மும்பை வாழ் ஏழைத் தமிழர்தம் குழந்தைகள் தமிழ் வழியில் கல்விபயில மும்பை மாநகராட்சி வாய்ப்பு அளித்து வருவதற்கு நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரத்தில், தற்போது 8-ம் வகுப்பை தமிழ் வழியில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி வருத்தமளிக்கிறது.
மும்பை பெருநகரில் தமிழர்கள் அதிகம். தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலிருந்தும் - படித்தவர், படிக்காதவர் இரு தரப்பிலும் - குறைந்தது ஒரு குடும்பம் அங்கே வாழ்கிறது. இவர்களில் வணிகம் செய்வோர், அலுவலகங்களில் பல நிலைகளில் வேலை பார்ப்போர் நீங்கலாக, பெரும்பகுதியினர் அன்றாட உழைப்பில் பிழைப்போர்.
தமிழ்நாட்டில் வாழ்கிறோம் என்ற கற்பிதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழர் மட்டுமே வாழும் இடங்கள் அங்கு உண்டு. நிறையச் சம்பாதிக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். ஆனால் ஏழைத் தமிழ்க் குழந்தைகள் படிக்க வாய்ப்புள்ள ஒரே இடம் மும்பை மாநகராட்சிப் பள்ளிகள். இவர்களுக்காக 48 தமிழ் வழிப் பள்ளிகள் உள்ளன. 15,000 குழந்தைகள் படிக்கின்றனர்.
எட்டாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வில் குஜராத்தி, கன்னட மொழிகளில் தேர்வு எழுத அனுமதி உள்ளபோது, தமிழுக்கு மட்டும் அனுமதியில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்குச் சென்ற இடமெல்லாம்... எதிர்ப்பு!
போதுமான ஆசிரியர், பாடப்புத்தகம் இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகக் கல்வி அலுவலர் சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லை. தற்போது மும்பை மாநகராட்சியில் பயிலும் குழந்தைகள், செலவு மிகுந்த ஆங்கில வழிக் கல்விக்கு மாற முடியாது. அடிப்படையில் அவர்கள் ஏழைகள். தற்போது படிப்பை தமிழ் வழியில் தொடர முடியாத சுமார் 800 குழந்தைகளுக்கு உதவிட தமிழக அரசு எந்த வகையிலாவது முயற்சிக்க வேண்டும்.
மத்திய ஆட்சியில் தொடர திமுகவின் ஆதரவை நம்பி இருக்கும் காங்கிரஸ் கட்சி மராட்டியத்தில் ஆட்சியில் இருப்பதால், தமிழக முதல்வரின் கோரிக்கையை நிச்சயம் தட்ட முடியாது.
மும்பைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள இன்னல், தொழில் காரணமாக மாநிலம் கடந்து, நாடு கடந்து செல்லும் தமிழர் அனைவருக்கும் உள்ளது. தமிழை மறக்காமல் இருக்கும் தமிழனைத் தமிழகம் மறந்துவிடுவது தொடர்கதையாக உள்ளது.
ஆங்கிலம் கற்க விரும்பும் அயல்மொழி மாணவர்களுக்காக இங்கிலாந்து அரசு வெளியிடும் இலக்கண நூல்கள், மொழிப் பயிற்சி நூல்கள் நிறைய. அதேபோன்று பிரஞ்சு மொழி, கலாசாரம், நுண்கலையை வளர்த்தெடுக்க தனிஅமைப்பு உள்ளது. அவர்கள் உண்மையாகவே அதற்காகப் பாடுபடுகிறார்கள். தங்கள் மொழியைக் கற்கும் அயல்மொழியினருக்காக எளிய கற்பித்தல் முறை, கற்றல் கருவிகள் அனைத்தையும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றியுள்ளனர்.
ஆனால் நமக்கோ, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் வம்சாவளியினருக்கும் தமிழைச் சொல்லித் தரவே வழியில்லை. இதன் விளைவாக, வெளிமாநிலம், வெளிநாடு வாழ் தமிழனின் குழந்தைகள் தமிழை மறக்கின்றனர். தென்ஆப்பிரிக்காவிலும், மொரீஷியஸிலும் தமிழ் வம்சாவளியினர் தேவாரம், திருவாசகத்தை ஆங்கில எழுத்தில் எழுதி, பிழையான தமிழ் உச்சரிப்புடன் பாடி வரும் அவலம் இதற்கு ஒரு சான்று.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்தம் குழந்தைகள் தடையின்றித் தமிழ் பயில, முடிந்தால் தமிழ் வழியில் பயில, ஆதரவான சூழலை, கற்றலுக்கான தொழில்நுட்ப வசதிகளை தமிழக அரசுதான் உருவாக்க வேண்டும்.
தமிழர் தூங்கும் பின்னிரவில் திரைப்பாடல்களை, திரைப்படங்களை ஒளிபரப்பும் ஊடகங்கள், அந்நேரத்தில் விழித்திருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தமிழ்மொழிப் பயிற்சி வகுப்புகளை ஒளிபரப்ப தமிழக அரசு நிபந்தனை விதிக்கலாம். இதனால் உறுதியாக ஒரு நன்மை உண்டு - ஆங்கிலம் கலவாத தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் உலகின் பிற பகுதிகளிலாவது பல்கிப் பெருகும்.
நன்றி: தினமணி - தலையங்கம்
மும்பைக்கு தமிழ்ப் பாட புத்தகம் தரத் தயார்:- கருணாநிதி கடிதம்
மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் 8-ம் வகுப்பில் தமிழிலேயே தேர்வு எழுத தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இப்பிரச்னை குறித்து ஜூன் 26-ம் தேதி "தினமணி" நாளிதழில் தலையங்கம் வெளியாகி இருந்தது. அதைப் படித்த முதல்வர் உடனடியாக இதில் பரிகார நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை(27/6/08) எழுதிய கடிதம்:
மும்பை மாநகராட்சி சார்பில் 8 மொழிகளில் தொடக்க கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ் மொழியிலும் தொடக்க கல்வி பயிற்றுவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் 48 பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைந்துவருகின்றனர்.
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை 8-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுமாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் குஜராத்தி, கன்னட மாணவர்கள் அவர்கள் தாய்மொழியிலேயே 8-ம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.
இந்த முடிவுக்கு சில நிர்வாகக் காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் தமிழில் படித்த மாணவர்கள் 8-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்வு எழுத நேர்வதால், அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் மன அழுத்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
மாணவர்களின் தாய்மொழியில் தொடக்கக் கல்வி அளிப்பது சிறந்த முயற்சி. அதை நீங்கள் தொடர வேண்டும். தமிழில் பயிற்றுவிக்க ஆசிரியர்கள், புத்தகங்கள் தேவைப்பட்டால் மும்பை மாநகராட்சிக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது.
தமிழ் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை தமிழில் பயிற்றுவிப்பதைத் தொடர வேண்டும். இந்த விஷயத்தில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு உதவும் வகையில் நல்ல முடிவை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி: தினமணி - தமிழகம்
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago