும் படியெடுக்கப்பட்டு தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

ஆலயத்தின் மற்றுமொரு தனிச்சிறப்பு இங்குள்ள சுவர் சித்திரங்கள். பிரமிக்க வைக்கும் கலை அழகு பொருந்திய சிற்பங்கள் இவை.

இப்பதிவு 12 நிமிடம் நீளம் கொண்டது. பதிவின் 3:02 நிமிடம் தொடங்கி இக்கோயில் பற்றியும் செம்பியமன் மாதேவி பற்றியும் டாக்டர்.பத்மாவதி அவர்கள் வழங்கும் சிறு விளக்கமும் இடம்பெறுகின்றது. பதிவின் 7ம் நிமிடம் தொடங்கி சுவரோவியங்களைக் காணலாம்.

இதனை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்து மிகவும் ஆதரவு நல்கிய திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனம் நிறைந்த நன்றி.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2013/11/blog-post.html
யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t5fc2dxBlYI&feature=youtu.be


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


THF Announcement: ebooks update: 23/11/2013 *ஜைன மார்க்க தரிசனம்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது.


நூல் பெயர்: ஜைன மார்க்க தரிசனம்
நூல் ஆசிரியர்: கு.பாலசுப்பிரமணியனார்
வெளியீடு: ஸ்ரீ பார்சுவநாதர் இலக்கிய மன்றம் - திண்டிவனம்

நூல் விபரம்: ஜைன தர்மங்களையும் தத்துவங்களையும் முறையாகவும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல்  என்னும் யுக்தியுடன் எழுதப்பட்ட நூல். இதில்

  • ஜைன சமயத் தொன்மை
  • வைதீக சமயங்களும் அவற்றுடன் மாறுபடும் சமயங்களும்
  • ஜைன சமயம் நாத்திக சமயமா?
  • ஜைன தரிசனம்
  • சித்தர்களின் இலக்கணங்கள்
  • தீர்த்தங்கரர்கள்
  • அஹிம்சை(அ)ஜீவகாருண்யம்
  • சமவசரணத்தின் தோற்றம்

என்ற தலைப்புக்களில் குறிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 359

நூலை வாசிக்க!

நூலை த.ம.அ மின்னாக்கத்திற்காக வழங்கியவர் திரு.இரா.பானுகுமார்
நூல் மின்னாக்கம்: டாக்டர் திருவேங்கடமணி
நூல் மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 21/11/2013 *தனிவிருத்தங்கள்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

தனிவிருத்தங்கள்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 357

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம் & மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி



பழைய ஆலயத்தின் சிதைபடாத சிற்பங்கள் காட்சியாக மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


THF Announcement: ebooks update: 02/11/2013 *Tanjavur Paintings in Koviloor*

2 மறுமொழிகள்
வணக்கம்.

தீபாவளி சிறப்பு வெளியீடாக தமிழகத்தின் கோவிலூர் ஆதீன வெளியீடாக வந்த கோவிலூர் தஞ்சாவூர் ஓவியங்கள் எனும் நூல் மின்னூலாக வெளிவருகின்றது.

கோவிலூர் ஆதீனகர்த்தரின் வழிபாட்டு மண்டபத்தை அலங்கரிங்கும் இந்த ஓவியங்களை இங்கு வரவழைத்து மடத்தை அழகு செய்தவர் அப்போதைய மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ வீரசேகர ஞான தேசிக சுவாமிகள். அப்போது மடத்தில் இப்படங்களைப்  புகைப்படமாகப் பதிவு செய்தவர் பின்னர் இம்மடத்தின் 12 சன்னிதானமாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீலஸ்ரீ நாச்சியப்ப சுவாமிகள் ஆவார்.

உயரிய தரம் வாய்ந்த இந்தக் கலைப்படைப்புக்களைச் சாதாரணமாக யாவரும் பார்க்கக்கூடிய வாய்ப்பு இல்லை. இந்த ஓவியங்களைப் புகைப்படமாக்கி அதனை தொகுத்து நூலாக்கி வெளியிட்ட பெருமை கோவிலூர் மடத்திற்கே சேரும்.

நூலை வாசிக்க!

நூல் எண்: 356

மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, உதவி: திரு.சொ.வினைதீர்த்தான்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

இந்த நூலை தமிழ் மரபு அறகக்ட்டளை மின்னூலாக வெளியிட அனுமதி தந்த கோவிலூர் ஆதீனத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

சில படங்கள் நூலிலிருந்து..














அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]







மஞ்சள் நீர் வாசகமுறி

0 மறுமொழிகள்
டாக்டர்  வள்ளி சொக்கலிங்கம்

தமிழர்களிடையே எத்தனை எத்தனையோ மரபுகள் பின்பற்றப்படுகின்றன.   தமிழகத்தில் பல்வேறு சமூகத்தினர் பல்வேறுவிதமான சமூக பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருகின்றனர்.

நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்படும் நகரத்தார்களில் ஆண்பிள்ளை யில்லாதவர்கள் வேறுஒரு குடும்பத்திலிருந்து ஒரு ஆண்பிள்ளையைத் ‘தத்து‘ எடுத்துக் கொள்கின்றனர். அதாவது ‘சுவீகாரம்‘ எடுத்துக் கொள்கின்றனர்.  இவ்வாறு தத்து எடுத்துக் கொள்ளும்போது எழுதிக் கொள்ளும் பத்திரத்திற்கு “மஞ்சள் நீர் வாசகமுறி“ என்று பெயர்.

பிள்ளையார்பட்டிக் கோயில், காரைக்குடி முருகப்பச் செட்டியார் மகன் லெட்சுமணன் செட்டியாருக்குப் பிள்ளை வந்தவர் வேகுபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் செட்டியார்.

முரு.லெட்சுமணன் செட்டியாருக்குக் கிருஷ்ணன் செட்டியார் பிள்ளை வந்ததை (தத்து எடுத்ததை) ஒரு ஓலைச்சுவடியில் எழுதிப் பதிவு செய்துள்ளனர்.  இந்த ஓலைச் சுவடி ‘ஆவணம்‘ இதழில் பதிவாகியுள்ளது.







பிள்ளை வந்த முரு.லெ.கிருஷ்ணன் செட்டியார் அவர்கள், சிவகங்கை சமஸ்தானத்திலிருந்து சூரையூர் கோயிலை 99 வருடங்களுக்கு ஒப்பந்தமாகப் பெற்று திருப்பணிகள் செய்தார். சூரையூர் சூரைமாநகர் என்றானது.  சூரைமாநகர் கோயிலில் தனது தந்தையின் நினைவாக அவரது சிலாவுருவத்தையும் தாயார் லெட்சுமி ஆச்சி அவர்களது சிலா உருவத்தையும் வைத்துள்ளார்.  கோயில் திருப்பணிகள் எல்லாவற்றையும் செவ்வனே முடித்து கும்பஅபிஷேகம் நடத்தியுள்ளார்.
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கண்மாய்க்குக் கிருஷ்ணன் செட்டியார் கண்மாய் என்ற பெயர் இன்றும் உள்ளது.

இவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை அழைத்து வந்து சூரைமாநகர்ப் புராணத்தைப் பாடுமாறு வேண்டிக் கொண்டார். இவரது வேண்டுகோளை ஏற்று மகாவித்வான் அவர்கள் சூரைமாநகர்புராணம் பாடினார். ஒரு பாடலுக்கு ஒருபணம் வீதம் பிள்ளையவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார் கிருஷ்ணன் செட்டியார்.

அவர் சிறந்த அறப்பணிகளை நிறையச் செய்துள்ளார் என்று இவரது கொடைத்தன்மையைப் பாராட்டி பிரிட்டீஸ் விக்டோரியா மகாராணியார் 1877 ஆம் ஆண்டு ஒரு பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளார்.





இவரது கொடைத்தன்மையைப் பாராட்டி நாட்டுப் புறப் பாடல் ஒன்றும் உள்ளது.

காரைக்குடியில் லெட்சுமணன் செட்டியார் பெயரில் ஒரு வீதி உள்ளது.

கிருஷ்ணன் செட்டியாரின் வம்சாவழியினர்
1)முருப்பச் செட்டியார் மகன் லெட்சுமணன் செட்டியார்.
2) முரு. லெட்சுமணன் செட்டியார் மகன் கிருஷ்ணன் செட்டியார்.
3) முரு.லெ.கிருஷ்ணன் செட்டியார் மகன் சொக்கலிங்கம் செட்டியார்.
4) முரு.லெ.கி.சொக்கலிங்கம் செட்டியார் மகன் கிருஷ்ணன் செட்டியார்.
5) முரு.லெ.கி.சொ. கிருஷ்ணன் செட்டியார்மகன் சொக்கலிங்கம் செட்டியார்.
முரு.லெ.கி.சொ.கி.சொக்கலிங்கம் செட்டியாரின் மனைவி முனைவர்.நா.வள்ளி அவர்கள். இவர்களது பெருமுயற்சியால்
2001ஆம் ஆண்டில் சூரைமாநகர் கோயிலுக்கு மீண்டும் கும்பஅபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
6) இவர்களுக்கு இரண்டு மகன்கள் தம்பு, கண்ணன். ஒரு மகள்.

நன்றி: முனைவர் காளைராசன்

கட்டுரை
மஞ்சள் நீர் வாசகமுறி
(நா.வள்ளி, காரைக்குடி)

இல்லறத்தைச் சிறக்கச் செய்யும் மக்கட்பேறு இல்லாதவர்கள் இன்னொருவர் பெற்ற பிள்ளையை எடுத்து வளர்ப்பது என்பது சமுதாயத்தில் தொன்று தொட்டுக் காணப்படுகின்ற வழக்கம்தான்.  தேவகி பெற்ற கண்ணனை, யசோதை தன் மகனாகச் சிறப்புடன் வளர்ப்பதைக் கண்ட ஆய்ச்சியர்கள் “தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ?“ என்று வியப்பதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார்.

பிள்ளையை எடுத்து வளர்த்தலைத் ‘தத்து எடுத்தல்‘ என்பர்.  அப்பிள்ளைக்குத் தத்துப் பிள்ளை அல்லது தத்துப் புத்திரன் என்று பெயர்.  இவ்வழக்கம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.  அவர்கள் இதைச் ‘சுவீகாரம் செய்தல்‘ அல்லது ‘பிள்ளை கூட்டுதல்‘ என்று குறிப்பிடுகின்றனர்.  பிள்ளை கூட்டும் சடங்கைத் தங்கள் குலமுறைப்படியும் சட்டப்படியும் செய்கின்றனர்.

பெரும்பாலும் திருமணப் பருவத்திலுள்ள ஆண்பிள்ளையைத்தான் தங்கள் வாரிசாகக் கூட்டுகின்றனர். பெண்பிள்ளையைச் சுவீகாரம் செய்யும் வழக்கம் இல்லை.  ஒருவருக்குப் பெண் குழந்தைகள் இருந்தாலும் தங்கள் குடும்பப் பெயர் விளங்க வேண்டும் என்பதற்காக ஆண் பிள்ளையைச் சுவீகாரம் செய்து கொள்ளுகின்றனர்.  பிள்ளை கூட்டிக் கொள்ளும்போது தங்கள் குடும்பப் பெயரை அவனுக்கு இட்டுச் சட்டப்படி பதிவு செய்கின்றனர்.

நகரத்தார்களிடையே ஒன்பது கோயில் பிரிவுகள் காணப்படுகின்றன.  ஒரு கோயில் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிரிவைச் சேர்ந்த குடும்பத்திலிருந்துதான் பிள்ளையைக் கூட்டிக் கொள்கின்றனர்.  சுவீகாரம் செய்து கொள்ளும் போது பிள்ளையைப் பெற்றவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைக்கு ‘மஞ்சள் நீர்‘ கொடுத்துக் குடிக்கச் செய்து, பிள்ளையைக் கூடிக் கொள்ளும் பெற்றோரிடம் ஒப்படைப்பது முக்கியச் சடங்காக நடைபெறுகிறது.

காரைக்குடி முரு.லெ.கி.சொ. குடும்பத்தாரிடம் ஓர் ஓலைச் சுவடி உள்ளது.  அந்த ஓலைச் சுவடி ஒரு நகரத்தார் குடும்பத்தார் சுவீகாரம் செய்து கொண்ட செய்தியைக் குறிப்பிடுகிறது.  கி.பி.1854- இல் நடந்த நிகழ்ச்சி.  நகரத்தார் வசிக்கும் ஊர்களுள் ஒன்றான வேகுப்பட்டியில் பிள்ளையார்பட்டிக் கோயிலைச் சேர்ந்த ஒரு குடும்பத்திலிருந்து கிருட்டிணன் என்பவரை காரைக்குடி பிள்ளையார்பட்டிக் கோயிலைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் தங்கள் வாரிசாகக் கூட்டிக் கொண்டுள்னர்.  அதைக் குறித்து இரு குடும்பத்தாரும் ஓர் உடன்படிக்கை முறி எழுதிக் கொண்டுள்ளனர்.   பிள்ளை கூட்டிக் கொள்பவருக்குப் பிற்காலத்தில் குழந்தைகள் பிறந்தால் குடும்பச் சொத்துக்களை எவ்வாறு பிரித்துக் கொள்வது, வளர வந்த பிள்ளைக்குத் தாய்மாமன் சடங்குகள் யார் செய்து போன்ற செய்திகள்  தீர ஆலோசித்துத் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.  ஓலைச் சுவடி இதை ‘மஞ்சள் நீர் வாசக முறி‘ என்று குறிப்பிடுகிறது.  இறுதியில் இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கையெழுத்திட்டுத் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர்.

“ஆனந்த வருஷடம் கார்த்திகை மீ. 23உ கல்வாச நாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணியூர் மருதங்குடியான ராஜநாராயணபுரத்தில் பிள்ளையார்பட்டி திருவேட்பூருடையான் முருகன் செட்டி லெட்சுமணனுக்கு இவ்வூர் யின்னபடி மேற்படிபுரம் உடையான் நல்லகருப்பன் செட்டி கருப்பாத்தான் மகன் கிஷ்ட்னனை மஞ்சள் நீர் பெத்த புத்திரனாக பிள்ளைவிட்ட படியினாலே லெட்சுமணன சீட்டு கொட்டி தேவதானம் கோயில் குளம் சகலமும் கல்லும் புல்லும் பூமியும் சந்திராதித்தர் உள்ள வரைக்கும் பரம்பரையாக கிருட்டினன் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவும்.  இனிமேல் லெட்சுமணனுக்குப் பிள்ளை பிறந்தால்  கிருஷ்டினனுக்கு ஒரு பங்கும் பிறக்கிற பிள்ளைகளுக்கு ஒரு பங்குமாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளவும் பிள்ளைகளுக்கு கல்யாணம் புதுமை சீதனம் பொதுவில் செய்கிறது.  லெட்சுமி சீதனம் பூசனம் சகலமும் பொதுவில் வாங்கிக் கொள்ளுகிறது.  கிருஷ்ணனுக்கு மாமச்சடங்கு சாத்தன் செட்டி பெரிய கருப்பன் உள்ளிட்டார் செய்கிறது.  முருகன் செட்டி ராமநாதன் உள்ளீட்டாரும் நல்லகருப்பன் செட்டி கருப்பாத்தான் மகன் உள்ளிட்டாரும் சாத்தப்ப செட்டி பெரிய கருப்பன் உள்ளிட்டாரும் சின்னான் செட்டி சேக்கப்பன் உள்ளிட்டாரும் சம்மதித்து சொல்ல இந்த வாசகமுறியெழுதினேன்.

இவ்வூரில் யின்னபடி யின்னபுரம் உடையான் வெங்கிடாசலம் செட்டி சிதம்பரம் கையெழுத்து


  • முருகன் செட்டி லெட்சுமணன்
  • முருகன் செட்டி ராமநாதன் உள்ளிட்டார்
  • மேற்படி ராமநாதன்
  • நல்ல கருப்பன் செட்டி கருப்பாத்தான்
  • மேற்படி அண்ணாமலை உள்ளிட்டார்
  • சின்னான் செட்டி சேக்கப்பன் உள்ளிட்டார்
  • சாத்தன் செட்டி பெரியகருப்பன் உள்ளிட்டார்.


தட்டச்சு உதவி

கி.காளைராசன்


மலேசியத்தமிழர்களின் சரிதம் - அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு

0 மறுமொழிகள்
மலேசிய அரசியலில் மறக்க முடியாத ஒரு பெயர் என்றால் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களை நிச்சயம் குறிப்பிடலாம். சுதந்திர மலேசியாவின் அமைச்சரகத்தில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற புகழைப் பெறுபவர்; மலேசிய இந்தியர் காங்கிரஸின் (ம.இ.க) நீண்ட காலம் தலைமைப் பதவியை ஏற்று நற்சேவைகள் பல ஆற்றியவர் இவர். மிக சாதாரண சூழலில் வளர்ந்து ஏழ்மையில் வளர்ந்து படிப்படியாக தன்னை தானே உயர்த்திக் கொண்டவர். மலேசியா மட்டுமல்லாது இந்தியா ஏனைய ஆசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான ஒரு அரசியல் தலைவர்.

இவரை தமிழ் மரபு அரக்கட்டளைக்காக நான் வீடியோ பதிவு ஒன்றினை செய்திருக்கின்றேன். இந்தப் பேட்டியில்  டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் ம.இ.க வரலாறு, அமைச்சரவையில் தாம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், மேம்பாடுகள், தனது இளமைக் கால அனுபவம், மலேசியாவில் இந்திய தோட்டத் தொழிலாளர்களின் நிலை, தமிழர்களுக்கென்று தனது முயற்சியில் உருவாக்கியுள்ள ஒரு பல்கலைக்கழகம் என்ற  பல தகவல்களை வழங்குகின்றார்.

இந்தப் பேட்டியை இன்று வெளியிட அவகாசம் இல்லை. இன்று இரண்டு படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கின்றேன்.

77 வயது நிரம்பிய  டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் தற்சமயம் ம.இ.க தலைமைப் பதவிலிருந்து விலகி விட்டாலும் பிரதமரின் அமைச்சரகத்தில் அமைச்சராக தொடர்ந்து தனது சேவையை ஆற்றிக் கொண்டிருக்கின்றார். அத்துடன் தற்சமயம் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கான சிறப்பு தூதர் என்ற பதவியையும் வகித்து வருகின்றார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த 2  மணி நேரத்தில் மலேசிய மண்ணின் மனம் முழுமையாக அங்கு நிரம்பியிருந்தது. என்னையும் கண்ணணையும் தே தாரிக் (இது மலேசியாவிற்கே உரிய ஒரு வகை டீ) வழங்கி வரவேற்றார். தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் தனது ஆசிகளை வழங்கினார்.

படங்கள்...


அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு 



பேட்டியின் போது..




பேட்டி முடிந்து ..

சுபா


THF Announcement: ebooks update: 29/10/2013 *ஜைனம் - ஓர் அறிமுகம்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது.

நூல்: ஜைனம் - ஓர் அறிமுகம்
வெளியீடு: ஜைன இளைஞர் மன்றம், சென்னை


  • தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த நூலை வழங்கியவர்: இரா.பானுகுமார்
  • நூல் மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
  • மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி



தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 356

28 பக்கங்கள் கொண்ட சிறிய நூல். ஆனால் மிகத் தெளிவான சிறந்த விளக்கம் அமைந்த ஒரு நூல் இது என்பதில் ஐயமில்லை.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மலேசியத்தமிழர்களின் சரிதம்_களப்பணி (சுபா + கண்ணன் 2013)

0 மறுமொழிகள்
நேற்று மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பட்டறை  ஒன்று நடைபெற்றது. மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நிகழ்த்திய பட்டறை இது.

தமிழ்த்துறையில் இளங்களை, முதுகலை  முனைவர், பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த பட்டறையில் கலந்து கொண்டனர்.

மலாயா பல்கலைக் கழக தமிழ்த்துறையின் தலைவர் இணைப்பேராசிரியர். டாக்டர் கிருஷ்ணன் அவர்களின் வரவேற்புடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

த.ம.அ தலைவர் பேராசிரியர் டாக்டர். நா. கண்ணன் அவர்களின் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய அறிமுகமும், மின்னாக்கம் பற்றிய விழிப்புணர்வும் என்ற ஒரு உரை தொடக்கமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து எனது நூல் அச்சுக்கலை வளர்ச்சி என்ற ஒரு சொற்பொழிவு நடைபெற்றது.

இறுதியில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த டாக்டர். சபாபதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

தமிழ்த்துறையின் ஆசிரியர்கள் டாக்டர். குமரன், மோகனதாஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் உடன் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் மலாயா பல்கலைக் கழக தமிழ்த்துறை இணைந்து எவ்வகையான திட்டங்களில் செயல்படலாம் என்ற வகையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சில படங்கள்..



பங்கு கொண்ட மாணவர்களில் சிலர்...
முதல் வரிசையில் இணைப்பேராசிரியர் டாக்டர்.குமரன், இணைப்பேராசிரியர் டாக்டர்.கிருஷ்ணன் (துறைத்தலைவர்)




த.ம.அ தலைவர் பேராசிரியர். டாக்டர். நா.கண்ணன்.





நன்றியுரை வழங்கும் டாக்டர்.சபாபதி (மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறை + மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க துணைத்தலைவர்)





எனது உரையின் போது..




மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆசிரியர்களுடன்  தமிழ் மரபு அறக்கட்டளையினர்.
இடமிருந்து வலமாக.. டாக்டர். மோகனதாஸ், இணைப்பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் (தலைவர்), வஸந்தா (என் உறவினர்), முனைவர்.க. சுபாஷிணி, பேராசிரியர்.டாகடர்.நா.கண்ணன், டாக்டர்.சபாபதி, இணைப்பேராசிரியர் டாக்டர் குமரன்.

அன்புடன்
சுபா


THF Announcement: ebooks update: 16/10/2013 *திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறு*

0 மறுமொழிகள்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது.

நூல்: திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறு
பிள்ளையவர்கள் நூற்றாண்டு வெளியீடு
எழுதியவர்: லால்குடி பெரும் புலவர்  ப.அரங்கசாமி
மறுவெளியீடு: திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 355

இந்த நூலினை மின்னாக்கம் செய்தவர்: முனைவர்.காளைராசன்
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


பரந்தாமனுக்குப் பல்லாண்டு

1 மறுமொழிகள்
 காப்பியக் கவிஞர். நா.மீனவன்             
                       
1.  
வங்கக்  கடல்வண்ணா  வல்வினைகள்   தாங்கமாற்றி
இங்(கு)எம்  மனத்தில்  இடம்பிடித்தாய்  திருமார்பில்
தங்கத்  திருமகளும்  தானிருக்க  அன்றந்தத்
துங்க  வரைசுமந்த தோளுடையாய்  பல்லாண்டு.

2.  
கதிரா  யிரம்போல்க்  காணும்  வயிரமுடி
எதிரே  சுடர்காட்டும்  ஏழுமலைக்(கு)  அதிபதியே
பதியில்  சிறந்ததிருப்  பதிஉறைவாய்  நின்னடியே
கதியாய்  நினைக்கின்றோம்  காத்தருள்வாய்  பல்லாண்டு.

3.  
தாயாம்  அலர்மேலு  தானுறையும்  மலர்மார்பா
வாயால்  உனைப்பாடி  வழிவழியாய்த்  தொழுதெழுந்தோம்
மாயா  திருமலைவாழ்  மலையப்பா நின்னடிகள்
ஓயாமல்  சிந்தித்தோம்  உத்தமனே  பல்லாண்டு.

4.  
கரியோடு  பரிமாவும்  காலாளும்  தேர்ப்படையும்
உரியானைப்  பாண்டவர்பால்  உள்வர்மம்  உடையானைத்
துரியனைத்  தான்வெல்லத்  துலங்குபரித்  தேரோட்டி
வரிவில்  விசயனையே  வாழ்வித்தாய்  பல்லாண்டு.

5.  
கயல்திகழும்  மலைச்சுனையில்  காலையிலே  நீராடி
வயற்கமலம்  போல்விளங்கும்  வண்ணவிழி  அருள்நோக்கால்
துயரகற்ற  வேண்டுமெனத்  தொழுது  பணியுமெங்கள்
மயலகற்றி  அருள்புரிவாய்  மலையப்பா  பல்லாண்டு.

6.  
சங்கேந்து  கையுடையாய்  சக்கரமும்  தானுடையாய்
மங்கையலர் மேலு  மகிழ்ந்துறையும்  மார்புடையாய்
கொங்குண்  மலர்வண்டு  கோவிந்தா  என்றழைக்கும்
தங்கத்  திருமுடியாய்  தளிரடிக்கே  பல்லாண்டு.

7.    
ஏதங்கள்  போக்கி  எமையாளும்  வேங்கடவா
போதார்  கமலப்   பொகுட்டுறையும்  திருமகட்கு
நாதா  திருமலைக்கு  நாயகனே  நின்னுடைய
பாதம்   கதியென்று  பணிந்திட்டோம்  பல்லாண்டு.

8.    
சங்கமுடன்  ஆழிஒரு சாரங்க  வில்லெடுத்தோய்
பொங்கெழில்சேர்  தாமரைபோல்  பூத்தவிழிக்  கமலங்கள்
எங்கள்வினை  போயகல  எழுகடல்போல் அருள்சுரக்கப்
பங்கயத்தாள்  பற்றிட்டோம் பல்லாண்டு

9.    
படர்அலைகள்  மேலிருக்கும்  பாம்பணைமேல்  கிடந்தானைத்
தடங்கடலுள்  தான்பாய்ந்து  தனிமறைகள்  காத்தானை
மடங்கலாய்  இரணியன்தன்  மார்பகலம்  கீண்டானை
வடவாலில்  இருந்தானை  வணங்கிடுவோம்  பல்லாண்டு.

10.    
கார்பொலியும்  திருமலைமேல்  காலமெலாம்  இருந்தானை
நீர்பொலியும்  பாற்கடலே  நிலைஎனக்கண்  வளர்ந்தானைத்
தார்மாலை  சூடிவரும்  தாமரைக்கண்  திருமாலைப்
பார்வாழப்  பாடிடுவோம்  பரந்தாமா  பல்லாண்டு.

                             11.    நீலமா  முகிலனைய  நிறத்தானே  நெய்விரவு
                                     கோலக்  குழற்கோதை  கொண்டிலகு  மார்புடையாய்
                                     ஆலிலைமேல்  கண்வளரும்  அமுதவாய்ப்  பரம்பொருளே
                                     நாலுமறை  வேங்கடவா  நாயகனே  பல்லாண்டு.

                                12.   செங்கமலம்  போலச்  சிவந்தவாய்  இதழுடையாய்
                                        மங்கலப்பொன்  மணிமாலை  மார்பிலங்கு  மாயவனே
                                        எங்கள்  குலத்தரசே ஏழேழ்  தலைமுறைக்கும்
                                        இங்குனக்குச்  சரணங்கள்  இனியவனே  பல்லாண்டு.

                                13.   ஆயர்குலத்(து)  அணிவிளக்கே  அகிலமுழு தாள்பவனே
                                        காயாம்பூ  நிறமுடைய  கார்வண்ணா  உச்சிமலை
                                        தோயும்  முகிலுக்கும்  துணையான  வேங்கடவா
                                        மாயவனே  எழிற்சோலை  மலையழகா  பல்லாண்டு.

                                 14.   நீராழி  உடையுடுத்த  நிலப்பெண்ணாள்  தினம்மருவும்
                                         பேராளா  எங்கள்  பெருமானே  பாண்டவர்க்குத்
                                         தேரோட்டி  உலகுய்யத்  திருவருளைச்  செய்தவனே
                                         ஓராழி  கையுடைய  உத்தமனே  பல்லாண்டு.

                                  15.   போரானைத்  தோலுரித்த பூந்துழாய்  மார்பனே
                                         நாராயணா  திருமலையின்  நாயகனே  செந்திருவாழ்
                                         சீரார்  மணிமார்பா  செழுங்ககமலத்  தாளுடையாய்
                                         ஏராரும்  சோலை  இருந்தருள்வாய் பல்லாண்டு.

                                   16.  சாரங்க  வில்லுடையாய்  சக்கரமாம்  படையுடையாய்
                                          போரரங்கம்  புழுதிபடப்  பொற்றேர்  செலுத்தியவா
                                          தாரம்கொள்  இராவணனைத்  தரைமேல்  கிடத்தியவா
                                          பேரரங்கம்  கிடந்திட்ட  பெரியவனே  பல்லாண்டு.

                                    17. கற்பகக்கா  தானுடைய  காவலனை  அந்நாளில்
                                          பொற்பழித்த  தானவரைப்  புறங்கண்ட  சேவகனே
                                          வெற்பெடுத்த  இராவணனை  வென்றழித்த  நாயகனே
                                          மற்போர்செய்  தோளுடைய  மாதவனே  பல்லாண்டு.
                                   
                                    18.  முப்பொழுதும்  தவறாமல்  முனிவரெலாம்  தான்வணங்கும்
                                           மெப்பொருளே  திருமலைவாழ்  மேலவனே  நின்மலர்த்தாள்
                                           எப்பொழுதும்  துதிக்கின்ற  எமைக்காக்கும்  ஏழுமலை
                                           அப்பாஉன்  பொன்னடிக்கே  ஆயிரமாம் பல்லாண்டு.

                                    19.  வடமலையை  மத்தாக்கி  வாசுகியை  நாணாக்கி
                                           அடலமரர்  தானவர்கள்  ஆழிகடை  வேளையிலே
                                           சுடரும்பொற்  குடத்தமுதைப்  பங்கிடவே  சோதியென
                                            மடவரலாய்  வந்ததிரு  மலையப்பா  பல்லாண்டு.

                                      20.  தன்னேரில்  பாரதப்போர்  தான்நடக்கும்  காலத்தில்
                                            மின்னேர்வில்  விசயனுக்கு  மேலான  கீதையுரை
                                            சொன்னவனே  அவனுக்குச்  சோதிமிகு  பேருருவம்
                                            தன்னையே  காட்டிவைத்த தக்கவனே  பல்லாண்டு.                                                

                                          21. பார்விழுங்கும்  கடலுக்குள்  பன்றியாய்த் தான்பாய்ந்து
                                                போரவுணன்  திறலடக்கிப்  பூமியினைத்  தன்னுடைய
                                                ஓர்மருப்பில்  தானேந்தி  உலகாண்ட  வேங்கடவா
                                                சீர்திகழும்  திருமலைவாழ்  செல்வனே  பல்லாண்டு.

                                          22.  மன்னுபுகழ்த்  திருவரங்க  மாமணியே  பாய்ந்துவரும்
                                                பொன்னிநதி  அடிதழுவும்  பூவடியாய்  அலர்மேலு
                                                மின்னிடையாள்  நாயகனே  மேலைநாள்  குன்றெடுத்த
                                                இன்னமுதே  கண்ணா  எழிற்சுடரே பல்லாண்டு.

                                          23.  மாமறையும்  முனிவரரும்  மற்றுமுள்ள  தேவர்களும்
                                                 பாமரரும்   வந்துபணி  பரந்தாமா  கோபியர்கள்
                                                 தாமயங்கக்  குழலூதித்  தண்ணருளைச்  செய்தவனே
                                                 கோமகனே  வேங்கடவா  கும்பிட்டோம்  பல்லாண்டு.

                                          24.  கானிடையே  பசுமேய்த்த கரியமா  முகிலனையாய்
                                                வானமரர்  தொழுதேத்த  வண்டரவம்  செய்யலங்கல்
                                                 தானணிந்த  மாலவனே  மாமலராள்   நாயகனே
                                                 தேனுடைய  மலர்ச்சோலைத்  திருமாலே பல்லாண்டு.

                                          25.  காரார்  திருமேனிக்  காகுத்தன்  எனத்தோன்றிப்
                                                 போராரும்  நெடுவேற்  புகழிலங்கை  இராவணனைத்
                                                 தேரோடும்  முடியோடும்  திருநிலத்தே  தான்கிடத்தி
                                                 ஏராரும்  அமரரைஈ(டு)  ஏற்றியவா  பல்லாண்டு.

                                          26.   சித்திரப்புள்  ஏறிவரும்  சீரங்கா  பணிவார்க்கே
                                                 முத்திதரும்  கருநீல  முகில்வண்ணா  உலகளந்த
                                                  வித்தகனே  சனகனது  வில்லறுத்த  நாயகனே
                                                  தத்துபுகழ்  வேங்கடவா  தளிரடிக்கே  பல்லாண்டு.

                                          27.   திக்குநிறை  அரக்கர்குழாம்  தெருண்டோட  அத்திரங்கள்
                                                  மிக்கபெரு  மாரியென  மேல்விடுத்த  சேவகனே
                                                  தக்கபுகழ்  வைதேகி  தான்மணந்த  மணவாளா
                                                  செக்கர்வான்  எனச்சிவந்த  சேவடிக்கே  பல்லாண்டு.

                                          28.   வம்புலாம்  நற்கூந்தல்  வாட்கண்ணாள்  அலர்மேலு
                                                  கொம்பனாள்  தன்மேனி  கூடியவா  கூரியநல்
                                                  அம்பனைய கண்ணாள்  அழகுபத்  மாவதியாம்
                                                  செம்பொன்னாள்  தனைமணந்த  சேவகனே  பல்லாண்டு.

                                          29.   ஆதிப்பிரான்  நம்மாழ்வார்க்(கு)  அன்றருள்செய்  மால்வண்ணச்
                                                  சோதிப்பிரான்  திருக்குருகூர்ச்  சுடரிலங்கு  வல்லியாள்
                                                  கோதைப்பிரான்  வந்தீண்டு  குடிகுடியாய்  ஆட்செய்வார்
                                                  சாதிப்பிரான்  வேங்கடவா  சாதித்தோம்  பல்லாண்டு.

                                          30.   நாடுவார்க்(கு)  அருள்கின்ற  நம்பியுன்  பாதமலர்
                                                 சூடுவார்  நலம்பெறுவார்  சொல்மாலை  புனைந்தேத்திப்
                                                 பாடுவார்  பதம்பெறுவார்  பக்தியால்  திருமலையைத்
                                                 தேடுவார்  தமைக்காக்கும்  திருப்பதியே  பல்லாண்டு.

                              31.  வில்லாண்ட  தோள்இராமன் வித்தகனாம்  அனுமனெனும்
                                     சொல்லாண்ட  சுந்தரன்கீழ்ச்  சூழ்ந்திருக்க  வலிமைமிகு
                                     கல்லாண்ட  தோளுடையாய்  காகுத்தா  உனக்கிங்கே
                                     பல்லாண்டு முகில்தோயும்  திருமலையா பல்லாண்டு.

                              32.   கோகுலத்தில்  அந்நாளில்  குடிமக்கள் இல்புகுந்து
                                     பாகனைய  மொழிபேசும்  பாவையராம்  ஆய்ச்சியர்சேர்
                                     மாகுடத்துப்   பால்தயிரும்  மற்றிருந்த  வெண்ணெயையும்
                                     மோகமுடன்  அருந்தியவா  முழுமுதலே பல்லாண்டு.

                              33.   பங்கயங்கள்  வாய்நெகிழப்  படர்ந்தருவி  தாம்முழங்கச்
                                     செங்கயல்கள்  துள்ளிவிழச்  சிறுவண்டு  பறந்துவர
                                     எங்கும்  அழகுபொலி  இயற்கைவளத்  திருப்பதியில்
                                     மங்கலமாய்  இருந்தருளும்  மலையப்பா பல்லாண்டு

                              34.  சங்கொருகை  ஏந்தியவா  சக்கரமும்  ஏந்தியவா
                                     மங்கையாம்  அலர்மேலு  மகிழ்ந்துறையும்  திருமார்பா
                                     திங்கள்போல்  திருமுகத்தில் தேசுடைய  வேங்கடவா
                                     பொங்குபுகழ்த்  திருமலைவாழ்  புண்ணியனே பல்லாண்டு.

                              35.  கரியமுகில்  மால்வண்ணா  கஞ்சன்  அனுப்பிவைத்த
                                     கரியழியப்  போர்செய்த  காயாம்பூ  மேனியனே
                                     பெருகிவரும்  பேரின்பப்  பெருவாழ்வு  தரவந்த
                                     திருமலைவாழ்  வேங்கடவா  தெண்டனிட்டேன் பல்லாண்டு.

                              36.  வண்டாடும்  சோலை  வளைந்தாடும் செடிகொடிகள்
                                     மண்டூகம்  பாய்சுனைகள்  மாலடிகள்  தொடுகற்கள்
                                     கொண்டதொரு  திருமலைவாழ்  கோவிந்தா  கோபாலா
                                     பண்டரக்கன்  தலைஎடுத்த  பரந்தாமா பல்லாண்டு.

                              37.  மதகளிற்றின்  கொம்பொசித்து  மல்லரையும்  சாய்ப்பித்து
                                     நதிபொன்னி  கால்வருட  நமையாளக்   கண்வளர்வாய்
                                     எதிராச  மாமுனிவர்  ஏந்துபுகழ்த்  திருவரங்கா
                                     கதியான  வேங்கடவா  கற்பகமே  பல்லாண்டு.

                              38.   பஞசடியாள்  நப்பின்னை  பார்த்திடஏழ்  எருதடக்கி
                                      நஞ்சரவச்  சிரசின்மேல்  நடனங்கள்  ஆடியவா
                                      வெஞ்சிறையில்  பிறந்தவனே  வெவ்வினைகள்  தானகல
                                      நெஞ்சிடையில்  செம்பொருளாய்  நிற்பவனே பல்லாண்டு.

                              39.   மொய்வண்டு  முகைவிரித்து  முகிழ்த்ததேன்  தனையருந்தி
                                      மெய்மறந்து  தவம்கிடக்கும்  மேலான  திருப்பதியில்
                                      கையாழி  ஏந்தியவா  கமலக்கண்  நாயகனே
                                      அய்யா  மலையப்பா  அரங்கனே  பல்லாண்டு.

                              40.   கடல்மல்லைத்  தலசயனம்  கச்சியொடு  திருவெக்கா
                                     குடந்தையொடு  விண்ணகரம்  கோலமிகு  திருநறையூர்
                                     படர்வைகைத்  திருக்கூடல்  பாடகம்  திருத்தண்கா
                                     குடிகொண்டு  திருமலைவாழ்  கோவிந்தா  பல்லாண்டு.

                               41.   திருவிடந்தை  கரம்பனூர்  திருநாகை  கண்ணபுரம்
                                   திருவல்லிக்  கேணியொடு  திருக்கடிகை  திருக்கோழி
                                   திருவில்லி  புத்தூர்  திருமோகூர்  திருமெய்யம்
                                   திருவனந்தை  வாழ்முகிலே  திருப்பதியே  பல்லாண்டு.

                            42.   ஊரகம்  திருச்சேறை  ஓங்குபுகழ்த்  திருவழுந்தூர்
                                   நீரகம்   சிறுபுலியூர்  திருநந்தி  விண்ணகரம்
                                   காரகம்  கள்வனூர்  திருக்காழி  விண்ணகரம்
                                   சீரகமாய்க்  கொண்டதொரு  செங்கண்மால்  பல்லாண்டு.

                            43.  செப்பனைய   மார்புடைய  சிற்றிடைசேர்  ஆய்ச்சியர்கள்
                                   எப்பொழுதும்  சூழ்ந்திருக்க  இனியகுழல்  ஊதியவா
                                   முப்போதும்  வானமரர்  முன்வணங்கும்  முதற்பொருளே
                                   உப்பிலியாய்  மலையப்பா  உன்னடிக்கே  பல்லாண்டு.

                            44.  உலவுதிரைப்  பாற்கடலுள்  உரகமிசைக்  கண்வளர்வாய்
                                  பொலிவுடைய  திருமேனிப்  பூமகளுன்  கால்வருடத்
                                   தலைமுடிகள்  ஆயிரத்தால்  த்ரணிதனைத்  தாங்குகின்ற
                                   நலமிக்க  சேடனுக்கு   நாயகமே  பல்லாண்டு.

                            45.  போர்ப்பூமி  தானதிரப்  பொற்றேரை  நடத்தியவா
                                  தேர்பூத்த  மாமுகிலே  திருத்துழாய்  நெடுமாலே
                                  பார்காக்கப்  போர்தொடுத்த  பாண்டவர்க்கு  மைத்துனனே
                                  சீர்பூத்த  திருமகளைச்  சேரந்தவனே  பல்லாண்டு.

                            46.  மின்னியலும்  பொன்மடவார்  மேதகுநல்  ஆய்ச்சியர்கள்
                                  பொன்னாடை  தனைக்கவர்ந்த  புண்ணியனே  மழைகண்ணா
                                  பின்னதோர்  அரியாகிப்  பேரசுரன்  மார்பிடந்த
                                  மன்னாதென்  திருவரங்கா  மலையப்பா  பல்லாண்டு

                            47.  மன்னுமொரு  குறள்வடிவாய் மாவலியைச் செற்றவனே
                                  அன்னவயல்   திருவாலி  அமர்ந்துள்ள  பெருமாளே
                                  முன்னீர்க்   கடல்கடந்த  முகில்வண்ணா  உன்பெருமை
                                  என்னே  எனப்புகல  என்னுயிரே  பல்லாண்டு.

                            48.  பூமறைகள்  தானார்த்துப்  புகழ்பாடக்  கண்வளரும்
                                  தாமரையாள்   நாயகனே  தாளால்  உலகளந்த
                                  மாமுகிலே  மழைவண்ணா  மணிக்கயிற்றால்  கட்டுண்ட
                                  தாமோ  தரனே  தனிப்பொருளே  பல்லாண்டு.

                            49.  தென்னன்  பொதியமலைத்  தேசுடைய  சந்தனங்கள்
                                   மன்னும்  திருமேனி  திருமால்  இருஞ்சோலை
                                   உன்னி  உறையும்  உறங்காத  கண்ணுடையாய்
                                   இன்னமுதப்  பாற்கடலின்  இருநிதியே  பல்லாண்டு.

                            50.  சீருண்ட  திருமேனிச்  செவ்வாயான்  அன்றந்தப்
                                   பாருண்டு  தாய்காணப்  பார்காட்டி  ஆட்கொண்டான்
                                   நீருண்ட  முகிலனைய   நெடுமேனித்  திருமாலே
                                   தாருண்ட  திருத்துழாய்  தாங்கியவா  பல்லாண்டு.

                                           51.   அரியுருவாய்  இரணியனை  அன்றடர்த்த  நரசிங்கா
                                                   பொருதிரைகள்  தானுலவு  புல்லாணிக்  கரையுடையாய்
                                                   விரிதிரைசூழ்  இலங்கையர்கோன்  வேறுபட  வில்லெடுத்துப்
                                                   பொருதோளாய்  திருமலைவாழ்  புண்ணியனே  பல்லாண்டு.

                                           52.    செம்பொன்  மதில்சூழ்ந்த  தென்னிலங்கைக்  கோமானின்
                                                    பைம்பொன்  முடிதரைமேல்  படரவே  கணைதொடுத்த
                                                    நம்பியே  நற்றமிழ்சொல்  நம்மாழ்வார்க்(கு)  அருளியவா
                                                    உம்பர்புகழ்  கோவிந்தா உனக்கிங்கே  பல்லாண்டு.

                                           53.    கங்கைக்  கரைவேடன்  கடல்சூழ்ந்த  காரவுணன்
                                                    தங்குமலைக்  கவியரசன்  தமையெல்லாம்  உறவாக்கி
                                                    நங்கையாள்  சீதையுடன்  நடந்திட்ட  திருவடியாய்
                                                    பொங்குதுழாய்த்  தார்மார்பா  பொன்மலையாய்  பல்லாண்டு.

                                           54.    பெற்றங்கள்  மேய்த்திட்ட  பெருமானே  நின்னருளால்
                                                    சிற்றஞ்  சிறுகாலே  சேவித்தோர்  மனைகளிலே
                                                    பொற்றா  மரைமகள்பொன்  பொழியவே  அருளியவா
                                                    நற்றாயார்  தேவகியின்  நம்பியே  பல்லாண்டு.

                                           55.    தேனாரும்  சோலைத்  திருவேங்  கடமலையில்
                                                    கானாரும்  துளவக்  கடிபொழில்கள்  சூழ்ந்திலங்க
                                                    மீனாரும்  சுனைமலைமேல்  மின்னாழிப்  படையுடையாய்
                                                    ஊனிலே  கலந்திருக்கும்  உத்தமனே  பல்லாண்டு.

                                           56.    ஆளரியாய்த்  தோன்றியவா  ஐவருக்கு  நற்றுணைவா
                                                    கோளரியே  மாதவா  கோவிந்தா  மழைக்கண்ணா
                                                    தாளடியே  பற்றினோம்  தாமரைவாய்  குழலூத
                                                    நாளெல்லாம்  நிரைகாத்த  நாயகனே  பல்லாண்டு.

                                           57.    தென்புதுவைப்  பட்டன்  திருமகளின்  மலர்மாலை
                                                    என்புயத்துக்(கு)  உகந்ததென  ஏற்றணிந்த  திருமாலே
                                                    பொன்பயந்த இலக்குமியைப்  பூமார்பில்  சுமந்தவனே
                                                    மின்பொழியும்  சக்கரக்கை மேனியினாய்  பல்லாண்டு.

                                           58.    கொத்தாரும்  பூங்குழற்  கோதையாள்  நப்பின்னை
                                                    முத்தாரும்  மார்பம்  முயங்கியவா  பக்தியினால்
                                                    ஒத்தார்  அனைவருக்கும்  உதவும்  குணமுடைய
                                                    அத்தா  மலையப்பா  அழகனே   பல்லாண்டு.

                                           59.     நஞ்சுமிழும்  அரவின்மிசை  நடமாடும்  பெருமானே
                                                    செஞ்சுடர்சேர்  ஆழியொடு  சிறுசங்கம்  ஏந்தியவா
                                                    கஞ்சனது   வஞ்சம்  கடந்தவனே  ஆழ்வார்தம்
                                                    செஞ்சொற்  பொருளேநற்  சித்திரமே  பல்லாண்டு.

                                           60.    அண்டர்  தலைவாநல்  ஆயர்கள்தம்  குலக்கொழுந்தே
                                                    தொண்டர்  அடிப்பொடியார்  தூயதமிழ்ப்  பரகாலன்
                                                    கண்டும்மைச்  சேவிக்கக்  கைத்தலத்தில்  சங்கேந்திக்
                                                    கொண்டெம்மைக்  காக்கும்  குணநிதியே  பல்லாண்டு.                                    
   
                               61.   செவ்வாய்க்  குழல்கேட்ட  சிற்றிடைநல்  ஆய்ச்சியர்கள்
                                       அவ்வாய்ச்  சுவைகண்ட  அழகுடைய  வெண்சங்கை
                                       எவ்வாறு  இருந்ததென  எண்ணியொரு  வினாக்கேட்ட
                                       கொவ்வையிதழ்  ஆண்டாளைக்  கூடியவா  பல்லாண்டு.

                               62.    தாதெல்லாம்   தரைமலியத்  தண்தரைமேல்  நீர்நிறையக்
                                       கோதிலாக்  குயிலினங்கள்  குழல்போல்  இசைபொழிய
                                       மாதரசி  நப்பின்னை  மனத்துக்(கு)  உகந்தவனே
                                       போதராய்  எம்மிடத்தே  பூவண்ணா  பல்லாண்டு.

                               63.   விண்ணாகிக்  காற்றாய்  விளங்கும்  அனலாகி
                                       மண்ணாகி  எங்கும்  மலிபுனலாய்  ஆனவனே
                                       உண்ணேரும்  ஆவியாய்  உகந்திருக்கும்  பெருமானே
                                       கண்ணே  திருமலைவாழ்  கற்பகமே  பல்லாண்டு.

                               64.   வண்டாடும்  சோலை  வடவேங்  கடத்தானே
                                       உண்டாய்நீ   மண்ணென்று  கோபித்த  உன்தாயும்
                                       கண்டாள்  உலகனைத்தும்  காட்டுவாய்  உனதென்று
                                       கொண்டாடித்  தொழுது நிதம்  கும்பிட்டோம்  பல்லாண்டு.

                               65.    அவம்புரிந்து  வலியிழந்த  அரக்கர்கோன்  தன்னுடைய
                                        தவம்அழித்து   நிறைவாணாள்  தனையழித்து  வைத்தபிரான்
                                        பவமகலச்  சரணமலர்ப்  பாதங்கள்  காட்டுவாய்
                                        உவணத்தாய்  வேங்கடவா  உத்தமனே  பல்லாண்டு

                               66.     காலால்  சகடத்தின் கட்டழித்த  பெருமானே
                                        வாலால்  அனல்வைத்த  வலியமகனாம்  அனுமன்
                                        பாலருளைச்  சுரந்திட்ட  பரந்தாமா  மாவலியைக்
                                        காலால்  அமிழ்த்தியவா  கருமணியே  பல்லாண்டு

                               67.    சங்குடையாய்   கையிலொரு  சாரங்க  வில்லுடையாய்
                                        கங்கைகமழ்  திருவடியாய்  கருடனாம்  கொடியுடையாய்
                                        அங்குடையாய்  உன்முடிமேல்  அரவிருக்க  மங்கையொரு
                                        பங்குடையான்  மைத்துனனுன்  பரமபதம்  பல்லாண்டு.

                               68.    செஞ்சோதித்  தாமரைபோல்  சிவந்திருக்கும்  திருவடியை
                                        நஞ்சூதும்  பாம்பணைமேல்  நங்கைதிரு  கால்வருட
                                        மஞ்சூதும்   நன்மழைபோல்  மகிழ்ந்தருளைப்  பொழிந்துவரும்
                                        எஞ்சோதி  வேங்கடவா  ஏழுமலை  பல்லாண்டு

                               69.    கண்ணனே  நெடுமாலே  கவிங்குருகூர்ச்  சடகோபன்
                                       அண்ணலே  தமிழ்மாலை  ஆயிரமாய்ப்  பாடிவைத்த
                                        பண்ணாரும்  பாடலுக்குப்  பரமபதம்  அருளியவா
                                        தண்ணார் கருமேனித்  தாமரையே  பல்லாண்டு.

                               70.     மாமலராள்  நப்பின்னை  மணவாளா  திருவடியாம்
                                        பூமலரைத்  தலையேற்றுப்  போற்றினோம்  நின்னுடைய
                                        நாமங்கள்  ஓத  நலமளிக்கும் பெருமானே
                                        கோமுதலாய்க்  கொண்டிட்ட  கோபாலா  பல்லாண்டு.

                                71.  பாகனைய  சொல்லாள்  பரிவுடைய  யசோதை
                                       வாகாய்த்  தழுவியுனை  வளர்த்தநாள்   அசுரருக்கே
                                       ஆகுலங்கள்  வேளைதொறும்  அருளியவா  அற்றைநாள்
                                       கோகுலத்தைத்  தன்னிடமாய்க்  கொண்டவனே  பல்லாண்டு.

                                 72.  மாறுபகை  நூற்றுவரை  மாமனொடு  அசுரர்களை
                                       நீறுபடச்  செய்தவனே  நிலங்கீண்ட  பெருமானே
                                       ஆறுதலைச்  சிவனாரின்  அன்பான  மைத்துனனே
                                       ஏறுபுகழ்த்  திருப்பதிவாழ்  இனியவனே  பல்லாண்டு.

                                 73.  மாயத்தால்  ஆய்ச்சியரை  மயக்கியவா  பாண்டவரைத்
                                        தாயத்தால்  வென்றவர்கள்  தானழியத்  தேர்நடத்தி
                                        வேயன்ன  தோளி  வியன்நங்கை  பாஞ்சாலி
                                        தூய  குழல்முடிக்கத்  துணையானாய்  பல்லாண்டு.

                                 74. வார்புனல்சேர்  அருவிநீர்  வழிந்தோடச்  சூரியனார்
                                       தேரேறி  வலங்கொண்ட  திருப்பதிவாழ்  பெருமானே
                                       சீர்பூத்த  தாமரையாம்  சேவடிகள்  காப்பதெனப்
                                       பேர்பாடி  வணங்குகிறோம்  பீடுடையாய்  பல்லாண்டு.

                                 75.  சேலாரும்  கண்ணாள்நற்  சீதைக்காய்  மான்பின்னே
                                        காலோய  ஓடியஎம்  காகுத்தா  மண்பொதிந்த
                                        ஞாலத்தை  அன்றாண்ட  நாயகன்நீ  காப்பென்றே
                                        ஓலமிட்டோம்  திருப்பதியாம்  ஊருடையாய்  பல்லாண்டு.

                                 76.   திருவாலி  நாடன்  திருமங்கை  மன்னன்சொல்
                                        திருமொழிக்கு  மயங்கியவா  திருவாழி  சங்கமுடன்
                                        அருளாழிக்  கடலாகி  அலர்மேலுத்  தாயாரை
                                        ஒருமார்பில்  வைத்திட்ட  உடையவனே  பல்லாண்டு.

                                  77   பூரத்தில்  உதித்தாளை  புகழ்பாவை  நூலோதிக்
                                         காரொத்த  மேனிதிருக்  கண்ணனையே  அடை ந்தாளைத்
                                         தார்சூட்டித்  தந்தவளைத்  தன்னிடத்தில்  கொண்டவனே
                                         பேரரங்கம்  உடையதொரு பெரியவனே  பல்லாண்டு.

                                  78.  தேன்மலர்சேர்  காவிரிசூழ்  தென்னரங்கா  பக்திகொண்ட
                                         பான்மையினால்  யதிராஜர்  பரவிடவே  அருளியவா
                                         மேன்மையால்  நின்னடியை  மேலாக  எண்ணியவர்
                                         வானாடு  பெறவைத்த  வள்ளலே  பல்லாண்டு.

                                  79.  பூந்துழாய்   மார்புடைய  புண்ணியனே  பொன்னாழி
                                         ஏந்துகரம்  உடையவனே  இனியபத்  மாவதியின்
                                         பூந்துகில்மேல்  மனம்வைத்த  போரேறே  மலையப்பா
                                         நா தகவாள்  ஏந்தியநல்  நாயகனே  பல்லாண்டு.

                                  80.  தீதுடைய்  கெளரவர்கள்   தீரமிக்க  பாண்டவரைச்
                                         சூதாலே  வென்றவரைச்  சூழ்ச்சியால்  கான்போக்கத்
                                         தூதாய்  நடந்தவர்க்குத்  துணையான  வேங்கடவா
                                         பாதமலர்  தலைவைத்துப் பணிகின்றோம்  பல்லாண்டு.
     
                                            81.  கொல்வித்த  பூதகியைக்  கொல்வித்தாய்  தூதுநீ
                                            சொல்லவந்த  போதன்று  சூழ்ச்சிபல  செய்தார்க்கே
                                            நல்லவழி  காட்டநீ  நல்லபெரு  வடிவெடுத்தாய்
                                            மல்லார்தோள்  திருமலைவாழ்  மலையப்பா  பல்லாண்டு.

                                    82.   வானளந்த  காலுடையாய்  வார்கடல்போல்  நிறமுடையாய்
                                            கானளந்த  நறுந்துளவக் கவின்மணக்கும் தோளுடையாய்
                                            மீனளந்த  கண்ணுடையாள்  மேலான  அலர்மேலு
                                            தானிருக்கும்  மார்பனே  தாயனையாய்  பல்லாண்டு.

                                    83.   அவரவர்க்கே  உரியதனை  அளந்தளிக்கும்  பெருமானே
                                            எவர்வரினும்  அவர்பக்தி  இங்குண்மை  ஆனாலோ
                                            உவப்புடனே  அவர்மனத்தின்  உட்பொருளாய்  இருப்பவனே
                                            தவமிக்க  திருப்பதிவாழ்  தனித்தேவே  பல்லாண்டு.

                                    84.   திருக்கோட்டி  யூர்நம்பி  திகழ்யமுனைத்  துறைவனார்
                                           திருக்கோட்டும்  பெரும்புதூர்த்  திருமகனார்  எதிராசர்
                                           அருட்கோவில்   கொண்டிருக்கும்  அழகதனைக்  காணவைத்தாய்
                                            உருக்காட்டி  வேங்கடத்தில்  உறைபவனே  பல்லாண்டு.

                                    85.   மதிஇரவி  உடுக்களுடன்  மற்றுமுள்ள  கோள்களுக்கும்
                                           அதிபதிநீ   அல்லாண்ட  மேனியனே  அழகுபத்மா
                                            வதிபதிநீ  அசோதை  வளர்மதலாய்  பரமபதப்
                                            பதிபுரக்கும்  திருமலையே  பரந்தாமா  பல்லாண்டு.

                                    86.   அதிர்கின்ற  கடல்வண்ணா  அசோதை  மடியிருந்து
                                            மதுரமுலை  அமுதுண்டு  மருதொசித்த  பெருமானே
                                            உதரத்தில்  நான்முகனைத்  தாமரைமேல்  உதிக்கவைத்த
                                            கதிர்முடிசேர்  வேங்கடவா  கருமுகிலே  பல்லாண்டு.

                                    87.   பங்கயங்கள்  வாய்நெகிழ்ந்து  பனித்துளிபோல்  தேன்சொரியக்
                                           கொங்குண்ணும்  வண்டினங்கள்  குடித்துன்றன்  புகழ்பாட
                                           மங்கை  அலர்மேலு  மகிழ்ந்தணைக்கும  மணவாளா
                                           சங்கேந்தும்  வேங்கடவா  சக்கரமால்  பல்லாண்டு.

                                    88.   கொத்தார்  குழல்பின்னை  கோவலனே  என்றுன்னை
                                            எத்தாலும்  சேவித்தாள்  இதயத்தில்  உனைவைத்தாள்
                                            நத்தார்  புனலரவில்  நடனமிட்ட  நாரணனே
                                            வித்தாய்  இருக்கின்ற  வேங்கடவா  பல்லாண்டு.

                                    89.    செங்கைத்  தலத்தாலே  சிறீதரா  நீயன்று
                                             துங்கப்  பரிபொருந்தும்  தூய்தொரு  தேர்நடத்தி
                                             மங்கையாள்  பாஞ்சாலி  மனச்சபதம்  நிறைவேற்றி
                                             எங்களையும்  காத்துவரும்  ஏழுமலை  பல்லாண்டு.

                                    90.     இரவனைய  நிறமுடையாய்  ஏறேழும்  தழுவியவா
                                             அரவணையாய்  கோபாலா  அசுரர்களின்  கூற்றுவனே
                                             உரவுடைய  தோளாய்  உததியிலே  கண்வளரும்
                                             கரவறியா  வேங்கடவா  கைகுவித்தோம்  பல்லாண்டு.

                                     91     படஅரவில்.  துயில்கொள்ளும்  பாற்கடலாய்  சீனிவாசா
                                             மடவரலாம்  பாஞ்சாலி  மானத்தைக்  காத்தவனே
                                             உடையவரும்  ஆழ்வாரும்  உவந்துபணி  வேங்கடத்தை
                                             இடமாக  உடையவனே  ஈடில்லாய்  பல்லாண்டு.

                                     92.   இனியவனே  திருமகளுக்(கு)  ஏற்றதுணை  ஆனவனே
                                             கனிசபரி  தரவுண்ட  காகுத்தா  கைவில்லி
                                             உனைவெல்ல  வருமவுணர் உயிர்வாங்கி  வீடளித்த
                                             பனித்துளவ முடியுடையாய்  வேங்கடவா  பல்லாண்டு.

                                     93.   ஏர்வளரும்  சோலை  இருந்தழகு செய்துவரப்
                                             பார்வளரும்  மாந்தர்  பலர்வந்து  பணியுமொரு
                                             சீர்கொண்ட   வேங்கடவா  சிலைமலர்ந்த  தோளுடையாய்
                                             கார்கொண்ட  மேனிக்  கடவுள்மால்  பல்லாண்டு.

                                     94.   திருநெடுமாற்(கு)  அடிமையெனத்  தினம்பணியும்  அடியார்கள்
                                            கருமாலே  மணிவண்ணா  கடல்கடைந்த  மாயவனே
                                            பெருமாளே  மோகினியாய்ப்  பேரமுதம்  பங்கிட்ட
                                            திருமாலே  வேங்கடவா  தெண்டனிட்டோம்  பல்லாண்டு.

                                     95.   புள்ளின்வாய்  கீண்டோனே  பூதங்கள்  ஐந்தானாய்
                                            கள்ளச்  சகடத்தைக்  காலால்  உதைத்தழித்தாய்
                                            வெள்ளம்போல்  வருமவுணர்  வீயநீ   அம்பெய்தாய்
                                            உள்ளத்தில்  வேங்கடவா  ஒளியானாய்  பல்லாண்டு.

                                     96.   கோதை  மணவாளா  கோவலனாய்ப்  பிறந்தவனே
                                            சீதை  திருக்கேள்வா  சிறையெடுத்த  இராவணனால்
                                            வாதையுற்ற  தேவர்களை வாழவைத்த  நாயகனே
                                            தீதகற்றும்  வேங்கடவா  தேன்த்மிழால் பல்லாண்டு

                                     97.  முடியார்   திருமலையின் முதற்பொருளே  முன்பணியும்
                                            அடியார்  படுதுயரம்  அழித்தருளும்  பெருமானே
                                            செடியான  வல்வினைகள்  சேர்த்தழிக்கும்  உயர்கருடக்
                                            கொடியானே  வேங்கடவா   நெடுமாலே  பல்லாண்டு.

                                     98.  தீதுரைத்த  கெளரவர்கள்  தீமைசெயப்  பாண்டவர்க்காய்த்
                                           தூதுரைத்த  கேசவனே  துளவநறுந்  தாருடையாய்
                                           மாதுரைத்த  சொல்லுக்காய்  மாநகரம்  நீங்கியவா
                                           தீதறுக்கும்  வேங்கடவா  திருமலையே  பல்லாண்டு.

99.
கோட்டானைக்  கொம்பொடித்தாய்  குதிரையினை  அடக்கிவைத்தாய்
தாட்டா   மரையாலே  காளிங்கன்  தலைமிதித்தாய்
மாட்டாத  இராவணனை  மண்ணிலே  விழச்செய்தாய்
தேட்டாளா  வேங்கடவா  திருமலையே  பல்லாண்டு.
                                       
100.
வில்லாண்ட  தோளாய்  வியந்துளவத்  தாருடையாய்
எல்லாண்ட  மேனி   இனியதிரு  வேங்கடவா
கல்லாண்ட  மனத்தைக்  கரைத்துநீ  காத்தருள்க
சொல்லாண்ட  செந்தமிழால்  சொல்லிவைத்தேன்  பல்லாண்டு.

நிறைவுற்றது -
     
                                                                                               


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES