வணக்கம்.
இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.
இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவல்களை நமக்காகப் பகிர்ந்து கொள்பவர் தமிழகத் தொல்லியல் துறையின் டாக்டர்.பத்மாவதி.
இக்கோயிலைப் பற்றிய சிறந்த அறிமுகத்தை வழங்கும் ஒரு கட்டுரையை இவ்வெளியீட்டில் இணைத்திருக்கின்றோம். இதனை தட்டச்சு செய்து வழங்கிய கீதா சாம்பசிவம், செல்வன் ஆகிய இருக்கும் நம் நன்றி.
முனைவர்.க. சுபாஷிணி
ஆசிரியர்: வி.கந்தசாமி எம்.ஏ., எம்.எட்.
திருச்சி மாவட்டத்தில், கும்பகோணத்திலிருந்து 27 கிமி தொலைவில் 'கங்கை கொண்ட சோழபுரம்' உள்ளது. (தஞ்சாவூரிலிருந்து 71 கிமி). இவ்வூரின் வரலாற்று சிறப்பினையும், கலை சிறப்பினையும் இங்கே காணலாம்.
வரலாற்றுச் சிறப்பு
தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டிச் சீரும் சிறப்புமாக ஆட்சி புரிந்தவர் இராஜராஜ சோழன். இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராசேந்திர சோழன் ஆவார். இவரது ஆட்சிகாலம் கிபி 1012 முதல் 1044 வரை ஆகும். இவர் தம் தந்தையை போல் சிறந்த வெற்றி வீரராக விளங்கினார். இலங்கையை முழுவதும் வென்றார். வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகள் பெற்றார். 'கடாரம்' வரை சென்று வெற்றி பெற்றார். கங்கைவரை சென்று வெற்றிபெற்ற இம்மன்னன் 'கங்கை கொண்ட சோழன்' என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கங்கைவரை தாம் அடைந்த வெற்றிக்கு அறிகுறியாக 'கங்கை கொண்ட சோழபுரம்' என்ற புதிய நகரை உருவாக்கினார். கங்கைகொண்ட சோழபுரம் உருவாகு முன்பு அந்த இடம் 'வன்னியபுரம்' என்ற ஒரு சிற்றூராக இருந்தது. கிபி 1023ல் புதிய நகர் உருவாகும் பணி தொடங்கபெற்றது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்புமிக்க அரண்மனை கட்டபட்டது. பலத்த கோட்டைகள் எழுப்பபட்டன. 'கங்கை கொண்ட சோழீசுவரம்' என்ற சிவாலயம் எழுப்பபட்டது. 'கோழகங்கம்' என்ற மிகபெரிய ஏரி வெட்டபட்டது. கிபி ஏறகுறைய 1025ல் கங்கைகொன்ட சோழபுரத்தை இராஜேந்திர சோழர் தமது அரசின் புதிய தலைநகராக கொண்டார். சோழர் தலைநகர் தஞ்சையிலிருந்து கங்கை கொன்ட சோழபுரத்துக்கு மாற்றபட்ட்து.
வடகே துங்கபத்ரா நதி முதல் தெற்கில் இலங்கை வரை உள்ள சோழப் பேரரசிற்கு கங்கை கொன்ட சோழபுரம் தலைநகராயிற்று. முதலாம் இராசேந்திர சோழனுக்கு பின் வந்த சோழ மன்னர்களுக்கும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. கங்கை கொன்ட சோழபுரம் சோழபேரரசின் தலைநகராக்ச் சுமார் 250 ஆண்டுகள் பெருமையுடன் விளங்கியது. இத்துணை சிறப்புமிக்க நகரம் எங்கே போயிற்று? கி.பி. 13ம் நூற்றாண்டில் பெருமையுடன் விளங்கிய பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251- 68) படையெடுப்பினால் இந்நகரம் அழிவுற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுந்தரபாண்டியனுக்குப் பின் ஆட்சிபுரிந்த மாறவர்மன் குலசேகரன் (1268 - 1310) மூன்றாம் இராஜேந்திரன் என்ற கடைசி சோழ மன்னரைக் கி.பி. 1279ல் தோற்கடித்துச் சோழராட்சி மறைந்திடச் செய்தார்.
மறைந்த தலைநகரின் எஞ்சிய பகுதிகள் சிலவற்றை இன்று நாம் காணலாம். கங்கை கொண்ட சோழபுரத்திற்கு 2 கி.மி தென்கிழக்கிலுள்ள 'மாலிகை மேடு' என்ற இடத்தில் இராஜேந்திர சோழன் வாழ்ந்த மாளிகையின் அடையாளங்கள் உள்ளன. இங்கு அகழ்ந்து காணப்பட்ட தொல்பொருள்கள் தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையினரால், மாளிகை மேட்டுப் பகுதியிலேயே காட்சிப்பொருள்களாக வைக்கபட்டுள்ளன.
கங்கை கொண்ட சோழபுரத்தின் ' கோ இல்' மறைந்த பின்னும், 'கோவில்' மட்டும் அழியாது நின்று, இராசேந்திர சோழனின் பெருமையைக் கூறுகிறது. தொல்பொருள் துறையினரின் ஆராய்ச்சியில் இந்நகரம் இருந்து வருகிறது.
கங்கை கொண்ட சோழிசுவரத்தின் சிறப்பு
இராசேந்திர சோழர் தம் தந்தையைப்போல் ஒரு சிவபக்தராக விளங்கினார். தம் தந்தை அமைத்த பிரகதிஈஸ்வரர் ஆலயம் புகழுடன் விளங்கினாலும், தம் புதிய தலைநகருக்கு ஒரு சிவாலயம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், சிவன் மீது கொண்ட பக்தியினாலும் தம் புதிய தலைநகரத்தில் ஒரு சிவாலயத்தை எழுப்பினார். இது 'கங்கை கொண்ட சோழீசுவரம்' எனப்பட்டது. கங்கை கொண்ட சோழீசுவரத்தின் சிறப்பினைச் சிறிது இங்கு பார்ப்போம்.
1. விமானம், அகமண்டபம், முக மண்டபம், அம்மன் கோவில் திருச்சுற்று மாளிகை, திருமதில், கோபுரங்கள் முதலிய அங்கங்கள் உள்ளிட்டு யாவும் ஒரே காலத்தில் கட்டப்பட்ட சிறப்பினைக் கங்கை கொண்ட சோழீசுவரம் கோவில் கொண்டுள்ளது.
2. கோவிலின் கட்டடப் பகுதிகள் யாவும் கருங்கல்லினாலானவை. போக்குவரவு வசதி இல்லாத கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வெகு தூரத்திலிருந்து பல டன் எடையுள்ள கருங்கற்களைக் கொண்டு வந்து ஒரு பெரிய கற்கோவிலமைத்திருப்பதை யாரும் பாராட்டாமலிருக்க முடியாது.
3. கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயமும், தஞ்சாவூரிலுள்ள சிவாலயமும் கட்டட மற்றும் சிற்பக் கலையில் பல அம்சங்களில் ஒன்று போலிருக்கின்றன. கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தஞ்சைக் கோவிலைப்போல் உயரமான அதிட்டான மேடை மீது ஏற்றிக் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கோயிலின் அதிட்டான மேடை, கட்டடக் கலையில் தஞ்சைக் கோவிலையும் விஞ்சும் அளவில் உள்ளது. ஆனால் தஞ்சைக் கோவிலின் அடித்தளம் கண்டுபிடிக்கப்படாத புதிராக உள்ளது.
4. தஞ்சைப் பெரிய கோவிலைப் போல் கங்கை கொண்ட சோழபுரக் கோவிலும் சிறப்பு மிக்க விமானத்தைப் பெற்றுள்ளது. தஞ்சை விமானத்தைப் போல் இவ்விமானமும் கவர்ச்சி மிக்கது. மூலவருக்கு மேலுள்ள விமானத்தின் கட்டுக்கோப்பு தஞ்சையைப்போல் அடிமுதல் ஸ்தூபி வரை கருங்கல்லாலாகியது. ஆனால், தஞ்சை விமானத்தை விட உயரத்தில் குறைவாக உள்ளது. தஞ்சை விமானத்தின் உய்ரம் 61 மீட்டர். கங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் விமானம் 55 மீட்டர் உயரமுள்ளது. தஞ்சைக் கோயில் விமானத்தைப் போல் இக்கோவிலின் விமான நிழல் பூமியில் விழாதபடி கட்டப்பட்டுள்ளது. விமானத்தின் அடி முதல் ஸ்தூபி வரை உள்ள சிற்பங்கள் தென்னிந்தியாவில் உள்ள யாவற்றிலும் வனப்பும் சிறப்பும் பொருந்தியவையாகக் கருதப்படுகின்றன. விமானத்தின் பிரம ரந்திரத் தளக்கல் தஞ்சைக் கோவிலைப் போல் ஒரே கல்லாலானது. இவ்வூருக்கு அருகிலுள்ள பரணம் என்ற கிராமத்திலிருந்து சாரம் அமைத்து இக்கல்லை விமானத்தின் சிகரத்தில் ஏற்றினார்களாம்!
5. விமானத்தின் சுவர்களிலுள்ள தேவ கோட்டங்களில் உயிர்ச் சிற்பங்களாகக் காட்சியளிக்கும் பல தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, ஹரிஹரன், நடராஜர் ஆகிய திருவுருவங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் கங்காதரர், லிங்கோத்பவர், உபயதேவிகளுடன் கூடிய திருமால், தேவேந்திரன், உமாமகேஸ்வரர் ஆகிய திருவுருவங்கள் உள்ளன. வடக்குச் சுவரில் காலசம்ஹாரர், விஷ்ணு, துர்கை, பிரமன், பைரவர், காமதகன மூர்த்தி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. கிழக்குச் சுவர்களில் சண்டேச அனுக்கிரஹ மூர்த்தி, ஞான சரஸ்வதி, பிக்ஷாடனர், கஜலக்ஷ்மி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் யாவும் சோழர் காலச் சிற்பிகளின் உன்னதப் படைப்புகள் ஆகும். இவை பார்ப்போர் யாவரையும் மெய்ம்மறக்கச் செய்கின்றன. இவை இந்து சமய வரலாற்றினையும் சிறந்த கலை நுணுக்கத்தையும் கொண்டுள்ளன. சண்டேச அனுக்கிரக மூர்த்தியின் சிற்பம் அதிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இச்சிற்பமும் இதர சில சிற்பங்களும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பணியினால் புதியன போல் காட்சியளிக்கின்றன.
6. துவார பாலர்கள் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு மிக்க அம்சம் ஆகும். கிழக்கு, தெற்கு, வடக்கு வாயில்களிலும், கோயிலுள்ளும் 10 துவார பாலர்கள் சிற்பங்கள் உள்ளன. இவை சுமார் 4 மீட்டர் உயரத்தில் ஒரே கல்லினால் ஆனவை. இத்துவாரபாலர் சிலைகள் கோவிலில் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றன.
7. கோவிலின் வாயிலை அடுத்து வலப்புறத்திலுள்ள நவக்கிரகச் சிலை புகழ் மிக்கதாகும். ஒரே கல்லால் அமைக்கப்பட்ட இந்த நவக்கிரகச் சிலையைப் போல் இந்தியாவில் எங்கும் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நவக்கிரகம் உள்ள மகா மண்டபத்தில் மேலும் பல அரிய சிற்பங்கள் உள்ளன.
8. கர்ப்பக்கிருகத்திலுள்ள லிங்கம் இக்கோவிலின் மிக முக்கியமான அம்சம் ஆகும். மூல லிங்கம் மிகப் பெரிய வடிவுள்ளது. ஒரே கல்லாலானது. தஞ்சைக் கோவிலிலுள்ள விங்கத்தை விடச் சற்றுப் பெரியது. இந்த லிங்கம் உலகிலேயே பெரியது என்று கூறப்படுகிறது. பகலில் எந்தவித மின் விளக்குச் சாதனமும் இல்லாத இருட்டான சூழ்நிலையில் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது மட்டும் சூரிய ஒளி பிரதிபலிப்பு ஏற்படுவது விநோதமாக உள்ளது.
9. கோவிலிலுள்ள செப்புத் திருமேனிகள் சிறப்பு மிக்கவை. இவற்றுள் குறிப்பிடத் தக்கது சோமாஸ்கந்தர் சிலையும் சுப்பிரமணியரது சிலையும் ஆகும். இவை சோழர் காலத்து வார்ப்புக் கலைத்திறனைக் காட்டுகிறது.
10. சிங்கக் கிணறு இக்கோவிலின் மற்றொரு சிறப்பு ஆகும். இராசேந்திர சோழர் தனது வட இந்தியப் படையெடுப்பின் பொழுது கொண்டு வந்த கங்கை நீரின் ஒரு பகுதியை இக்கிணற்றில் ஊற்றினார் என்று கூறப்படுகிறது. இக்கிணற்றின் நீர் இன்றும் பயன்படும் நிலையில் உள்ளது. உடையார் பாளையம் நிலக்கிழாரால் சிங்கமுகம் கட்டப்பட்டதாகும்.
கோவிலின் வாயிலில் இராசேந்திர சோழன் காலத்தில் அமைத்த கோபுரம் இன்று பாழடைந்த சில கற்களின் அடித்தளத்துடன் மட்டும் காணப்படுகிறது. இந்ந்கரிலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ள கொள்ளிட நதியில் ஓர் அணையைக் கட்டுவதற்குப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இக்கோவிலின் கோபுரத்திலிருந்தும் மதில் மற்றும் முன் மண்டபங்களிலிருந்தும் கருங்கற்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். (1836)
கோவிலைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் உத்தர கைலாச அம்மன் கோவில், சண்டிகேஸ்வரர் கோவில், தக்ஷிண கைலாசம், மஹிஷாசுர மர்த்தினி கோவில் ஆகியவை உள்ளன.
கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தமிழ் மக்கள் பண்பாட்டின் பெருமையைக் கூறும் ஓர் உன்னதச் சின்னம் ஆகும். இக்கோவில் முதலாம் இராசேந்திர சோழன் நமக்கு விட்டுச் சென்றுள்ள தலை சிறந்த மரபுரிமைச் செல்வம் ஆகும். தஞ்சைச் சோழர்கள் ஆட்சிக்காலம், 'தமிழகக் கோவில் வரலாற்றில் பொற்காலம்' என்பதை உலகிற்குக் காட்டும் கலைக்கோவிலாகும்.