மண்ணின் குரல்: அக்டோபர் 2016: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் நவகண்டம்

1 மறுமொழிகள்

வணக்கம்.

அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 



அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் உள்ளது. பண்டைய தமிழ் மக்களின் பழமை வாய்ந்த தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக இக்கோயிலைக் காண்கின்றோம். கருவறையில் பத்ராகாளியம்மன் எட்டு கைகளுடன் மகிஷனின் தலைமேல் கால் வைத்த வடியில் மகிஷாசுரமர்த்தினியாகக் காட்சியளிக்கின்றாள். 

இந்த பத்ரகாளியம்மன் ஆலயத்திலேயே வெளிப்பிரகாரத்தின் பின்புறத்தில் கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற நாட்டார் குலதெய்வ வடிவங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன . சப்த கன்னிகள், வீரபத்திரன் என வெவ்வேறு வழிபாட்டு வடிவங்கள் நிறைந்த ஒரு வழிபடுதலமாக, ஊர் மக்களும் ஏனையோரும் வந்து வணங்கிச் செல்லும் சிறப்பு மிக்க ஒரு தெய்வீகத் தலமாக இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயில் இன்றைக்கு ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு முன்னரே வழிபாட்டில் இருந்திருக்கக்கூடும் என்று அறியும் வகையில் இக்கோயிலின் வளாகத்தில் நவகண்டம் என அழைக்கப்படும் மனித உருவங்கள் பொறித்த கற்சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமன்றி இக்கோயிலின் உட்புறச்சுவற்றில் பாண்டிய, நாயக்க மன்னர்கள் காலத்து கல்வெட்டுக்களும் சுவற்சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. புனரமைப்பில் சில பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் சில வடிவங்களை மேற்பக்கச் சுவர்களில் காண முடிகின்றது. இக்கோயிலைப் புனரமைப்பு செய்த வேளையில் இதன் சுற்றுப்புரப்பகுதியில் காணப்பட்ட நவகண்ட வடிவங்களைக் கோயிலின் பின்புறத்தில் கிடத்தி வைத்துள்ளனர். 

நவகண்டம் என்பது தன்னையே இறைவனுக்காகவோ அல்லது போருக்குச் செல்லும் தலைவன் அல்லது அரசனின் வெற்றியை மனதில் வைத்து வேண்டிக் கொண்டு தன்னையே வாளால் வெட்டி பலிகொடுத்துக் கொள்வதைக்காட்டும் கற்சிற்பம். இவ்வகைக் கற்சிற்பம் ஒன்று இக்கோயிலில் பின்புறத்தில் தரையில் மண்புதரின் மேல் கிடத்தி வைக்கப்பட்டு கிடக்கின்றது. இது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய வரலாற்றுச் சின்னம் என்பதில் சந்தேகமில்லை. 



நான் இந்த ஆண்டு ஜனவர் 4 தேதி நேரில் சென்றிருந்த போது அச்சிற்பத்தைத்தேடிக் கண்டுபிடித்து அதனை மண் புதர் பகுதியிலிருந்து மாற்றி எடுக்கக் கோயில் நிர்வாகத்தினரை அணுகிக்கேட்க அவர்கள் அச்சிற்பத்தை எடுக்க முன்வந்தனர். இன்று அந்தச் சிற்பம் எந்த நிலையில் இருக்கின்றது  எனத் தெரியவில்லை. இச்சிற்பம் தூய்மை செய்யப்பட்டு மீண்டும் இங்கே பிரதிட்டை செய்யப்பட வேண்டும். 

இந்தப் பதிவைச் செய்த போது பயணத்தில் இணைந்து கொண்ட திருமதி.மவளசங்கரி அவர்களுக்கும் பயண ஏற்பாட்டில் உதவி செய்த செவாலியர் டாக்டர்.மதிவாணன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


விழியப் பதிவைக் காண:      http://video-thf.blogspot.de/2016/10/blog-post_29.html
யூடியூபில் காண:        https://www.youtube.com/watch?v=vao0bofvxEw&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


























அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

மறுமொழிகள்

1 comments to "மண்ணின் குரல்: அக்டோபர் 2016: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் நவகண்டம்"

கரந்தை ஜெயக்குமார் said...
October 29, 2016 at 7:40 PM

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES