சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்

0 மறுமொழிகள்




 

சித்தர் வாக்கில் பழமொழிகள்.


 

 ஓம்

சித்தர் பழமொழிகள்.

சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை அன்பர் சி.எஸ். முருகேசன் தொகுத்தளித்திருக்கிறார்.

  1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
  2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
  3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
  4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
  5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
  6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்
1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா  அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன  பிரியும், பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

பட்டினத்தார் திருப்பாடல் திரட்டு
--------------------------------------------------
கோயில் திரு அகவல்--1.
~~~~~~~~~~~~~~~~~
நினைமின் மனனே! நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க!

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்.

அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன வுவப்பாம்
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், நினைக் கொன்றன.


ஓம். அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.









 

மறுமொழிகள்

0 comments to "சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES