Aum
V.Subramanian
படிக்கவும்
செம்மொழி மாநாட்டில் அரசியல் வேண்டாம்! |
'இலங்கை தமிழறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வாரா... மாட்டாரா?' என்பதுதான் தமிழகத்தில் பரபரப்பு விவாதமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை தெகிவல பகுதியில் வசிக்கும் 77 வயதான சிவத்தம்பியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்: ''கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் மாநாட்டுக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஏன் அனுமதி வழங்க வில்லை?'' ''உலகத்தில் எங்கு உலகத் தமிழ் மாநாடு நடந்தாலும் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்திடம் முன்கூட்டியே தெரிவித்து, அவர்களுடன் இணைந்து நடத்துவதுதான் வழக்கம். தற்போது அந்த கழகத்துக்கு நெபுரூ கரோஷிமா தலைவராக இருக்கிறார்.அமைப்பின் செயலாளர்களில் ஒருவராக நான் இருக்கிறேன். இந்தியப் பிரிவு தலைவராக வா.செ.குழந்தைசாமி இருக்கிறார். தமிழக முதல்வர் கலைஞர் மாநாட்டை முதலில் பிப்ரவரி மாதம் நடத்துவோம் என அறிவித்தபோது, 'இவ்வளவுகுறைவான நேரத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க முடியாது!' என உலகத் தமிழறிஞர்கள் கருதினர். அதனால்தான் மாநாட்டை 2011-ம் வருடம் ஜனவரி மாதம் நடத்தும்படி கரோஷிமா கூறினார். ஆனால், தமிழகத்தில் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வைத்து அவ்வளவு காலம் தள்ள முடியாது என கலைஞர் கருதுவதாகத் தெரிவித்தார். ஆனாலும் கரோஷிமா சில விஷயங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டினார். ஆகவே, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரனிடம் உலகத் தமிழ் மாநாடு என்பதற்கு பதிலாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என நடத்தலாம் என்ற என் எண்ணத்தைச் சொன்னேன். அதன்படியே அந்த மாநாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் நெபுரூ கரோஷிமாவும் கலந்துகொள்வார் என நம்புகிறேன்.'' ''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி நடந்துகொண்ட விதம் திருப்தி அளிக்காததால், மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறதே....?'' ''முதலில், இந்த விவகாரம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துகள் சற்றுத் தவறான கண்ணோட் டத்தில் பார்க்கப்பட்டது. நானும் சில கருத்துகளை லேசான தடுமாற்றத்துடன் தெரிவித்தேன். இப்போது ஜூ.வி-க்கு நான் சொல்லும் விஷயங்களை, கோவை உலக செம்மொழித் தமிழ் மாநாடு தொடர்பான என் தெளிவான, இறுதியான, உறுதியான நிலைப்பாடாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்... கடந்த ஒன்பது ஆண்டுகளில் சர்வதேச அளவில் தமிழுக்காக மாநாடு நடக்காத நிலையில், அதிலும் தமிழ் செம்மொழி ஆன பிறகு இந்த மாநாடு நடப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறேன். அதோடு, மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கிருக்கிறது. என் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பார்க்கையில்,அதில் கலந்துகொள்வது குறித்து உடனே என்னால் தெரிவிக்க இயலாது. உரிய நேரத்தில் என் முடிவைத் தெரிவிப்பேன். இதில் சிலர் தங்களுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் என் மேல் திணிக்க முயல்கிறார்கள். நான் தமிழை நேசிப்பவனே தவிர, அரசியலை அல்ல.'' ''மாநாட்டுக்கு தங்களை வரவிடா மல் தடுக்க சில ஆதிக்க சக்திகள்முயல் வதாக கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?'' (பலமாகச் சிரிக்கிறார்...) ''இதில் கலைஞர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் என்னை மாநாட்டுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார். நானும் பரிசீலிப்பதாகச் சொல்லி யிருக்கிறேன். மற்றபடி, நான் மாநாட்டுக்கு வருவதை தடுக்க சில சக்திகள் விரும்புவதாகச் சொல்லப்படும் அரசியலுக்குள் நான் வர விரும்பவில்லை. அரசி யல் வேறு, தமிழ்மொழி வேறு. இரண்டையும் கலக்கவேண்டாம். நான் மாநாட்டுக்கு செல்ல முடிவெடுத்து விட்டால், என்னை யாராலும் தடுக்க முடியாது!'' ''கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் என்னென்ன விஷயங்கள் விவாதத்தில் இடம்பெற வேண்டும்?'' ''இந்த மாநாட்டில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. செம்மொழி பற்றிய கொள்கைகள்... குறிப்பாக, தமிழ் செம்மொழி ஆன பிறகு அதற்கான கொள்கை வரைவு செய்யப் பட வேண்டும். சைனீஸ், கிரீக், சம்ஸ் கிருதம், லத்தீன், ஹீப்ரு போன்ற உலகச் செம்மொழிகளின் கொள்கைகளை ஆராய்ந்து, அவற்றுடன் செம்மொழி தமிழை ஒப்பிட்டு... கொள்கைகள் வரைவு செய்யப்பட வேண்டும். இந்திய மொழி வம்சம் பற்றிய அறிமுகங்களோடு, சுமேரிய மொழியும் தமிழும்,ஜப்பானிய மொழியும் தமிழும் போன்ற விஷயங்களும் ஆராயப்பட வேண்டும். இந்தோ - ஆரியன், இந்தோ - ஆரியன் - திராவிடன் போன்ற கலாசாரங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும். மருத்துவம், வானியல் மற்றும் ஜோதிடத்தில் செம்மொழியாக தமிழ் பயன்படும் விதம், தமிழகத்தில் ஆட்சிமொழியான தமிழ், இலங்கையில் தமிழ், மலேசியா - சிங்கப்பூர் - தென்னாப்பிரிக்காவில் தமிழின் வளர்ச்சி நிலை, மேற்கத்திய நாடுகளில் சமகால மொழியாக இருந்த தமிழைப் பற்றிய ஆய்வுகள் ஆகியவை நடத்தப்படவேண்டும். இவைதான் செம்மொழி யான தமிழை இன்னும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கச் செய்யும்!'' ''இலங்கையில் தமிழர் கள் முள்வேலிக்குள் கடும் அவதிப்படும் சூழலில் இந்த மாநாடு எந்தளவு அவசியம்?'' ''உலக நாடுகள் மற்றும் ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் முள்வேலி அவதி பற்றி வருத்தம் தெரிவித்திருக்கின்றன. தமிழர்கள் விரைவில் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் என் எண்ணம். தமிழ் மொழி மாநாடு என்பது, தமிழுக்கான கௌரவம். எனவே, இந்த விஷயத்தையும் தமிழ் மொழி மாநாட்டையும் இணைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.'' ''இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை துடைக்கவே இந்த நேரத்தில் செம்மொழி மாநாட்டை கருணாநிதிநடத்துவதாக தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டு கின்றனவே?'' ''இம்மாநாடு அரசியலைத் தாண்டியதாகும். இதற்கு அரசியல் சாயம் பூச முயலக் கூடாது. அதை விடுத்து தமிழ் மொழி பற்றிய சீரியதோர் மாநாட்டினை அரசியலாக்கி, அதற்குக் களங்கம் கற்பிப்பது அழகல்ல..!' |
மறுமொழிகள்
0 comments to "கார்த்திகேசு சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வாரா.?"
Post a Comment