வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன.
பகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர். மடத்தோடு இணைந்தவடிவில் அதன் பக்கவாட்டில் அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். கிரந்தத்தில் அமைந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன.
இக்கோயிலில் இடது புறத்தில் நின்ற கோலத்தில் மாதவிக் கொடி கால்களை படர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாகுபலி சிற்பம் உள்ளது.
கோயிலின் ஒரு பக்கத்தில் இருக்கும் தனி அறையில் கருங்கற்களால் செய்யப்பட்ட சமணப் பெரியோர்களின் பாதச்சுவடுகள் உள்ளன. அதன் அருகில் சமண ஐயனார் உருவச் சிலையும் உள்ளது. இது மிகப் பழமையான ஒரு சிற்பம்.
இங்கு ஒரு தனிப்பகுதியில் சாந்தி நாத தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளது. சாந்தி நாத தீர்த்தங்கரர் சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது சின்னமாகிய மான் வடிவத்தையும் காணலாம்..
இக்கோயிலின் ஒரு தனிப்பகுதியில் ஞ்வாலாமாலினி இயக்கி, பத்மாவதி இயக்கி, ஸ்ரீஜினவானி அல்லது சரஸ்வதி , ஸ்ரீ கணதரர், பிரம்மதேவர் ஆகியோருக்குத் தனி சன்னிதிகளும் உள்ளன.
கோயிலின் வெளிப்புறத்தில் கல் தேர் ஒன்று உள்ளது. இது தேர் போன்ற வடிவத்தை ஒத்தது. இந்தத் தேரை இழுத்து வரும் யானை வடிவம் கற்பாறையில் செய்யப்பட்டது. இந்த யானையின் வடிவம் மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் உள்ள மணிகளும் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் கை தேர்ந்த சிற்பக் கலைஞர்களது ஆற்றலை வெளிபடுத்தும் வகையில் உள்ளன.
ஏறக்குறைய 10 நிமிடப் நேரப் பதிவு இது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/ 2015/10/blog-post.html
யூடியூபில் காண: https://www.youtube.com/ watch?v=Y9zTw7fcDLs&feature= youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "மண்ணின் குரல்: அக்டோபர் 2015: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜினாலயம்"
Post a Comment