வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
சோழர் காலக் கோயிலில் வரிசையில் மேலும் ஒரு பழமையான கோயிலின் பதிவை இன்று காணவிருக்கின்றோம்.
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருப்பது காமரதிவல்லி பாலாம்பிகை உடனுறை சௌந்தரேசுவர சுவாமி கோயில். இக்கோயில் சுந்தர சோழனால் இன்றைக்கு சுமார் 1050 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.
மிக மோசமான நிலையில் சிதைந்திருந்த இந்தக் கோயில் சென்னையைச் சார்ந்த மாகாலக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களது ட்ரஸ்ட் பெரு முயற்சியில் உள்ளூர் மக்களின் பேராதரவுடனும், ஒத்துழைப்புடனும், உழைப்புடனும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது.
கோயிலின் மூலவர்: சௌந்தரேசுவர சுவாமி - கார்க்கோடகன் பூசித்து பேறு பெற்றதனால் இறைவன் 'கார்க்கோட்டீசுவரர்', கார்க்கோடகர் என்ற பெயர்களிலும் விளங்குகிறார்.
கோயிலின் அம்மன்: பாலாம்பிகை
சிற்பங்கள்: ஆலயத்தில் வினாயகர், வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகன், துர்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர்.
இத்துடன் சிறப்பாகை சிவலிங்க வடிவில் இருக்கும் பெருமானுக்கு கார்க்கோடகன் பூஜை செய்யும் வகையில் அமைந்த சிற்பம் ஒன்றும் உள்ளது.
இது நாகதோஷத்தை நீக்கும் பரிகாரத் தலமாகவும் கருதப்படுகின்றது. கோயிலின் ஒரு பகுதியில் நாகர் சிற்பங்கள் இருக்கின்றன.
இக்கோயில் சுந்தரசோழனால் (கி.பி.957-974) அவன் ஆட்சி காலத்தில் கி.பி.962ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் சுந்தர சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், கடாவர்மன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் காணக்கிடைக்கின்றன. சில பகுதிகள் சிதைந்து விட்டாலும் வாசிக்கக் கூடிய நிலையில் இன்னமும் பல கல்வெட்டுக்கள் உள்ளன.
தினமலரின் கோயில்கள் தொகுப்பில் உள்ள இக்கோயிலைப் பற்றிய தகவல்கள் ....... காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே. தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி. காமனை அழித்து விட்டதால், இனப்பெருக்கம் அப்போது குறைந்து போனதாலும், தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன். ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது. இதுவே பின்னாளில் காமரசவல்லி ஆகி விட்டது.
ஊர்ப் பெயருக்கான இந்தக் கதை புராணத்தோடு நின்றுப்போய் விடவில்லை. இதை மெய்ப்பிக்கும் வகையில் ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது. தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திருமேனி. காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள். இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது.
...
ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் நடந்த வேத பாராயண போட்டி பற்றியும், மார்கழி மாதத்தில் நடக்கும் திருவாதிரை விழா பற்றியும், அந்த விழாவில் நடைபெறும் சாக்கக் கூத்து என்கிற கூத்து பற்றியும் கல்வெட்டுகளில் தகவல் இடம் பெற்றுள்ளது.
இந்த ஊரில் நடந்த ஒரு நிலத் தகராறு பற்றிய வழக்கை விசாரிக்க கி.பி. 1240-ல் போசள மன்னன் வீரசோமேஸ்வரன் காமரசவல்லிக்கு வந்து தீர்ப்பு வழங்கிய விவரத்தையும் ஒரு கல்வெட்டு சொல்கிறது. ஆலய வழிபாடுகளுக்கு மாலைகள் கட்டுவதற்கு நந்தவனம் அமைத்த பகுதி பிச்சதேவன் நந்தவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நந்தவனத்தைப் பராமரித்து வந்தவர்கள் வசிப்பதகென ஒரு பகுதியை இருந்துள்ளது. அது திருத்தொண்டன் தொகையன் வளாகம் என வழக்கப்பட்டுள்ளது. http:// temple.dinamalar.com/New.php? id=1703
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சிற்பம் ஒன்றில் அப்பர் சுவாமிகள் மேளதாளத்துடன் சாக்கி கூத்து நடக்கையில் இருப்பது போன்ற ஒரு சிற்பமும் இருக்கின்றது.
விழியப் பதிவைக் காண: http://video-thf. blogspot.de/2014/05/blog-post_ 30.html
யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/ watch?v=Kxs-J4VNG4Q
இப்பதிவு ஏறக்குறைய 14 நிமிடங்கள் கொண்டது.
புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்!
இவ்விழியம் 1.3.2013ம் நாள் பதிவாக்கப்பட்டது. இப்பதிவினைச் செய்ய துணை புரிந்த திரு.சுந்தர் பரத்வாஜ், டாக்டர்.பத்மாவதி, திரு.பரந்தாமன், காமரதிவல்லி ஆலயபொறுப்பாளர், கிராம நாட்டாமை, கிராம மக்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "மண்ணின் குரல்: மே 2014: சோழ நாட்டுக் கோயில் - காமரதிவல்லி"
Post a Comment