மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: குறத்தியாறும் குறத்தி அம்மனும்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ  கோயில்கள். அவற்றுள் பல, மக்களோடு மக்களாக  வாழ்ந்து ஏதாவது ஒரு வகையில் மக்கள் மனத்தில் நிலைத்து  நிற்பவர்களால் எழுப்பப்படுபவையாக இருக்கின்றன. கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்குப் புராணக் கதைகளும் இணைந்தே அமைந்துவிடுகின்றன.   
எத்தனை எத்தனை கதை சொல்லிகள் இந்த உலகில் தோன்றி மறைந்து விட்டார்கள். ஒரு மையப் புள்ளியை வைத்து தனது கற்பனைத்திறனைக் கொண்டு ஒரு உலகத்தையே படைத்து விடும் திறன் கொண்டவர்கள் தான் கதை  சொல்லிகள்.   கதைகளை  சிருஷ்டிப்பவர்கள்  மறைந்து விட்டாலும் கூட சொன்னவர்கள் சொல்லிச் சென்ற கதைகள் மேலும் தன்னை வியாபித்துக் கொண்டு,  சலிக்காமல் ஆனால் இன்னும் வெவ்வேறு இணைக்கதைகளையும் உட்புகுத்திக் கொண்டு வளர்ந்து வருவதைத்தான் உலகம் முழுவதும் காண்கின்றோம்.

உலகப் பெரும் நாகரிகங்க​ள் ​அனைத்திலும் ​​என்ணற்​ற​ ​புராணக்கதைகள் ​ தோன்றின​.​ ​ இந்திய சூழலில் மட்டுமல்ல. மெசபட்டோமிய, அசிரிய, எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோமானிய, கெல்ட்​ என பழமைவாய்ந்த​ ​ பல்வேறு பண்டைய ​சமூகத்தி​லும் புராணக்கதைகள் தவிர்க்கப்படமுடியாதனவாக இருக்கின்றன. ​பொதுவாகவே புராணக்கதைகள்​ என்பன​ மனிதர்களை மையக் கதாமாந்தர்களாகக் கொண்டனவாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் பெறுவதாக அமைவது மாயாஜாலங்கள் தாம். புராணங்கள் வழி புதுப்புது கடவுளர்கள் படைக்கப்பட்டார்கள். படைக்கப்பட்ட கடவுளர்களுக்கு உருவங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்குத் தனித்தனி தன்மைகள் வழங்கப்பட்டன. புராணங்களில் படைக்கப்பட்ட அக்கடவுளர்களிலேயே நல்லவர்களும் இருந்தார்கள், தீமை செய்யும் அசுரர்களும் இருந்தார்கள். 

​அது மட்டுமல்ல. ​புராண அவதாரங்கள்​.​ சில வேளைகளில் தவறுகள் செய்து, அதனால் அவர்கள் தண்டனை பெறப்படும் நிகழ்வுகளையும் கதை சொல்லிகள் புராணங்களில் சேர்த்துக் கொண்டார்கள்.  தவறுகள் செய்வது, தண்டனை பெறுவது அல்லது சாபம் பெறுவது, பின்னர் பெற்ற சாபத்திலிருந்து மீள்வதற்காகப் பிராயச்சித்தம் செய்வது, பின்னர் அப்புராண கதாமந்தர்கள் தங்கள் செயல்களால் கடவுளர்களாக மக்கள் மனதில் நிலைபெறுவது​,​ என்ப​ன வழி வழியாக உலகம் முழுவதும் எல்லா நாகரிகங்களிளும் நிகழ்ந்திருக்கின்றது.  

மனிதரின் கற்பனைக்கு  எல்லை இல்லை. யாராலும் தடை செய்ய இயலாத,  அசுர சக்தி ஒரு தனி மனிதரின் கற்பனைக்கு உண்டு. அதற்குச் சுதந்திரம் கொடுத்து கற்பனையை வளர விட்டால் அது  இயற்கையில் இல்லாதவையை இருப்பதாக்கிக் காட்டும். கதைசொல்லிகள் என்போர் காலம் காலமாகச் சொல்லிய  கதைகளால் தான் சமயங்கள் வளர்ந்தன; கருத்துருவாக்கங்கள் வளர்ந்தன. கதைகளை நம்புவோரும் இருந்தனர்; அதே வேளை கதைகள் தோற்றுவிக்கும் மாய ஜாலத்தை எதிர்த்துப் போராடும் எதிர்மறை கருத்து சித்தாந்தகளும் பிறந்தன.​

தமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக்  கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும்   அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த  கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.

குறத்தியாறு, இப்படி ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு  காப்பியம். எழுத்தாளர் கௌதம சன்னாவின் எழுத்தில்  வடிக்கப்பட்ட ஒரு ஆற்றின் கதை. 

இந்த நாவலை நான் வாசிக்க நேர்ந்த போது நாட்டார்வழக்காற்றியல் வகையிலான ஒரு வரலாற்றுப் பதிவிற்கு ஒரு நல்ல சான்றாக இந்த நாவல் அமைந்திருப்பதை உணர்ந்தேன்.

இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் குறத்தியாறு தான். வட சென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தின்  மொன்னேட்டுச் சேரியே இந்த நாவல் நடக்கும் கதைக்களம். குறத்தி நதிக்கான புதிய புராணம் அங்கேயே  அதே ஊரில் பிறந்து வளர்ந்து அந்த கிராமத்திலேயே வழி வழியாக சொல்லப்பட்ட  கதைகளை கேட்டு வளர்ந்த ஒரு கதாசிரியரால் வடிவமைக்கப்பட்டுள்ளது  .  கிராமத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும், இயற்கையின் அசைவுகளையும், வயல் வெளிகளையும், ஆற்று மணலின் தன்மையை விளக்குவதிலேயும் அங்கேயே பிறந்து வளர்ந்து ஒவ்வொரு நொடிப்பொழுதையும் தன் மனதில் குறித்து வைத்து,  வழி வழிச் செய்திகளின் அடுக்கில்  தன் சிந்தனைகளை நாவலாசிரியர் பதிந்திருக்கின்றார்.

​இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்பட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள். இன்று  அங்காளபரமேஸ்வரி  என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர்.

சாமிகள்  உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு  கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில் தமிழகத்தின்  ஒவ்வொரு கிராமங்களிலும் பல  சடங்குகள் நிறைந்திருக்கின்றன.

வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள். கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள் பூஜைகள் திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவில் விவரிக்கின்றார்கள். 

புராணங்கள் இன்றும் பிறக்கின்றன. புராணக்கதாமாந்தர்கள் இன்றும் அவதாரம் எடுக்கின்றனர். மனித குலம் உள்ள மட்டும் புராணக்கதைகள் உருவாக்கம் என்பது தொடர் நிகழ்வாக நிச்சயம் இருக்கும். 

​இந்த நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு.  ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வண ங்கப்பட்டு வரும்   நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா.

இத்தகை படைப்புக்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்லாது வரலாற்றுப்பதிவாகவும் வளம் சேர்க்கும் . தொடரட்டும்!


விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/09/blog-post_25.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=Sdm4eEL0P2s


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: மண்டகப்பட்டு மகேந்திரப்பல்லவன் குடைவரைக்கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


 
தமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குடைவரைக் கோயில் எனப்படும் கட்டுமான அமைப்பு இன்றைய தமிழக நிலப்பரப்பில் தோன்றிய காலகட்டம் அது. பல்லவ மன்னர்களில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்டவன் மகேந்திர பல்லவன். இவனே வரலாற்று ஆர்வலர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.  

மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. இம்மன்னனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி, மத்தவிலாசன் என ஏனைய பெயர்களும் உண்டு.
மகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக்  கோவிலின் கல்வெட்டில், தான் இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான, மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறை  என்பது அல்லாமல், பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இந்த மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலே இம்மன்னன் குடைந்து எழுப்பிய முதல் குடைவரைக் கோயில். இதில் குடைவரைக் கோயிலின் ஆரம்ப கால அமைப்பு முறைகளை நன்கு காணலாம். 

ஒரு பெரிய பாறையைக் குடைந்து அதனைப்பகுதி பகுதியாகப் பிரித்து தூண்கள், கருவரைப்பகுதி  என அமைப்பது, அதே பாறையிலேயே துவாரபாலககர் சிற்பத்தைச் செதுக்குவது, எனச் சோதனை முயற்சி போல இந்தக் கோயிலை உருவாக்கியமையை நன்கு காணமுடிகின்றது. இதே மகேந்திரவர்மன் உருவாக்கிய சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் காணலாம்.

விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/09/blog-post_17.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=3y0TBZB_ERg&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய வரலாற்றுத் தகவல்கள் தந்து உதவிய நண்பர் முனைவர்.ரமேஷ் அவர்களுக்கும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட திரு.செங்குட்டுவன் அவர்களுக்கும், இப்பயணத்தில் இணைந்து கொண்ட ஏனையோருக்கும் என் நன்றி.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

































THF Announcement: E-books update:11/9/2016: ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்   (குருபரம்பராவிவரனமென்கிற அருமையான கிரந்தத்துடன் சே.கிருஷ்ணமாசாரியார் பதிப்பு)
ஆசிரியர்:    பின்பழகிய பெருமாள் சீயர்
பதிப்பு: திருவல்லிக்கேணி நோபில் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
ஆண்டு: 1927  

​​

நூலைப்பற்றி:
இந்த நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது. 
நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் ஆழ்வார்கள் வைபவம் எனவும் இரண்டாம் பாகம் ஆசாரியர்கள் வைபவம் என்றும் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியாக குருபரம்பரா விவரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்கள் வைபவம்

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசைப்பிரான்
  5. குலசேகரப் பெருமாள்
  6. பெரியாழ்வார்
  7. ஆண்டாள்
  8. தொண்டரடிப்பொடியாழ்வார்
  9. திருப்பாணாழ்வார்
  10. திருமங்கையாழ்வார்
  11. நம்மாழ்வார்
  12. மதுரகவியாழ்வார்

ஆசாரியர்கள் வைபவம்

  1. நாதமுனிகள்
  2. உய்யக்கொண்டார்
  3. மணக்கால்நம்பி
  4. யமுனைத்துறைபவர்
  5. இளையாழ்வார்
  6. எம்பார்
  7. பட்டர்
  8. நஞ்சீயர்
  9. நம்பிள்ளை



தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 457

மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தமிழ் மரபு கண்காட்சி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


​இளம் குழந்தைகளுக்கான கல்வி என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மனனம் செய்து ஒப்புவித்துத் தேர்வுக்கு தயார் செய்யும் பழக்கத்தை மட்டும் வளர்ப்பதால் ஒரு குழந்தைக்கு முழுமையான கல்வி வளர்ச்சி ​ஏற்பட்டு விடாது. குழந்தைகளின் முழுமையான அறிவு வளர்ச்சி என்பது பாட புத்தகங்களையும் கடந்து அன்றாட வாழ்வியல் விசயங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். சுற்றுச் சூழலில் பார்க்கும், கேட்கும் ,அனுபவிக்கும் விசயங்களை ஒதுக்கி விட்டுப் பாட நூல்கள் மட்டுமே அறிவைத் தரும் என நினைப்பது போலியான கனவு மட்டுமே. 

இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் ஆர்வம் அறிந்து அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம். பெற்றோருக்கு மட்டும் தான் இந்தக் கடமை உள்ளதா என்பதல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தைகளின் சுய வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றலாம். பள்ளிக்கூட பாடத்தை மேலும் சுவாரசியமானதாக ஆக்கும் வகையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளைத் திட்டமிடலாம். 

அந்த வகையில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு நாள் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றினைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம். 

இந்தக் கண்காட்சியில் மாணவர்கள் தாமே முயற்சித்து மிகத் திறமையாக இந்தக் கண்காட்சி முழுமையையும் ஆசிரியர்களின் உதவியோடு செய்திருந்தனர். 
கண்காட்சியில் ஏறக்குறை 500 க்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவரவர் இல்லங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், உழவுக் கருவிகள், ஓலைச்சுவடிகள், பண்டைய தமிழர் விளையாட்டுப் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள், என வெவ்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனைத் தவிர்த்து மாணவர்களே கிராமிய உடையலங்காரங்களுடன் வந்து வயல்களிலும் இல்லங்களிலும் பணி புரிவதை நாடகக்காட்சிகளாக நடித்துக் காட்டினர். 

தமிழர் வாழ்வில் சிறிது சிறிதாக மறைந்து வரும் கிராமிய நடனங்களையும் மாணவர்கள் பாடியும் ஆடியும் காட்டி, கலைகளில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக 2 காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டி பயணமும் இடம்பெற்றிருந்தது. 

கிராமத்து மண் வாசனையை வெளிப்படுத்தும் உணவுப் பொருட்கள் கண்காட்சியும் இடம் பெறத் தவறவில்லை. பலகாரங்களில் இத்தனை வகைகளா என வந்தோரை வியக்க வைத்தன மாணவர்களின் இந்தப் பாரம்பரிய உணவுக் கண்காட்சி. 

மாணவர்கள் கல்வி கற்பதோடு பொது விசயங்களிலும் ஈடுபாடும் ஆர்வமும் காட்ட வேண்டும் என்று தன்முனைப்போடு செயல்படும் இந்த அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திருமதி.புனிதாவும் அவரது துணைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைப் பகுதி பொறுப்பாளரும், மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியருமான முனைவர் மலர்விழி மங்கை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுக்கள். 

இந்த நிகழ்வில் பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினேன். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனையுடன் ஒரு அருங்காட்சியகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது . 

அழகுமலர் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தாளாளர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/09/blog-post_10.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=hHdrYldPl3I&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!














































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​



 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES