வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
அறிவர் கோவில்
புதுக்கோட்டை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குகைக் கோவிலின் உள்ளே ஒரு சிறு அறையும் வெளியே ஒரு தாழ்வாரமும் உள்ளன. குகைக்கோவிலின் சுவர்களில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. சித்தன்னவாசலும், இதனருகிலுள்ள அன்னவாசலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்த சமண மையங்களாக விளங்கின.
கோவிலுக்குள்ளே
மதுரையைத் தலைநகராகக் கொண்டு அவனிய சேகர ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி, 815-862) ஆட்சி செய்தபொழுது இளம் கௌதமன் என்ற மதுரை ஆசிரியர், சித்தன்னவாசல் குகைக் கோவிலைத் திருப்பணி செய்து, இங்கு உலகம் வியக்கும் ஓவியங்களைத் தோற்றுவித்தார் என்று இக்குகைக் கோவிலிலுள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. இங்குள்ள சுவர் ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் உருவானவை என்ற கருத்தும் உள்ளது.
- தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பன்பாட்டுச் சின்னங்களும்
சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியம், சிற்பம், நடனம் என முக்கலைகளையும் சிறப்பிக்கும் கலைக்கூடமாக விளங்குகின்றது.
ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள்
சித்தன்னவாசலோடு இணைந்ததாக அமைந்திருப்பது ஏழடிப்பட்டம் சமணர் பள்ளி. இங்குள்ள பாறையின் மலைப்பகுதியின் மேல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 17 சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கே பிராமி எழுத்துக்களிலான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெடுக்களில் சில கி.மு 3-2 வரையிலானவையாக இருக்கலாம் என அறியப்படுகின்றது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/05/blog-post_17.html
யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg
இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.
புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்!
இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய திரு.நரசய்யா அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "மண்ணின் குரல்: மே 2014: சித்தன்னவாசல்"
June 13, 2014 at 10:29 PM
மிக அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Post a Comment