மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: மண்டகப்பட்டு மகேந்திரப்பல்லவன் குடைவரைக்கோயில்

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


 
தமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குடைவரைக் கோயில் எனப்படும் கட்டுமான அமைப்பு இன்றைய தமிழக நிலப்பரப்பில் தோன்றிய காலகட்டம் அது. பல்லவ மன்னர்களில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்டவன் மகேந்திர பல்லவன். இவனே வரலாற்று ஆர்வலர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.  

மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. இம்மன்னனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி, மத்தவிலாசன் என ஏனைய பெயர்களும் உண்டு.
மகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக்  கோவிலின் கல்வெட்டில், தான் இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான, மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறை  என்பது அல்லாமல், பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இந்த மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலே இம்மன்னன் குடைந்து எழுப்பிய முதல் குடைவரைக் கோயில். இதில் குடைவரைக் கோயிலின் ஆரம்ப கால அமைப்பு முறைகளை நன்கு காணலாம். 

ஒரு பெரிய பாறையைக் குடைந்து அதனைப்பகுதி பகுதியாகப் பிரித்து தூண்கள், கருவரைப்பகுதி  என அமைப்பது, அதே பாறையிலேயே துவாரபாலககர் சிற்பத்தைச் செதுக்குவது, எனச் சோதனை முயற்சி போல இந்தக் கோயிலை உருவாக்கியமையை நன்கு காணமுடிகின்றது. இதே மகேந்திரவர்மன் உருவாக்கிய சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் காணலாம்.

விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/09/blog-post_17.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=3y0TBZB_ERg&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய வரலாற்றுத் தகவல்கள் தந்து உதவிய நண்பர் முனைவர்.ரமேஷ் அவர்களுக்கும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட திரு.செங்குட்டுவன் அவர்களுக்கும், இப்பயணத்தில் இணைந்து கொண்ட ஏனையோருக்கும் என் நன்றி.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: மண்டகப்பட்டு மகேந்திரப்பல்லவன் குடைவரைக்கோயில்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES