இவை தவிர்த்து குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்த்தப்பட்ட சில நிகழ்வுகளை கீழே பகிர்ந்து கொள்கின்றேன்.
பெப்ரவரி 22ம் நாள் ஜெர்மனியின் ஸ்டுகார்ட் நகரத்தில் நிகழ்ந்த உலக மொழிகளுக்கான வாரம் - சிறப்பு தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளை பொது மக்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கில் தமிழ் மொழி பற்றிய ஒரு சொற்பொழிவினை ஆங்கிலத்திலும் டோய்ச் மொழியிலும் நடத்தினேன். இதில் என்னுடன், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நண்பர் திருயோக புத்ரா, இருவரும் வந்திருந்த ஜெர்மானிய பார்வையாளர்களுக்கிடையே தமிழ் மொழி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான ஒரு சொற்பொழிவினை நடத்தினோம். இந்தநிகழ்விற்கு பாடன் உர்ட்டென்பெர்க் மானிலத்தின் அரசாங்கப் பிரதினிதி வந்து கலந்து கொண்டார்கள். இந்த 1 நாள் நிகழ்வில் தமிழ் நூல்களின் கண்காட்சியையும் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம்.
ஆகஸ்ட் மாதம் லண்டன் நகரத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்கள் சந்திப்பு 16ம் தேதி லண்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் நான் தமிழ் மரபு அறக்கட்டளையின் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி விளக்கமளித்து மின்னாக்க நடவடிக்கைகளின் தேவைகள் பற்றி வந்திருந்து கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கு விளக்கினேன். இதில் லண்டன் கிளையின் நண்பர்கள் கலந்து கொண்டதோடு பொது மக்களும் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தின் கெண்டபரி நகரில் நடைபெற்ற மூன்று நாள் சர்வதேச கலை வரலாற்று கருத்தரங்கில் நான் தமிழகத்தில் வரலாற்று சின்னங்களின் பாதுகாப்பின் அவசியம் பற்றிய ஒரு உரை நிகழ்த்தினேன். அத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு வெளியீடுகளில் ஒன்றான மலையடிப்பட்டி குடவரை கோயிலின் விழியப் பதிவு கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வில் குறும்படங்களின் காட்சி வேளையில் வெளியிடப்பட்டது என்ற சிறப்பும் நமக்கு கிடைத்தது.
இவ்வாண்டு எனது தமிழகப் பயணம் ஜூன் மாதத்தில் அமைந்திருந்தது. இவ்வாண்டு பயணம் கடந்த ஆண்டுகளைப் போல அத்தோடு மேலும் சில படிகள் வளர்ச்சி அடைந்த வகையில் சிறப்புடன் அமைந்துன. குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகக் கீழ்காணும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
தமிழகத்தின் National Informatics Centre - ஜூன் 6ம் திகதி மதியம் 3 தொடங்கி மாலை 5.30 வரை நிகழ்ந்தது. இந்த நிகழ்வுக்கு NIC அரசு ஊழியர்கள் நேராகவும் சென்னையில் இரு வேறு பகுதிகளிலிருந்தும் செக்ரட்டேரியட் அலுவலகத்திலிருந்தும் வீடியோ கான்ஃபெர்ன்ஸ் வழியாக சில அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். கணினி தொழில் நுட்பங்கள் வழி தமிழ் மரபு செல்வங்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் நான் எனது உரையை நிகழ்த்தினேன்.
திரு.சிங்கானெஞ்சனின் உதவியுடன் புவியியல் அருங்காட்சியகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களுடனான சந்திப்பினை நிகழ்த்தினோம். அந்தநிகழ்வில் புவியியல் அருங்காட்சியகத்தின் விழியப் பதிவும் செய்யப்பட்டது. அது நமது இவ்வாண்டின் சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாகவும் இடம் பெறுகின்றது.
தினமணி பெருவிழாவில் நானும் டாக்டர் கண்னனும் கலந்து கொண்டு இரண்டு சொற்பொழிவுகளை வழங்கினோம். டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் வந்திருந்து திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தமிழார்வலர்களோடு தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
எஸ்.எம்.எஸ் கலைக்கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை எஸ்.எம்.எஸ் கலைக்கல்லூரியின் உரிமையாளர். டாக்டர்.மதிவாணன் அவர்கள் முழு ஏற்பாட்டினையும் செய்து வைக்க சிறப்பு சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுடன் ஏறக்குறைய 800 மாணவர்கள் கலந்து கொண்ட மிகப் பெரிய கருத்தரங்கமாகவும் இது அமைந்தது.
சென்னைஅடையாரில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் பெண்கள் கல்லூரியில் ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் பற்றி விளக்கியதோடு பெண்களுக்கு கல்வியின் அவசியம் பற்றியும் விளக்கும் சொற்பொழிவினை நான் நிகழ்த்தினேன்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளை நடத்திய திட்டத்தில் பங்கு கொண்டு ஆய்வுப் பணியை நிகழ்த்திய இளங்கலை, முதுகலை ஆய்வு மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிவகாசியில் நடைபெற்றது. அதில் கவிஞர் திலகபாமா, எழுத்தாளர் மதுமிதா, டாக்டர்.கண்ணன், நான் ஆகியோர் கலந்து கொண்டதோடு மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினோம்.
ஈரோட்டில் சித்தார்த்தா மேல் நிலைப் பள்ளியில் மாணவர் பயிலரங்கினை நடத்தினோம். இந்த நிகழ்வில் டாக்டர்.பத்மாவதி, டாக்டர்.கண்ணனுடன் நானும் மாணவர்களுக்கு வரலாற்று புராதன சின்னங்கள் பாதுகாப்பு பற்றி உரை நிகழ்த்தினோம். திருமதி பவளசங்கரியின் வாழ்த்துரையும் இதில் இடம்பெற்றது. இது முடிந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு திரு.சதாசிவத்துடன் கொடுமணல் அகழ்வாய்வுப் பகுதிக்குச் சென்றோம். மாணவர்களுக்கு இப்பகுதியின் தொல்லியல் சிறப்புக்களைச் சொல்லி விளக்கமளித்தோம்.
சாஹித்ய அக்காடமி நடத்திய அயலகத் தமிழ் என்ற நிகழ்வில் நம் செயற்குழு உறுப்பினர் மாலன், நம் செயலாளர் டாக்டர்.ம.ராஜேந்திரன் ஆகியோருடன் பேரா.டாக்டர் கண்ணனும் நானும் உரை நிகழ்த்தினோம்.
சமண சமயச் சுவடுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதியும் வகையில் இவ்வாண்டு விழுப்புரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் மதுரைக்கும் பயணமேற்கொண்டிருந்தேன். இந்த முயர்சிகளின் பலனாக முக்கிய பதிவுகளை ஒளிப்பதிவாக்க முடிந்தது. அவை தற்சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளாக வந்து கொண்டிருக்கின்றன
.
அத்துடன் மதுரையில் அதன் அருகாமை கிராமங்களில் உள்ள குடிசைத் தொழில்கள் பதிவு, சமண சமயச் சுவடுகள் பதிவு ஆகியவை செயல்படுத்த முடிந்தது. அப்பதிவுகளில் சில வெளியிடப்பட்டாலும் ஏனையவை தொடர்ந்து வருகின்ற நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் வழங்கினேன்.இந்த நிகழ்வில் உலகின் பல நாடுகளிலிருந்தும் உறுப்பினர்கள் வந்து கலந்து சிறப்பித்தனர்.
இந்த மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளோடு டிசம்பர் 25ம் திகதியும் நேற்று டிசம்பர் 30ம் தேதியும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைநால் நிகழ்வாக மலேசியா பினாங்கிலும் தமிழகத்தில் திருப்பனந்தாள், புதுக்கோட்டை ஆகிய நகர்களிலும் மரம் நடுதல் நிகழ்ச்சியை தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்தியது. திருப்பனந்தாள் எஸ்.கே.எஸ்.டி.எஸ். உயர் நிலைப்பள்ளியும், புதுக்கோட்டை எம்.என்.எஸ்.கே எஞ்ஞினியரிங் காலேஜ் ஆகியவற்றோடு பினாங்கின் குளுகோர் த.ம.அ நண்பர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று இயற்கை பாதுகாப்பு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்
.
பினாங்கில்
திருப்பனந்தாள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி ஊடகமான மின்தமிழில் பல்வேறு தலைப்புக்களில் இவ்வாண்டு கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. இவ்வகை கலந்துரையாடல்களின் வழி தமிழ் ஆய்வு, சமூகநல கருத்துகள் என்ற வகையில் சிந்தனை தூண்டும் பல விஷயங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. தரமான பல கட்டுரைகள்ளும் தகவல்களும் மின் தமிழில் உறுப்பினர்களால் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன.
2015ம் ஆண்டை நோக்கி காலடி எடுத்து வைக்கின்றோம்.
நம் பயணம் தமிழ் மொழி, பண்பாடு சமூக நலன், வரலாறு என்ற பன்முகத் தன்மையை மனதில் கொண்டு இயங்கும் தன்மையுடையதாய் அமையும்.
இம்முயற்சிகள் நம் சமூக நலனுக்கு உதவ, நண்பர்கள் உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவினையும் தமிழ் மரபு அறக்கட்டளை எதிர்பார்க்கின்றது.
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[துணைத் தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை]