எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் - பெண்ணியம் பேசும் பேனா
[திரு சந்திரசேகரன், சென்னை (02/11/2008)]
[ஆம், பேசும் பேனாதான்! நாங்கள் பார்க்கச் சென்ற போது கூட, அவர் தினமலருக்கு (திருச்சி பதிப்பு) நாட்டு நடப்புகளைப் பற்றிய தன் எண்ணங்களை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். விஷ்ராந்தியின் நிறுவனர் சாவித்ரி வைத்தி இவரைப் பற்றி குறிப்பிடுகையில் அவருக்கு கைகளை வைத்துக் கொண்டு எழுத லகுவாக மேசை செய்து தர எண்ணம் என்று சொன்னார்.] இன்றோ கூர் மழுங்கினாலும், மையின் தாக்கம் குறையவில்லை!
ராஜம் கிருஷ்ணன். 5/11/1925 பிறந்த நாள். நானும் தமிழ் தேனீ அவர்களும் அம்மாவை சந்தித்தது, சனிக்கிழமை அன்று.
'அவன் ஏன் இன்னும் என்னையெல்லாம் அழைத்துக் கொண்டு போகவில்லை?' என்றார், திடுப்பென்று! மனம் கனத்துப் போனது. இவருக்கே உலகில் இடமில்லை என்றால், தமிழ் தமிழ் என வெற்றுப் பறை சாற்றும் 'தமிழ் மானத் தலைவர்களுக்கு' ஏன் இங்கே இடம் விட்டு வைத்துள்ளார்கள்?
தலை நரைத்திருந்தது. ஆனால் குரலில் சிந்தனையில் காரம் குறையவில்லை. அவர் பேசப் பேச இதுவன்றோ பெண்மை? இதுவன்றோ உண்மை பெண் குரல், பெண் உரிமை என்றெல்லாம் மனம் கொக்கரித்தது. பேனாவின் முனை மழுங்கினாலும், அதிலிருந்து வரும் செய்திகள் சாட்டையடிகள் போலவே மிளிர்ந்தன!
தமிழ்த்தேனீ ம்ருதுவான அவர் குரலைப் பதிவு செய்தாலும், எங்கே செய்திகள் விடுபட்டு விடுமோ என்று, நானும் குறிப்பெடுத்துக் கொண்டேன்.
அவற்றில் சில...
விடுபட்ட விருதுகள்..
- சாகித்ய அகாடமி –இரு முறை
- பாரதீய பாஷா விருது, சோவியத் நாடு – நேரு விருது 1975
- ந்யூயார்க் ஹெரால்டு சர்வதேச விருது. இது எதற்காக என்று அவரையே கேட்டேன். (பெண்ணியத்தை வெளிப்படுத்தக் கூடிய எழுத்துக்களுக்கு ஆசியாவிலிருந்து வருடம் ஒருவரை தேர்வு செய்து பரிசுகள் வழங்குவார்களாம். 1950 வருடத்திய விருது இவருக்கு கிடைத்துள்ளது.)
- கலைமகள் விருது 1973
- திரு.வி.க விருது 1991
மொத்தம் 59 படைப்புகள் வெளிவந்துள்ளன.
எப்படி எழுத்துகளின் மேல் மோகம் வந்தது?
அதைப் பற்றி அவர் கூறுகையில்,'சமூகப் ப்ரக்ஞையும், பெண்களை அவலமாய் சித்தரிக்கும் போக்குமே என்னை எழுத வைத்தன. நானும் பல பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். பதிவுத் தபாலில் திரும்பி வரும். ஆனால், முதன் முறையாக திருச்சி வானொலிக்கு எழுதிய நாடகம், ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று சாதாரண தபாலில் செய்தி வந்தது!
அவசரச் சட்டம் பிரகடனமான போது எழுதிக்கொண்டிருந்த ஒரே பெண் எழுத்தாளர் இவர்தானாம்.
திருச்சி வானொலியில், இவரது நாடகமான 'ஷட்டில் வண்டி' (லால்குடி – திருச்சி இடையே செல்லும் வண்டியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை) நேரடியாக வாசிக்கச் செய்ய அழைத்தார்களாம். தாயாருடன் சென்றிருந்தார். முன்பெல்லாம், நேரடி ஒலிபரப்பு ஆதலால், அங்கே காகிதங்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், இயக்குநர் கையை மேலே உயர்த்தினால் குரலை உயர்த்த வேண்டும், கீழே இறக்கினால், குரலையும் சற்று மட்டுப் படுத்த வேண்டும்.புடவை சரசரப்புகள் பதிவு ஆகக் கூடாது, என்று பல கெடுபிடிகள். இவருக்கு இதெல்லாம் ஒத்துவரவில்லை. அதேசமயம் அவர்கள் எதிர்பார்த்த நேரத்தை விட, மிக வேகமாக, உணர்ச்சி பூர்வமாக தன் கருத்துக்களை கொட்டி விட்டு அமர்ந்திருந்தாராம். எனவே, வெளியில் வந்ததும், அப்போது இருந்த தொழில் நுட்ப வல்லுநர் ஹகிம் என்பவர்,'அப்பப்பா,உங்களுக்கு கடிவாளம் போடவே முடியாதும்மா! புருஷன் எப்படி மாட்டப் போறாரோ?' என்றாராம்.
இவர் பேசியதில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது, ஆதாரத் தகவல்கள் சேர்த்த பிறகே அவர் கதைகளை உருவாக்குவார் என்பது,. அதற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை வருணித்துக் கொண்டே போனவர், நடு நடுவே, 'இதுதான் என் ப்ரச்னையே! எதிராளியை பேசவே விட மாட்டேன்!" நானே பேசிக் கொண்டிருப்பேன்!" என்றார்.
டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அவரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில்,தன் நண்பரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்) என்று நினைக்கிறேன். மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு! எதற்கு இதை குறிப்பிட்டாரென்றால், ஒரு செய்திக்கு உண்மை எத்தனை முக்கியம் என்று எடுத்துக் காட்ட! (authenticity)
அதேபோல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு வைத்தியமும் பார்த்து, கையில் பணமும் கொடுத்து அனுப்பியதைப் பார்த்து இவரது நண்பர் திரு. ராமஸ்வாமி சாஸ்திரி என்பவர், " உயிர் கொடுத்தான் அதனொடு, உடமையும்,பொருளும் கொடுத்த நவீன கடவுள் இவன்," எனும்பொருள் படியான ச்மஸ்க்ருத சுலோகத்தை பாடி, டாக்டரை புகழ்ந்தாராம்! நண்பர் ஆதலால்,மவுனம் காத்த டாக்டர். ரெங்காச்சாரிக்கு,கடவுள் நம்பிக்கை கிடையாதாம்!
சிகிச்சைக்கு படுத்திருந்த நோயாளி ஒருவர் கையில் விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தைப் பார்த்து டாக்டர் கோபம் கொண்டு, "அதை நம்புறதா இருந்தா ஏன் என்னிடம் வரே?" என்று கடிந்து கொண்டாராம்!
பிறகு எது உங்களை இவரது சரிதத்தை எழுத வைத்தது? என்று நான் கேட்டேன்.
"என் கணவர் காலாஅஜார் நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார்.அன்பும், அரவணைப்பும், நல் வார்த்தைகளும் சொல்லி, வைத்தியம் பார்த்த பாங்கைக் கண்டு அவரைப் பற்றி விசாரிக்க, ஊரே புகழ்ந்ததால், உந்தப்பட்டு அவரின் சரிதத்தை கதையின் நடையில் எழுதினேன்" என்றார்.
அதே போல், 'முல்ளும் மலர்ந்தது' என்ற சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றதற்குக் காரணம், இவர் நேரடியாக அவர்களை சந்தித்து பேசியதாலேயே!
தனது சகோதரரின் உதவியுடன் தொலை தொடர்பு துறை நண்பர்கள் மூலம, க்வாலியரில் போய் இறங்கினாராம்! பணியில் இருந்த கணவருக்கு பணி நீட்டம் செய்திருந்தாலும், அதனை உதறச் சொல்லிவிட்டு க்வாலியர் வந்து சேரும்படி சொன்னாராம்!
அங்கே, சரணடைந்த கொல்ளையர் ஒரு பக்கம். கொள்ளை,கொலைகள் செய்து கொண்டு பிடி குடுக்காத கும்பல் ஒரு பக்கம். முதலில் கூறிய மக்களைப் பற்றி அதிகமாக யாரும் எழுதாததால், அதைப்பதிவு செய்ய வேண்டும் என்று என்ணி, அவர்கள் சரணடைந்தவுடன் வந்து சேரும் ஒரு ஆசிரமத்தில் (முன்னாள்) கொள்ளையரை சந்திக்கச் சென்றாராம்.
அதில் மறைந்த மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொருமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொருமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!
மற்றொரு சரணடைந்த கொள்ளையன் மகாவீர் சிங்கை, அவனது இல்லத்தில் சந்திக்க போகையில், இருட்டிவிட்டதால், அங்கேயே கணவன், மனைவி இருவரையும் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்தானாம்! உபசாரமாய் நல்ல சப்பாத்தி, சப்ஜி (காய்கறி) தந்து, பின்னர் குளிருக்கு இதமாய் ரஜாயும் (கம்பளி) தந்தாளாம் அவனது மனைவி.
காலையில், கண் விழித்துப் பார்த்த ராஜம் அம்மாவின் கண்களில், அவனது மனைவி அணிந்திருந்த அதிகப்படியான கனத்த நகைகளே பட்டுக் கொண்டிருந்தது! கால்களை தொட்டு கும்பிட்டு வழியனுப்பியவளிடம் அம்மா, "இவை உங்கள் ஊரில் தாலியா?" என்று கேட்க, கணவனான மகாவீர் சிங் சிரித்துக் கொண்டே, "எல்லாம் கொல்ளையடித்தவை" என்று சொல்லி இடிச் சிரிப்பு சிரித்தானாம்! இவர்களுக்கு தங்க இடம் கொடுத்து வழியெல்லாம் சொன்ன திரு. இந்தூர்க்கர் இவர்களை (மும்பை) அன்றைய பம்பாய்க்கு ரயில் ஏறி அனுப்பி வைத்தாராம். அங்கே தேஷ்முக் என்பவரை சந்திக்கச் சொல்லியிருந்தாராம். தேஷ்முக்கிடம், "திரு. இந்தூர்க்கர் எங்களை அனுப்பி வைத்தார்," என்றதும். "Mr. Indurkar was shot dead yesterday," என்ற அதிர்ச்சி செய்தியை சொல்லி, செய்தித் தாளைக் காட்டினாராம்!
கணவரின் அரசுப்பணியினால், வட மாநிலங்களில் தங்க நேர்ந்ததையும், அப்போதைய கோவாவை தனி மாகாணம் ஆக்குவதா, மகாராஷ்டிரத்தோடு சேர்ப்பதா என்ற சண்டை நேரங்களில், பல இடங்களுக்கு மாற்றப்பட்டதை நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.
உங்களுக்கு இப்போது எத்தனை பாஷை தெரியும்? எனக் கேட்டேன்.
"ஏழு - 7?" என்றார் சிரித்துக் கொண்டே!
இந்த முள்ளும் மலர்ந்த்து புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுர்றி இருந்தவர் என்னை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா வபாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! அந்த புத்தகம் எங்கோ போய்விட்டது என்றார் ஆதங்கத்துடன்.
இவரது உறுதியைப் பார்த்து கி.வா.ஜகந்நாதன் அவர்கள், 'உன்னை பார்த்தால், பத்ரகாளியைப் பர்ப்பதுபோல் இருக்கிறது," என்பாராம்!
தனது நடை, பற்றி பேச்சு வருகையில்,
(தேனீயார் நீங்கள் ப்ராம்மண பாஷையிலேயே எழுதுவதாக.. என்று ஆரம்பித்தவுடனேயே, வேகமாக மறுத்து,
"அப்படி முத்திரை பதிந்துவிடக் கூடாதென்பதில் நான் கவனமாய் இருந்தேன்.
கருப்பு மணிகள், வேருக்கு நீர் போன்ற பதிவுகளில் ப்ராம்மண பாஷை எஙிருந்து வந்தது? பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியே என் ஆதர்சன குரு. உண்மை, நெஞ்சில்பட்டது, சமூகப் ப்ரக்ஞை – இவை மூன்றுமே நல்ல எழுத்தாளனை வெளிக் கொணரும்.
பிற எழுத்தாளர்களைப் பற்றி கூறுகையில், தயங்காமல், தன் கருத்துகளைப்பட்டென போட்டு உடைத்தார்! லா.ச.ரா – பிறர் புகழ்ந்தாலும், எனக்குப் பிடிக்காது. காரணம், பெண்களை அவர் போகப் பொருளாக மட்டும் பார்த்தார்! சுஜாதா எத்தனை அறிவு ஜீவி,படித்தவர்? அவரும், பெண்களை அவர்களது அங்கங்களை வருணித்து எழுதுவதை தவிர்த்திருக்கலாம். அதே போல் ஜெயகாந்தன். பெண்கள் என்று ஒரு மனிதனாக மதிக்கப்பட்டு, கதைகளில் வெளி வருகிறார்களோ,அன்றுதான் தமிழ் எழுத்துக்களுக்கு விடியல்! என்றார்!
அதோடு திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை! பாலசந்தர் என்று ஒருவர். இரண்டு பெண்டாட்டிக் கதை,பெண்களின் அந்தரங்கங்கள், இவற்றையே படம் எடுத்து 'சிகரம்' என்று பேரெடுத்தவர். சினிமா, பெண்களை இன்றும் தவறாகவே சித்தரிக்கும் ஒரு ஊடகம். அதிலிருந்தும் பலர் என் கதைகளைக் கேட்டனர். தர மறுத்து விட்டேன்," என்கிறார்!
சிறிய வயதில் தாம் பார்த்த படைப்புகள், படங்களான,
agony in ecstasy,
flower girl,
biography of Abraham Lincoln,
Ten Commandments,
போன்றாவையே தம்மை படைப்புலகத்திற்கு ஈர்த்தன, " என்கிறார். கணவரின் ஊக்குவிப்பு, ஒப்புதல் பற்றி பேசுகையில், "எந்த சூழ்நிலையிலும், தவறு செய்ய மாட்டேன், என்ற என் மேல் இருந்த நம்பிக்கையே," தன்னை சுதந்திரமாக பணி செய்யவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் சகோதரனையும், அங்கே மருத்துவ காரணங்களால், 'சூழ்நிலைக் கைதி'யாய் இருப்பதையும், நடக்க இயலாமை பற்றியும், எப்போதும் கத்திக் கொண்டிருந்த தொ(ல்)லைக் காட்சிப் பெட்டியில் லயித்திருந்த பணிப் பெண்களின் அலட்சியம் (இருவர் தவிர – புகைப் படத்தில் கண்ட அம்மணி, மற்றும் சத்யா எனும் இளம் பெண்- அவர் புகைப்படத்திற்கு மறுத்துவிட்டார்), நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சுற்றியுள்ள முதியவர்களின் சோகம் போன்றவற்றையும், ஒரு படைப்பாளியைப் போலவே, கோர்வையாகப் பேசிப் பதிவு செய்தார்!
எங்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "மனித நேயம், பெண்மை இரண்டுக்கும் மதிப்பு கொடுங்கள், அதுவே மனிதத்தை உயர்த்தும்,"என்றார்.
83 வயதிலும், தெளிந்த பேச்சு, தீர்க்கமான கருத்துக்கள், என்று தம்மை வெளிப்படுத்திக் கொண்டாலும், அழகிய கண்ணாடி ஜாடி போன்றே அவரது மனம் இருந்ததை எங்களால் உணர முடிந்தது. மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். யாரும் உதவி செய்வதை அவர் விரும்பவில்லை, என்பதும், தமது இந்த நிலை குறித்த வருத்தம் அவர் பேசியதில் வெளிப்பட்டது.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுதான். அதேபோல்தான் அம்மாவும். ஆனாலும் புலிக்கேற்ற உலவு தளம் தருவது, மிருக ஆர்வலர்களின் கடமையன்றோ? மிருகத்திற்கே அப்படி என்றால், தமிழில் தடம் பதித்த ஒரு பெண் எழுத்தாளருக்கு?
தங்குமிடமும், வைத்திய செலவும் தமிழ் வளர்ப்பதாகச் சொல்லும் அரசு ஏன் செய்யக் கூடாது?
காலம் பின்னிரவு ஆகிவிட்டமையால், மனமின்றி அவரிடம், பிரிய மனமில்லாமல், பிரியா விடை பெற்றுக் கொண்டு வந்தோம்.
சந்திரா.