மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில்

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கும் முந்தைய பழமையான ஒரு கோயில். இக்கோயிலினுள் சென்று கோயிலின் அமைப்பை பார்க்கும் போது நமக்கு மிக முக்கியமாக மூன்று மாறுபட்ட வகையிலான கட்டிட கட்டுமான அமைப்பு அங்கு இருப்பது தெரியும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் கோயிலின் ஆரம்பகால தோற்றம் பற்றிய செய்திகள் அறிய முடியாதவையாக உள்ளன. ஆயினும் கோயிலின் பழமையான வடிவம், சிற்பங்கள் மற்றும் இக்கோயிலில் இருந்த கல்வெட்டுகள் ஆகியவை இக்கோயில் படிப்படியாக விரிவாக்கப்பட்டமையை நன்கு வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன. 

கும்பகோணத்தில் இந்த ஆலயம் இருந்த பகுதி வரகுண பாண்டியன் காலத்தில் அதாவது 9ம் நூ. பிற்பகுதியில் பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது தெளிவு. அதனை சாட்சியாகக் கொள்ளும் வகையில் ஆலயத்திற்குள் வரகுண பாண்டியனுக்கு ஒரு சன்னிதி அமைந்திருக்கின்றது. 

Inline image 1
வரணகுண பாண்டியன் 

சோழர் வரலாற்றில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படுவது திருப்புறம்பயப்பெரும் போர். இப்போரில் சோழர்கள், பாண்டியர்கள் இருவர் அணியிலும் ஏறாளமானோர் இறந்தனர் என்பதும் இதன் இறுதியில் விசயாலயசோழனின் மகன் ஆதித்த சோழனின் படைகள் பாண்டியப் படைகளைத் தோல்வியுறச் செய்து வெற்றி கண்டது என்பதை அறிகிறோம் (பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார்). இந்த போருக்குப் பின்னர் கும்பகோணமும் போரில் வெற்றி கொண்ட சோழ நாட்டின் ஏனைய பகுதிகளும் சோழர்களால் மீட்கப்பட்டன. 

அதன் பின்னரும் போர்கள் பல நடந்தாலும் ஆதித்தனுக்குப் பின் வந்த முதலாம் பராந்தகன் தன் ஆட்சியை மேலும் விரிவு படுத்தி பெரிதாக்குகிறார். திருவிடை மருதூர் ஆலயத்தின் மிகப் பெரிய கட்டுமானப் பணி இந்த  முதலாம் பராந்தகன் காலத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும். (மத்திய தொல்லியல் துறை -கல்வெட்டு செய்திகள் தொகுப்பு 19) 

அதன் பின்னர் இக்கோயிலில் மேலும் பல புதிய பகுதிகள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்களால் விரிவாக்கப்பட்டிருக்கின்றன. பராந்தக சோழன், சுந்தர சோழன், உத்தம சோழன், ராஜராஜ சோழன் கால கல்வெட்டுக்கள் இக்கோயில் முழுமையும் நிறைந்திருந்தன. ஆனால் அந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தும் ஆல்ய புணரமைப்பு என்ற பெயரில்  சிதைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவோமா?

மத்திய தொல்பொருள் துறை இக்கோயிலின் கல்வெட்டுக்களை 1970க்கு முன்பே படியெடுத்து பதிப்பித்து வைத்தமையால் இன்று நமக்கு இக்கோயிலில் என்னென்ன கல்வெட்டுக்கள் இருந்தன என்ற சான்றுகள் கிடைக்கின்றன. இவையே சோழ மன்னர்களின் செய்திகளைத் தாங்கிய முறையான ஆவணங்களாக இன்று நமக்கு கிடைக்கின்றன. 1970க்குப் பின்னர் ஆலய நிர்வாகம் செய்த புணரமைப்பு பணி ஆலயத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவித்திருக்கின்றது.  

கல்வெட்டுக்கள் புணரமைப்பின் போது அழிக்கப்பட்டமை போலவே கோயிலைக் கட்டியபோது வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட பகுதிகள் புணரமைப்பு என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் இன்றைய நிலையில் காண்கின்றோம். வானலிங்கங்கள் என்ற வகையில் ஆலயத்தின் வேறிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கங்கள் எல்லாம் பெயர்த்தெடுக்கப்பட்டு ஒரு பகுதியில் இரண்டு வரிசையாக நட்சத்திரங்களின் பெயர் கொடுக்கப்பட்டு ராசி நட்சத்திரங்களுக்கான லிங்கங்களாக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆகம முறைப்படி விநாயகர் இருக்க வேண்டிய இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு வேரிடத்திலும், துர்க்கை பெயர்க்கப்பட்டு வேறிடத்திலும் என வைக்கப்பட்டிருப்பது நமக்கு இப்படியும் கூட கவனக் குறைவுடன் புணரமைப்பு பணிகளைச் செய்கிறார்களா என திகைக்க வைக்கின்றது.  இது இன்று நம் முன்னே இத்தகைய புணரமைப்பு பணிகளால் ஏற்படும் சேதங்களையே காட்டுகிறது.

தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 19ல் இக்கோயிலின் அனைத்துக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த அரும்பெருங் காரியத்தை செயத மத்திய தொல்பொருள் ஆய்வு நிருவனத்திற்கு வரலாற்றில் ஆர்வமுள்ளோர் அனைவரும் நன்றி செலுத்தக் கடமை பெற்றுள்ளோம்.

இன்று வெளியிடப்படும் விழியப் பதிவு இரண்டு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டையும் தொடர்ச்சியாகக் காணும் போது ஆலயத்தின் பகுதிகளையும், எவ்வகையில் கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

21 நிமிட விழியப் பதிவு இது. பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதை வரவேற்கிறேன்.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_14.html

யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=Yhc4KM4p7Vo&feature=youtu.be

புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: பெப்ரவரி 2014:திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயில்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES