Thiruvanmiyu pathikam(vannasarabam Thandapani suvamigal)
ஒம்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய
திருவான்மியூர் சிவபெருமான் பதிகம்.
0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839- 1898)
நெல்லை மாவட்டத்தில் விகாரி ஆண்டு கார்த்திகை மாதம் ஆறாம் நாளன்று (28-11- 1839) செந்தில் நாயகம் பிள்ளை, பேச்சிமுத்து அம்மையார் ஆகியோருக்கு சங்கரலிங்கம் என்ற மகன் அவதரித்தான். ஆறாவது வயதில் தந்தையை இழந்த சங்கரலிங்கம் தென்காசியருகேயுள்ள சுரண்டை என்ற ஊரில் தனது தந்தையின் நண்பரான சீதாராம நாயக்கர் மூலம் இறைவழிபாடு ஆகியவற்றை அறிந்தார். சிறு வயதில் சந்தப்பாடல்கள் பாடும் வல்லமையைப் பெற்றார். செங்கோட்டையருகே உள்ள திருமலைஎன்ற தலத்தில் முருகனின் தரிசனத்தை நாடினார். ஒரு நாள் முழுவதும் காத்திருந்த பின் தரிசனம் கிடைக்காததால் மலைமீதிருந்து உருண்டு விழுந்தார். ஆயினும் சொற்ப காயங்களுடன் தப்பினார். பின்னர் செங்கோட்டை யில் இருந்தபோது முருகன் தரிசனம் அளித்தார்.
சுவாமிகள் தனது வாழ்வில் மூன்று முறை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. (அவரது மகன் செந்தில்நாயகமும் ஆன்மீக, இலக்கியத் துறையில் சேவை புரிந்தார். செந்தில் நாயகத்தின் மகனான முருகதாச சுவாமிகள் கௌமார மடத்தின் தலைவராகப் பணியாற்றியதுடன் பல நூல்களையும் வெளியிட்டார்.) இறுதியில் சுவாமிகள் துறவறம் பூண்டு காவி உடை, தண்டம், கௌபீனம், நெற்றியில் திரு நீறு, தோளில் திருமண் சின்னம் ஆகியவற்றை ஏற்றார். 1861-ஆம் ஆண்டில் திரு நெல்வேலியை விட்டுக்கிளம்பித் தல யாத்திரை புரிந்தார். மறு ஆண்டு சென்னை கந்தகோட்டத்தில் பல அறிஞர்கள் முன்பு முருகன் பிள்ளைத் தமிழ் என்ற நூலை அரங்கேற்றினார். திருவண்ணாமலையில் முருகன் சந்நிதி வாயிலைச் செப்பனிட்டு அச்சந்நிதியில் வழிபாடுகள் நடைபெற உதவினார். இறுதிகாலத்தில் விழுப்புரத் தையடுத்துள்ள திருவாமத்தூரில் மடம் அமைத்து ஆன்மீக சேவையும் சமூகத் தொண்டும் செய்துவந்தார். ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடுத்தார். பல அற்புதச் செயல்களை நடத்தினார்.
வண்ணம் என்ற ஒருவகை சந்தத்தைப் பாடுவதில் வல்லவராக விளங்கியதால் 'வண்ணச்சரபம்' என்ற பெயரும், திருப்புகழ் அடிகள் என்ற பெயரும், சந்தப் பாடவலப் பெருமான், முருக தாச அடிகள் ஆகிய பெயர்களும் சுவாமிகளுக்கு வழங்கப்பட்டன. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தல், சிறு தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய மிருக பலியைத் தடுத்தல், சாதிக் கொடுமையை எதிர்த்தல், கைம்மைப் பெண்களின் திருமணத்தை ஆதரித்தல், தமிழில் அருச்சனையை ஊக் குவித்தல் ஆகிய கொள்கைகளைச் சுவாமிகள் தனது பாடல்கள் மூலம் வெளிப் படுத்தினார்.
சுவாமிகள் தமிழ் இலக்கணம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் கணக்கற்ற நூல்களை இயற்றியுள்ளார். சந்த வகைக்கு இலக்கணம் வகுக்கும் எண்ணத்துடன் 'வண்ணத்தியல்பு' என்ற நூலை இயற்றினார். வருக்கக் குறள், மனு நெறித் திரு நூல், அருளாட்சி,அரசாட்சி நூல் போன்ற பொது நூல்களை இயற்றினார். திருவ ரங்கம், தில்லை, பழனி ஆகிய தலங்கள் மீது ஆயிரம் ஆயிரம் பாடல்களை எழுதினார். திருவல்லிக்கேணி மீது திருவெழு கூற்றிருக்கை இயற்றினார். புதுவை வேத புரீசர் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் மீது ஐந்து நூல்களையும், திருவா மத்தூர் தல புராணத்தையும், 72 புலவர்களின் வரலாற்றை விவரிக்கும் புலவர் புராணத்தையும் இயற்றினார்.
கௌமார சமயத்தைப் பற்றி 14 நூல்களும் எழுதினார். சூரியன், சிவன், அம்மன், திருமால், கணபதி, முருகன், பொதுக்கடவுள் ஆகியஏழு தெய்வங்கள் மீது வாரத்தில் ஒவ்வொரு நாள் ஒரு பதிகம் என்ற கணக்கில் ஏழாயிரப் பிரபந்தம்'' என்ற நுலை இயற்றினார். இவர் இயற்றிய தனிப் பாடல்களும் திரட்டாக வெளியிடப்பட்டுள்ளன.
அருணகிரிநாதரே மறு பிறப்பில் தண்டபாணி சுவாமிகளாக அவதரித்துள்ளதாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணகிரி நாதர் புராணம் குருபரத்துவம் (தனது சுய சரிதம்) ஆகிய நூல்களில் சுவாமிகளே இக்கருத்தைத் தெரிவித் துள்ளார். தனது தலயாத்திரையின் போது தண்டபாணி சுவாமிகள் திருவான்மியூர் வந்து இங்குள்ள மருந்தீசர் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகம் 'சித்தாந்தம்' என்ற மாத இதழில் ( ஏப்ரல் 1966) வெளியிடப்பட்டுள்ளது.
திருவான்மியூர்ச் சிவபெருமான் பதிகம்
` (*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)(*)
திருவான்மியூர்ச் சிவனே சீதரனும் போற்றும்
ஒருவா! புலித்தோல் உடையாய் - மருவார்
கடுகை யணிவானே! நின் கண்ணருளால் என்றன்
இடுக்க ணெல்லாம் தீர்த்தருளின்றே.
அங்கமுற்றும் வெண்ணீ(று) அணியும் உன(து) அடியார்பால்
வெங்கலிநோய் மருவிலுன்றன் வியன்புகழ்கோர் இழிவன்றோ
பங்கமில் சீர் தென்னகைப் பதியுடையான் உயிர்போல்வாய்
செங்கண் விடைப்பரி யூர்வாய்! திருவான்மியூர்ச் சிவனே.--(1)
மௌலந் தோட்புரவலர்தம் வாழ்வினையும் மதியார்தாம்
எவ்வ முறக்காணிலும் சற்(று)மிரங்காதல் முறைதானோ?
பௌவவிடம் உண்டோனே! பரமாய பண்ணவனே!
செவ்வரிக் கண் உமைபங்கா! திருவான்மியூர்ச் சிவனே.---(2)
இருக்கு முதலாய மறை ஈரிரண்டும் ஏத்தரிதாப்
பெருக்கும் உன்றன் புகழ்சிறிது பேசும்நலம் பெறுவோனே?
மருக்கமழ் பூங்கொன்றை யணிவார் சடையில் மதிவைத்தாய்!
திருக் கொழியத் தடுத்தள்வாய்! திருவான்மியூர்ச் சிவனே.--(3)
நாவேறுமவள் கேள்வன் நடுத்தலையில் பலிகொள்வாய்
பாவேறப் புனைவார்க்குப் பரிசளித்த விதம் யாதோ?
தாவேறும் வல்லவுணர் தமக்கும் அருள்வானே!
சேவேறும் பெருமானே! திருவன்மியூர்ச் சிவனே.--(4)
புத்தர் முதற்பகர்கின்ற புலைச் சமயத்தினர் முன்னென்
சித்தமொல்கித் தளராமற் திருவருள் வாழ்வடையோனே?
மத்தமெருக் காத்தி தும்பை வன்னிமுதற் சென்னியிற்கொள்
சித்தனே! ஈடில்புகழ்த் திருவான்மியூர்ச் சிவனே.---(5)
புணராமுலை மின்னார் பொய்ப்போக மயல்கொண்டு
நாணாமற் றிருவேற்கு நலம்சிறி(து) ஈந்தருள்வாயோ?
ஆணாதி ஒருமூன்று ஆகியன்றும் ஆகானே!
சேணாடர் பணிகொள்ளும் திருவான்மியூர்ச் சிவனே..(6)
கரியவனும் காணாநின் கழல்பாடிக் கசிந்துருகா(து)
உரியவினைப் போகத்தூ(டு) உழல்வேனும் உய்வேனோ?
கிரியினை வில்லெனக் கொண்டு கிளர் ஒளிப்புன்னகை தன்னால்
திரிபுரம் நீரெனச் செய்தாய்! திருவன்மியூர்ச் சிவனே!.--(7)
மிகப்புகழ்ப் பார்த்தன் வில்லடிக்கு விறல்வாளி
அக்கணத்தன்(று) அருள்செய்தாய்! அடியேனுக் கிரங்காயோ?
முக்கணுடைப் பெம்மானே! முவருக்கும் முதலானாய்!
திக்கடங்க உணர்சீலத் திருவான்மியூர்ச் சிவனே!.--(8)
அத்திமுகத்தினன் செவ்வேள் ஆகும் இருவரைப் பெற்றாய்!
நந்தியுனைப் போற்றிசைக்கும் நாயடியற்(கு) இரங்காயோ?
பத்திவலைப் படல் கூறிப் பணிந்தானுக்(கு) அருள் செய்தாய்!
சித்தியடு முத்தி நல்கும் திருவன்மியூர்ச் சிவ·னே.=.--(9)
நால்வருக்களுக்கு அருள்செய்த நலம் கேட்டு நண்ணியுன்றன்
பால்வரும் என்றனக்கான பரிசின்னெ தரவேண்டும்!
கோல்வனப்புக் கண்ணளைக்குல விடைமேற் கூடவைத்தாய்
சேல்வள நீர்வயல் காட்டும் திருவான்மியூர்ச் சிவனே..--(10)
செல்வமலி தருபான்மைத் திருவாமியூர்ச் சிவன்பால்
நல்வரம் பெற்றுய்வ தெண்ணி நறுந்தமிழ்த் தென்மலய மெனும்
கல்வரைப்பால் அவிர்கின்ற கழைவனத்தோன் கழறுமிலை
சொல்வதெனிற் துணிவுற்றோர் துயர்சிறிதும் தோயாரே!..(11)
ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்
அன்புடன் வெ.சுப்பிரமணியன், ஓம்.
ஆனைமலை யோக நரசிம்மர் குடைவரைக் கோயில்
4 years ago
மறுமொழிகள்
0 comments to "வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்"
Post a Comment