மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: மண்டகப்பட்டு மகேந்திரப்பல்லவன் குடைவரைக்கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


 
தமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குடைவரைக் கோயில் எனப்படும் கட்டுமான அமைப்பு இன்றைய தமிழக நிலப்பரப்பில் தோன்றிய காலகட்டம் அது. பல்லவ மன்னர்களில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்டவன் மகேந்திர பல்லவன். இவனே வரலாற்று ஆர்வலர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.  

மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. இம்மன்னனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி, மத்தவிலாசன் என ஏனைய பெயர்களும் உண்டு.
மகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக்  கோவிலின் கல்வெட்டில், தான் இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான, மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறை  என்பது அல்லாமல், பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இந்த மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலே இம்மன்னன் குடைந்து எழுப்பிய முதல் குடைவரைக் கோயில். இதில் குடைவரைக் கோயிலின் ஆரம்ப கால அமைப்பு முறைகளை நன்கு காணலாம். 

ஒரு பெரிய பாறையைக் குடைந்து அதனைப்பகுதி பகுதியாகப் பிரித்து தூண்கள், கருவரைப்பகுதி  என அமைப்பது, அதே பாறையிலேயே துவாரபாலககர் சிற்பத்தைச் செதுக்குவது, எனச் சோதனை முயற்சி போல இந்தக் கோயிலை உருவாக்கியமையை நன்கு காணமுடிகின்றது. இதே மகேந்திரவர்மன் உருவாக்கிய சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் காணலாம்.

விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/09/blog-post_17.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=3y0TBZB_ERg&feature=youtu.be

இப்பதிவினைச் செய்ய வரலாற்றுத் தகவல்கள் தந்து உதவிய நண்பர் முனைவர்.ரமேஷ் அவர்களுக்கும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட திரு.செங்குட்டுவன் அவர்களுக்கும், இப்பயணத்தில் இணைந்து கொண்ட ஏனையோருக்கும் என் நன்றி.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

































THF Announcement: E-books update:11/9/2016: ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்   (குருபரம்பராவிவரனமென்கிற அருமையான கிரந்தத்துடன் சே.கிருஷ்ணமாசாரியார் பதிப்பு)
ஆசிரியர்:    பின்பழகிய பெருமாள் சீயர்
பதிப்பு: திருவல்லிக்கேணி நோபில் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
ஆண்டு: 1927  

​​

நூலைப்பற்றி:
இந்த நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது. 
நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் ஆழ்வார்கள் வைபவம் எனவும் இரண்டாம் பாகம் ஆசாரியர்கள் வைபவம் என்றும் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியாக குருபரம்பரா விவரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்கள் வைபவம்

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசைப்பிரான்
  5. குலசேகரப் பெருமாள்
  6. பெரியாழ்வார்
  7. ஆண்டாள்
  8. தொண்டரடிப்பொடியாழ்வார்
  9. திருப்பாணாழ்வார்
  10. திருமங்கையாழ்வார்
  11. நம்மாழ்வார்
  12. மதுரகவியாழ்வார்

ஆசாரியர்கள் வைபவம்

  1. நாதமுனிகள்
  2. உய்யக்கொண்டார்
  3. மணக்கால்நம்பி
  4. யமுனைத்துறைபவர்
  5. இளையாழ்வார்
  6. எம்பார்
  7. பட்டர்
  8. நஞ்சீயர்
  9. நம்பிள்ளை



தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 457

மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


மண்ணின் குரல்: செப்டம்பர் 2016: அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தமிழ் மரபு கண்காட்சி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


​இளம் குழந்தைகளுக்கான கல்வி என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மனனம் செய்து ஒப்புவித்துத் தேர்வுக்கு தயார் செய்யும் பழக்கத்தை மட்டும் வளர்ப்பதால் ஒரு குழந்தைக்கு முழுமையான கல்வி வளர்ச்சி ​ஏற்பட்டு விடாது. குழந்தைகளின் முழுமையான அறிவு வளர்ச்சி என்பது பாட புத்தகங்களையும் கடந்து அன்றாட வாழ்வியல் விசயங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். சுற்றுச் சூழலில் பார்க்கும், கேட்கும் ,அனுபவிக்கும் விசயங்களை ஒதுக்கி விட்டுப் பாட நூல்கள் மட்டுமே அறிவைத் தரும் என நினைப்பது போலியான கனவு மட்டுமே. 

இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் ஆர்வம் அறிந்து அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம். பெற்றோருக்கு மட்டும் தான் இந்தக் கடமை உள்ளதா என்பதல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தைகளின் சுய வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றலாம். பள்ளிக்கூட பாடத்தை மேலும் சுவாரசியமானதாக ஆக்கும் வகையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளைத் திட்டமிடலாம். 

அந்த வகையில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு நாள் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றினைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம். 

இந்தக் கண்காட்சியில் மாணவர்கள் தாமே முயற்சித்து மிகத் திறமையாக இந்தக் கண்காட்சி முழுமையையும் ஆசிரியர்களின் உதவியோடு செய்திருந்தனர். 
கண்காட்சியில் ஏறக்குறை 500 க்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவரவர் இல்லங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள், உழவுக் கருவிகள், ஓலைச்சுவடிகள், பண்டைய தமிழர் விளையாட்டுப் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள், என வெவ்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனைத் தவிர்த்து மாணவர்களே கிராமிய உடையலங்காரங்களுடன் வந்து வயல்களிலும் இல்லங்களிலும் பணி புரிவதை நாடகக்காட்சிகளாக நடித்துக் காட்டினர். 

தமிழர் வாழ்வில் சிறிது சிறிதாக மறைந்து வரும் கிராமிய நடனங்களையும் மாணவர்கள் பாடியும் ஆடியும் காட்டி, கலைகளில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக 2 காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டி பயணமும் இடம்பெற்றிருந்தது. 

கிராமத்து மண் வாசனையை வெளிப்படுத்தும் உணவுப் பொருட்கள் கண்காட்சியும் இடம் பெறத் தவறவில்லை. பலகாரங்களில் இத்தனை வகைகளா என வந்தோரை வியக்க வைத்தன மாணவர்களின் இந்தப் பாரம்பரிய உணவுக் கண்காட்சி. 

மாணவர்கள் கல்வி கற்பதோடு பொது விசயங்களிலும் ஈடுபாடும் ஆர்வமும் காட்ட வேண்டும் என்று தன்முனைப்போடு செயல்படும் இந்த அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திருமதி.புனிதாவும் அவரது துணைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளையின் மதுரைப் பகுதி பொறுப்பாளரும், மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியருமான முனைவர் மலர்விழி மங்கை அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுக்கள். 

இந்த நிகழ்வில் பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினேன். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆலோசனையுடன் ஒரு அருங்காட்சியகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது . 

அழகுமலர் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தாளாளர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விழியப் பதிவைக் காண:     http://video-thf.blogspot.de/2016/09/blog-post_10.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=hHdrYldPl3I&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!














































அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​



THF Announcement: E-books update:4/9/2016: குருபரம்பராப்ரபாவம்

1 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ்  நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  குருபரம்பராப்ரபாவம்  
ஆசிரியர்:    பின்பழகிய பெருமாள் ஜீயர்
பதிப்பு: சென்னை மிமோரியல் அச்சுகூடம் 
ஆண்டு: 1892
 


நூலைப்பற்றி:
இந்த நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது. 
 பொய்கையாழ்வார், பூதத்தாய்வார் எனத் தொடங்கி ஆழ்வார்கள் வைபவம் பாடப்பட்டுள்ளது.   சமஸ்கிருதம் கலந்த வகையில் எழுதப்பட்டுள்ள வாசிக்கக் கடினமான வகையில் அமைந்த நூல். இது ஒரு வைஷ்ணவ சம்பிரதாய நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 456

 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​


​மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2016: ரஞ்சன்குடி கோட்டை

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

Inline image 1

பெரம்பலூரிலிருந்து 17 கி.மீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது இக்கோட்டை. 
  
இக்கோட்டையின் உள்ளே  பீரங்கி மேடை, வழிபாட்டு மண்டபம், வெடி மருந்து கிடங்கு, தண்டனைக் கிணறு இஸ்லாமியர் வழிபட மசூதி, நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

1751 ஆம் ஆண்டு ஒரு பக்கம் ஆங்கிலேயரும் முகமது அலியும், இன்னொருபக்கம் சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் எதிரெதிர் நின்று நடத்திய வலிகொண்டபோரின் சாட்சிக் களமாக இந்தக் கோட்டை இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை இந்தக் கோட்டையைப் பராமரித்து வருகிறது.​

கோட்டையின் வாயிற்பகுதியைக் கடந்து  உள்ளே செல்லும் முன்  விரிவான பூங்கா போன்ற ஒரு பகுதியைக் கடந்து செல்லலாம். இந்தக் கோட்டையைச் சுற்றி பசுமையான சூழல் அமைந்திருக்கின்றது.  கோட்டைக்குச்  சற்றே  அருகாமையில் இருக்கும் கிராமங்களை இந்தக் கோட்டையின் மேற்பகுதியிலிருந்து நன்கு காணமுடிகின்றது. கோட்டையின் சுவர்கள் உருவாக்கப்பயன்    படுத்தப்பட்டிருக்கும் கற்கள் மிக உறுதியானவையாகக் காட்சியளிக்கின்றன. 

கோட்டையின் கட்டட அமைப்பு ஐரோப்பிய கட்டட பாணியை ஓரளவு ஒத்த வகையில் அமைந்திருக்கின்றது. ஆயினும் இடைக்கிடையே பொறுத்தப்பட்டுள்ள தூண்கள்  இந்திய கோயில் கட்டட பாணியை ஒத்தவகையில் அமைந்திருக்கின்றன. இந்தக் கலவையான வடிவமைப்பு இந்தக் கோட்டையை  மாறுபட்ட ஒன்றாகவே காட்டுகின்றது.

ரஞ்சன் குடி கோட்டை,   திருச்சிக்கு அருகாமையில் உள்ள ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களில், சிறப்பிடம் பெறும்  ஒன்று என்பது மிகையல்ல.  


ஏறக்குறை 13 நிமிட விழியப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:   http://video-thf.blogspot.de/2016/08/blog-post_20.html
யூடியூபில் காண:  https://www.youtube.com/watch?v=Ro7YmSTDMig&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

இப்பதிவினைச் செய்ய உதவிய திருச்சி தூயவளனார் கல்லூரி பேராசிரியர் திரு.தமிழ்சூசை அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சாத்தனூர் கல்மரம்
திரு.சிங்காநெஞ்சன்

“நீ கல்லாகப் போகக் கடவாய்’, தவறு செய்த (?) மனைவியை சபித்தார் முனிவர்.உடனே முனிவரின் மனைவி கல்லாக மாறிவிட்டார். பின்னர் இராமர் காலடி பட்டு கல்லாக இருந்த அகலிகை மீண்டும் பெண்ணாக மாறினாள். இது இதிகாசக் கதை. கற்பனைக் கதைதான். உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் காலத்தின் கோலத்தால் மரங்கள் கல்லான நிகழ்வுகள் புவியியல் வரலாற்றில் பூமியின் பல பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிக் கல்லாக மாறிய மரங்கள் தமிழ் நாட்டில் “கல்மரங்கள்” என்றே அழைக்கப்படுகின்றன. நம் நாட்டில் கல் மரங்கள் அதிகமாக உள்ள மாநிலம் நம் தமிழ்நாடுதான்.

தமிழக நில அமைப்பில் சுமார்    80%   வன்பாறைகளால் ஆனது. தீப் பாறைகளும் , உருமாற்றுப் பாறைகளும் இவ் வன்பாறைகளில்  அடங்கும். தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் மென்பாறைகள் காணப் படுகின்றன. படிவப் பாறைகள்  இத் தொகுப்பில் அடங்கும். அரியலூர் பகுதியில் இத்தகைய படிவப் பாறைகளே உள்ளன. பெரும் நீர்நிலைகளில் ஆறுகளால் கொண்டுவரப்படும் படிவங்கள் மற்றும் வண்டல்கள் படிகின்றன.. பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்போது, நீர்நிலைகளின் அடியில்  படியும் படிமங்களின் அளவு, பலநூறு மீ. அளவிற்கு உயர்ந்து விடுகிறது. இப்படிவங்கள்  அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக கெட்டிபட்டுப் பாறைகளாக மாறுகின்றன, இவையே படிவப்பாறைகள் (SEDIMENTARY ROCKS ) எனப்படுகின்றன. . மணல் பாறைகள், களிப் பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் ஆகியவை இப்பகுதியில் கிடைக்கும படிவப் பாறைகள் ஆகும்.

நீர்நிலைகளின் அடியில் படிவங்கள் படியும்போது, அந்த நீரில் வாழும் உயிரினங்களும், ( சிப்பி, நண்டு, நத்தை, மீன் போன்றவையும் , நீர் வாழ் தாவர வகைகளும்), ஆற்றிலடித்து வரப்படும் மரங்கள், கிளைகள் மகரந்தங்கள், ஆற்றில் வாழும் உயிரினங்கள், ஆற்றோரம் உள்ள நிலப் பகுதியில் வாழும் உயரினங்கள் ஆகியவையும் சேர்ந்து புதையுண்டு போகின்றன. மேலும் மேலும் படிவங்கள் மேலே படியும் பொது அடியில் உள்ள படிவங்கள் அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்பட்டு கெட்டிப் படுகின்றன. பாறைகளாக உருவெடுக்கின்றன. அதில் படிந்துள்ள உயிரினங்களில் உள்ள செல்லுலோஸ் போன்ற மென்பொருட்கள் , குவார்ட்ஸ் போன்ற கணிமங்களால் இட மாற்றம் செய்யப் பட்டு , அந்த உயிரினங்கள் உருக் குலையாமல் அப்படியே  தொல்லுயிர் படிவங்களாக (FOSSILS) மாறுகின்றன. பொதுவாக , தொல்லுயிர் எச்சங்கள் படிவப் பாறை களிலேயே  காணப்படுகின்றன. தாம் அடங்கியுள்ள படிமப் பாறைகள் தோன்றிய காலம், சூழ்நிலை போன்றவற்றை அறியவும், பரிணாம வளர்ச்சி பற்றி அறியவும் தொல்லுயிர் எச்சங்கள் மிகவும் பயன் படுகின்றன. தொல்லுயிர் எச்சங்களை ஆய்வு செய்யும் கல்வி தொல்லுயிரியல் (PALAEONTOLOGY) என்று வழங்கப் படுகிறது. புதைபடிவ எரிபொருட்களாகிய நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு ஆகியவற்றை கண்டுபிடிக்கும் பணியில் தொல்லுயிரியல் பெரும்பங்கு வகிக்கிறது.

அரியலூர் பகுதியிலுள்ள படிவப்பாறைகளில் பல்வேறு வகைப்பட்ட  தொல்லுயிர் எச்சங்கள் ஏராளமான அளவில் கிடைக்கின்றன. இவற்றில் மிகப் பெருபாலானவை கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களே ஆகும். இதன் வாயிலாக , தற்போது இப்பகுதிக்கு நூறு கி.மீ. கிழக்கில் உள்ள கடல் , சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்திருக்கிறது என அறிய முடிகிறது.

இந்திய புவியியல் ஆய்வுத்துறையை சேர்ந்த ப்ளான்ஃ போர்ட் (BLANFORD-1862)  மற்றும் இராபர்ட் ப்ரூஸ் ஃபுட் ( ROBERT BRUCE FOOTE-1873) ஆகியோர் இங்கே ஆய்வுகள் நடத்தி , இங்குள்ளப் படிவப் பாறைகள் பற்றியும் அவற்றில் பொதிந்துள்ள 12 கோடி ஆண்டுகள் பழமையான தொல்லுயிர் எச்சங்கள் பற்றியும் உலகிற்கு எடுத்துரைத்தனர். அன்று முதல் அரியலூர் பகுதி “PARADISE OF PALAEONTOLOGISTS” என்றே அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள புவிஅறிவியல் அருங்காட்சியகங்களை , அரியலூர் பகுதி தொல்லுயிர் எச்சங்கள் அலங்கரிக்கின்றன.

இவ்வளவு பெருமை வாய்ந்த அரியலூர் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமை ஏற்ற முதல் இந்தியர் எனும் பெருமை பெற்ற எம்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்  1940 ஆம் ஆண்டில், ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அவர் அரியலூருக்கு பத்து கி.மீ. மேற்கேயுள்ள சாத்தனூர் எனும் கிராமத்திற்கு 7௦௦ மீ. வடக்கே   ஓடைப் படுகை ஒன்றில் 18மீ. நீளமுள்ள தொல்மர எச்சம்/ கல் மரம். ( FOSSIL TREE / WOOD FOSSIL) ஒன்றை கண்டு பிடித்தார். இந்த சாத்தனூர் கிராமத்தின் அருகே உள்ள வரகூர், ஆனைப்பாடி, அழுந்தளையூர், சாரதாமங்கலம் போன்ற கிராமங்களின் அருகே உள்ள ஓடைப் படுகைகளிலும் சில மீ. நீளமுள்ள கல் மரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆயினும் சாத்தனூர் அருகே உள்ள 18 மீ. நீளமுள்ள கல்மரம்தான் இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான, மிகப் பெரிய கல்மரம் ஆகும். அருகே உள்ள ஆனைப்பாடி ஓடைப் படுகைகளில் காணப் படும் “அம்மோநைட்” எனப்படும் கடல் வாழ் உயிரினத்தின்  தொல்லுயிர் எச்சங்கள் , சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரிடேஷியஸ்  காலத்தை சேர்ந்தவை. (இவைகளில் சில கார் சக்கரம் அளவிற்கு பெரிதானவை) எனவே இந்தப் பகுதி சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலின் கீழ் இருந்தது- ஆற்றில் அடித்து வரப்பட்ட பெரிய அடிமரம் கடலில் சேர்ந்து , மேலே மேலே படிந்த படிவங்களின் அடியில் சிக்கி கல்லாக  சமைந்தது (PETRIFICATION)  என்பது தெளிவு.. மணல் பாறைகளில் பதிந்து பூமிக்கு அடியில் இருந்த சாத்தனூர் கல்மரம் , ஓடைகளில் ஓடிவரும் தண்ணீரால் மேலேயுள்ள மண் அரிக்கப்பட்டு , அதனால் வெளிப் பட்டிருக்கிறது. ஆய்வின் போது  கிடைத்த தடையங்களின் அடிப்படையில் , இந்த அடிமரம் சுமார் 26  மீ. இருந்திதிருக்க வேண்டும் என்றும், ஓடை நீரால் அடித்த் செல்லப் பட்டது போக எஞ்சியுள்ள  18மீ. பகுதியே தற்போது நாம் பார்ப்பது. என்றும் தெரிய வருகிறது.

இந்தக் கல்மரம் ஜிம்னோஸ்பேர்ம் ( GYMNOSPERM ) எனப்படும் “பூக்காத”-/”கனிதரா’ தாவரங்கள் பிரிவில்  “கோனிஃபர்” (CONIFER)  எனப்படும் கூம்புடை பிரிவை சார்ந்தது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன் ‘க்ரீடேஷியஸ்” காலகட்டத்தில் இவ்வகைத் தாவரங்களே பூமியில் பெருகி இருந்தன. பின்னர் “ஆஞ்சியோஸ்பேர்ம்”  எனப்படும் பூக்கும் / கனிதரும் மரங்கள் தோன்றின.

தற்போது சாத்தனூர் –அரியலூர் பகுதிகளில் கடலும் இல்லை , பெருங்காடுகளும் இல்லை. இப்பகுதி இன்றைக்கு கடலிலிருந்து 1௦௦ கி.மீ. மேற்கே தள்ளியுள்ளது. ஆனால் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட “க்ரீடேஷியஸ்” காலகட்டத்தில் இபகுதி கடலின் கீழ் இருந்தது என்பதை இங்கே கிடைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் (MARINE  FOSSILS) உறுதி செய்கின்றன. அன்றைய கடற்கரையை ஒட்டியோ அல்லது சற்று தள்ளியோ இருந்த நிலப்பகுதியில் 60-70 அடி உயரமுள்ள மரங்கள் இருதிருக்க வேண்டும். அந்த மரங்கள் ஆறுகளால் அடித்து வரப் பட்டு, கடலை அடைந்து, கடலுக்கு அடியில் படிந்த படிவங்களோடு சேர்ந்து படிந்து , கல்லாக சமைந்திருக்க வேண்டும்., பிற்காலத்தில் புவியியல் மாற்றங்களால் கடல் பின்னே செல்ல தற்போது இந்தக் கல் மரங்களும் ஏனைய தொல்லுயிர் எச்சங்களும், நிலப் பகுதியில் புதைந்து கிடக்கின்றன.ஆறுகளிலும் ஓடைகளிலும் மண் அரித்து அடித்து செல்லப் படும்போது, இவை வெளிப் படுகின்றன.

சரி , மரம் எப்படிக் கல்லாக மாறுகிறது.? சாதரணமாக மரம் மண்ணில் புதையுண்டு போகும் பொது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் அவை மட்கிப் போகும் வாய்ப்புகளே அதிகம். மாறாக , அந்த மரம் புதையுண்ட இடத்தில் மேலும் மேலும் படிவங்கள் படியும் போது அதனால் ஏற்படும் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக மரம் தகன நிலைக்கு உட்பட்டு குமைந்துபோய் கரியாக மாறக் கூடும். நிலக்கரி, பழுப்பு நிலக்கரிப் படிவங்கள் இப்படித்தான் உருவாகியுள்ளன. இதனை CARBONAISATION  அல்லது கரியாக மாறுதல் எனக் குறிப்பிடலாம். மூன்றாவதாக மண்ணில் புதைந்த மரம் மட்கிப் போகும் முன்னால் அந்த மரத்திலுள்ள செல்களின் இடை வெளிகளிலும், செல் அடுக்குகளின் இடை வெளிகளிலும் , நிலநீர் புகுந்து விடுகிறது. அந்த நீரில் கரைந்துள்ள சிலிகா அந்த இடைவெளிகளை ஆக்கிரமித்து தாவரப்  பொருளான செல்லுலோசை இடமாற்றம் செய்து விடுகிறது. இந்த நிகழ்வின் போது மரத்தின் அமைப்பு  உருக்குலையாமல் அப்படியே காப்பாற்றப் படுகிறது. மரம் கல்லாக சமையும் இந்நிகழ்வு “PETRIFICATION” (PETRA  MEANS ROCK)  என்று அழைக்கப்படுகிறது.நிலநீரில் கரைந்துள்ள கனிமங்களின் தன்மைக்கேற்ப கல் மரத்தின் நிறம் மாறுபடுகிறது. சாத்தனூர் கல் மரம் சிலிகாவால் ஆனதால் இது பழுப்பு நிறத்தில் உள்ளது.

அரியலூரைச் சுற்றியுள்ள சாத்தனூர், ஆனைப்பாடி வரகூர் ஆகிய இடங்களில் மட்டுமின்றி , விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை, கடலூர் மாவட்டம் நெய்வேலி, புதுவை காலாப்பட்டு மற்றும் விருதாச்சலம் பாரூர் ஆகிய இடங்களிலும் கல் மரங்கள் கிடைக்கின்றன. இராஜஸ்தான் மாநிலம் பொக்ரேன் பகுதியிலும் கல்மரங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  உலக அளவில் அரிசோனா கல்மரக் காடுகள் மிகவும் புகழ் பெற்றவை.
சாத்தூர் கல் மரத்தின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் கருதி, இந்திய புவியியல் ஆய்வுத் துறை இதற்குக்   கல்மரப் பூங்கா என  பெயரிட்டு , தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது..இந்த இடம் வேலியிட்டு பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஓடை அரிப்பால் வெளிப்பட்ட இந்தக் கல்மரம், எதிர் காலத்தில் ஓடை வெள்ளத்தினால் அகற்றுபட்டு விடக்கூடாது  என்பதற்காக , செயற்கைக்  கால்வாய் அமைத்து ஓடை திருப்பி விடப்பட்டுள்ளது. கல்மரம் பற்றிய புவியியல் குறிப்பு ஒன்றும் இத்துறையினரின் அறிவிப்புப் பலகையில் காணப் படுகிறது. பாதுகாப்பிற்காக பணியாள் ஒருவரும் இருக்கிறார்.


சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் (N.H. 45), பெரம்பலூரில் இருந்து, ஆறு கி.மீ. தெற்கே சிறுவாச்சூர் எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து கிழக்கே செல்லும் சாலையில் 14 கி.மீ. பயணித்தால் சாத்தனூரை அடையலாம்.அண்மைக்காலத்தில் சாத்தனூர் கல் மரத்தின் சிறப்பு பற்றி அறிந்த தமிழக அரசின் சுற்றுலா துறை , சிறுவாச்சூர்- சாத்தனூர் சாலையை செப்பனிடு பணியை மேற்கொண்டது. சாத்தனூரில் கல் மரத்திற்கு அருகே ஓய்வு விடுதி ஒன்றும் கட்டப் பட்டது. பத்து கோடி ஆண்டுகள் பழமையான கல்மரத்தைப் பாதுகாத்துவரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையின்  பணி பாராட்டிற்குரியது.


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES