நேற்று மாலை ஸ்டுடார்ட் பல்கலைக்கழகத்தில் தாய்மொழிகளின் தினம் நிகழ்ச்சி நலமே நடைபெற்றது. மொழிகளில் ஆர்வமுள்ள பலர் வந்து கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் மொழி பற்றிய ஒரு அறிமுக நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நானும் நண்பர் யோக புத்ராவும் வழங்கினோம். நண்பர் யோகா இலங்கைத் தமிழர். ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டுட்கார்ட் நகரில் வசிப்பவர். SWR தொலைகாட்சி நிருவனத்தில் பணிபுரிபவர். எங்களுக்கு ஏறக்குறைய 30 நிமிடங்கள் பேச வழங்கியிருந்தார்கள்.
அதோடு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை வங்காளதேசத்து மக்களின் கலையைச் சிறப்பிக்கும் ஒரு அறை. அதனால் அந்த அறைக்கு ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் மோனோகொல் என்ற ஒரு அமைப்பு பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தது. அந்த அறையின் அலங்காரம் வரவேற்பு என அனைத்தும் வங்காள தேச முறைப்படி என ஏற்பாடு செய்திருந்தனர்.
மாலை உணவு வகை அந்த அறையில் வங்காள தேச உணவு என்பதாகவும் ஏற்பாடாகியிருந்தது.
தமிழ் பொழி பற்றிய உரையுடன் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் நாங்கள் ஒரு சிறு தமிழ் நூல் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தோம். அந்த கண்காட்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை - மின்தமிழ் நண்பர்கள்
- டாக்டர்.மா.ராஜேந்திரன்
- டாக்டர்.பத்மா
- திரு.மோகனரங்கன்,
- டாக்டர்.கார்த்திகேசு
- திரு.நரசய்யா
- திரு.மாலன்
- திருமதி பவளசங்கரி,
- திரு.திவாகர்
- டாக்டர்.நா.கண்ணன்
ஆகியோரது நூல்களையும் ஏனை பிற நூல்களையும் இணைத்திருந்தேன்.
எங்கள் நிகழ்ச்சியை பாடர்ன் உட்டன்பெர்க் மானில ஆட்சிக்குழுவிலிருந்து வந்திருந்த திரு.ஹெல்முட் ஆல்பெர்க் தொடக்கி வைத்து பேசினார். பொதுவான ஒரு பேச்சாக அது அமைந்தது.
எங்கள் தமிழ் மொழி பற்றிய உரையில் நானும் யோகாவும் தமிழ் எழுத்துக்கள் அறிமுகம்,. தமிழ் மொழி பேசப்படும் நாடுகள், அதன் ஆரம்பகால எழுத்து வடிவம், தமிழ் நூல் அச்சு வரலாறு, முதல் தமிழ் நூல், குட்டன்பெர்க் அச்சு இயந்திரம், அச்சுக் கலை வளர்ச்சியில் போர்த்துக்கீஸிய தாக்கம், ஜெர்மானிய பாதிரிமார்களின் தமிழ்-ஜெர்மன் மொழி தொடர்பான செயற்பாடுகள், ஹாலே தமிழ் தொகுப்புக்கள் என பல தகவல்களை வழங்கினோம்.
வந்திருந்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய திரு. ஆல்பெர்க் ஹாலே தொகுப்புக்களைப் பற்றி தாம் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்றும் அதனை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளதாகவும் பின்னர் தேனீர் நேரத்தில் என்னிடம் குறிப்பிட்டார். வேறொரு சமயத்தில் இதுபற்றி மேலும் தகவல் அளிப்பதாக உறுதி கூறியிருக்கின்றேன்.
அடிப்படையில் ஒரு எண்ணெய் சோதனைத்துறை எஞ்சீனியரான திரு.ஆல்பெர்க் இந்தோனீசியாவிலும் தாய்லாந்திலும் பல ஆண்டுகள் தொழில் முறையில் கழித்தவர் என்பதும் மலாய் கலாச்சாரமும் மொழியும் ஓரளவு அறிந்தவர் என்பதும் எனக்கு ஆர்வத்தை அளித்தது. எனது தமிழக தொடர்புகள், பயணங்கள், தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் பற்றி பின்னர் அதிக நேரம் உரையாடினோம். இது அவருக்கு ஒருமுறை தமிழகம் வந்து கட்டாயம் ஆலயங்களில் உள்ள கல்வெட்டுக்களை காண ஆவலை உருவாக்கியுள்ளது.
எங்கள் உரையோடு அதற்கு பின்னர் ஹங்கேரி நாட்டின் மொழி பற்றி ஒருவர் சிறு விளக்கம் அளித்தார்.
அதன் பின்னர் வங்காள மொழி பற்றி டோய்ச்ச வெல்ல தொலைகாட்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிருபர் ஒருவர் ஆங்கிலம், வங்காளம் என இரு மொழிகளில் உரையாற்றினார்.
அதன் பின்னர் வங்காள மொழி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மிகச் சிறப்பாக தேசிய உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களாகத் தேர்ந்தெடுத்து இவர்கள் நிகழ்ச்சியை நடத்தினர். அழகிய சேலைகளில், கண் கவரும் அலங்காரத்துடன் பெண்மணிகள் வந்து கலை நிகழ்ச்சியை செய்தது மிக அருமையாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சி இரவு உணவுடன் முடிவுற்றது. இத்தாலிய உணவகத்தில் இரவு உணவை முடித்து இல்லம் திரும்பினேன்.
பல இனங்கள் வாழும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இவ்வகை நிகழ்ச்சிகள் மாறுபட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளையும் மொழி கலாச்சார பண்பாட்டு விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. அருமையானதொரு நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மகிழ்ச்சி மனதில் நிறைந்திருக்கின்றது.
சுபா
மறுமொழிகள்
1 comments to "அனைத்துலக தாய்மொழிகளின் தினம் 22.2.2014 - ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி"
February 23, 2014 at 2:08 PM
ஆங்கிலமொழிகலந்து பேசுவதுதான் நாகரீகம் என்கிற பொய்மாயை தமிழ்நாட்டில் பரவிவிட்டது. பொது ஊடகங்களிலும் இதே நிலை. அழிந்துவரும் நிலையில் தமிழ்? அயல் நாட்டில் வாழ் தமிழர்கள் தமிழின் பெருமையை, அருமையை உணர்ந்து போற்றி பாதுகாப்பது பெரிய தொண்டாகும்.
Post a Comment