வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில்கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. செஞ்சிக்கு அருகே உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் போல பல்லவர்க்கால கோயில் கட்டுமானக் கலைக்குப் புகழ்ச்சேர்க்கும் ஒரு கோயில் பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்.
செஞ்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது "பனைமலை". இந்த மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்ற பெரிய ஏரி அமைந்துள்ளது. மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதி இது. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது.
காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் 2ம் நரசிம்மவர்ம (கி.பி695-722) பல்லவனால் கட்டப்பட்டது இந்தக் கோயில். இந்த மன்னன் இராசசிம்மன் என்றும் அழைக்கப்படுகின்றான். பல்லவ மன்னர்கள் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்ச்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.
கோயில்களைக் கட்டி இறைவழிபாட்டையும் கலைகளையும் போற்றியது போல வேளாண்மைக்கு உதவும் வகையில் ஏரிகளை அமைத்து விவசாயத்தை விரிவாக்கியதில் தமிழகத்தில் பல்லவ மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கன்று விரிந்து கடல் போலக் காட்சியளிக்கும் பனைமலை ஏரியும் இதற்குச் சான்றாக விளங்குகின்றது.
ஸ்ரீ கைலாசநாதர் கோயிலை போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகிறன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது என்பது ஆறுதல் அளிக்கும் ஒன்று.
விழியப் பதிவைக் காண: http://video-thf. blogspot.de/2016/11/blog-post_ 26.html
யூடியூபில் காண: https://www.youtube.com/ watch?v=CBaq-dxKGqM&feature= youtu.be
இப்பதிவில் என் உடன் வந்து புகைப்படங்கள் எடுக்க உதவிய ஸ்ரீதேவி, உதயன் ஆகியோருக்கு என் நன்றி.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]